Shankararamsubramaniyan writes about Sundararamaswami’s thoughts
_________________________________________________________________________________________
படைப்பு ரீதியாகவும் தனிப்பட்ட வகையிலும் மனம் சோர்ந்திருக்கும் போதும் சுயவிழிப்பை இழந்திருக்கும் வேளைகளிலும் சுந்தர ராமசாமியின் கட்டுரைகள், செய்யவேண்டிய வேலைகள் என்னவென்பதைத் தெளிவூட்டுவதாக எனக்கு எப்போதும் இருந்துள்ளன. எழுத்தாளன் தன்னைப் பற்றியும் தன் படைப்பு குறித்தும் கொண்டிருக்கும் கற்பனைக்கும் உண்மைக்கும் இடையிலான பல பாவனைகளை அவரது எழுத்துகள் எப்போதும் நிர்தாட்சண்யமாக உடைக்க முயல்பவை. நட்பு வேறு, நன்றியறிதல் வேறு, நேசம் வேறு, விமர்சன உணர்வு வேறு என்பதைத் தொடர்ந்து நினைவூட்டுபவையாக அவரது முன்னுரைகளும் கட்டுரைகளும் திகழ்கின்றன. எப்படியான உறவிலும் விமர்சன உணர்வையும், எதார்த்த உணர்வையும் தக்கவைத்துக் கொள்வதற்கு படைப்புசார்ந்து மட்டுமின்றி வாழ்க்கை சார்ந்தும் நமக்குத் தொடர்ந்து போதமூட்டி வருபவை சுந்தர ராமசாமியின் எழுத்துகள்.
அவரது இளம்வயதில் எழுதிய முதல் நாவலான ‘ஒரு புளிய மரத்தின் கதை’க்கு அவர் எழுதிய முன்னுரை, அதற்கு மிகச்சிறந்த உதாரணம். திராவிட இயக்கத்தின் அரசியல், கலை, கலாசார வெளிப்பாடுகள் மிகவும் படாடோபமாகவும், மிகைக்கூச்சல்களுடனும், உணர்வுச்சத்துடனும் வெளிப்பட்டு நம் வெகுஜனக் கலாசாரத்தையே மயக்கி வைத்திருந்த காலத்தில் எழுதப்பட்ட எதிர்வினையென்றே இதைச் சொல்லலாம். அத்துடன் சமூக மாற்றமும் புரட்சியும் குறுகிய காலத்தில் முளைத்துப் பிரசவிக்கும் கருப்பைகளாக இலக்கியத்தைப் பார்த்த முற்போக்குகளுக்கும் இந்த முன்னுரையில் பதில் உள்ளது. கலைஞன் என்பவன் மகத்தான புனிதன் என்று நிறுவ விரும்புபவர்களுடனும் அவர் நிற்கவில்லை.
“தமிழ் இலக்கியத்தின் நாவல் மரபைத் திசைதிருப்பிவிட வேண்டு மென்றோ, உரு,உத்தி இத்யாதிகளில் மேல்நாட்டுக் களஞ்சியத்திலிருந்து கொஞ்சம்கொள்ளையடித்துத்தான் தீருவது என்று ஆசைப்பட்டோ, திட்டம் வகுத்தோ எழுதியநாவல் அல்ல இது. தமிழ் அன்னைக்கு இதோ ஒரு புதிய ஆபரணம் என்றுஎண்ணியும் இதை எழுதவில்லை. எந்தக் கலைஞனும் தன் மொழியில்இல்லாததைத் தேடி அளிக்கவோ, இடைவெளிகளை நிரப்பவோ, இலக்கியவளர்ச்சிக்குத் தோள் கொடுக்கவோ, மொழிக்குச் செழுமை யூட்டவோஎழுதுவதில்லை. நவநவமாய் ஆபரணங்களைச் செய்து அன்னையின் கழுத்தில்சூட்டுவது அல்ல, தன் கழுத்திலேயே மாட்டிக்கொண்டு அழகு பார்க்கவே அவனுக்குஆசை. கலைஞனின் சமூகப் பொறுப்புகளும் பொதுநல உணர்ச்சிகளும் பெரிதும்மிகைப்படுத்தப்பட்டுவிட்ட காலம் இது. அவன் எந்த அளவுக்குச் சுயநலக்காரன்,திமிர்பிடித்தவன், அரசாங்க அமைப்பின் எதிரி, அனைவரையும் திரணமெனமதிக்கும் அகங்காரி, சகோதரத் தொழிலாளிகள்மீது தீராத பொறாமை உணர்ச்சியைஅடைகாத்து வருபவன், சிலவேளைகளில் எப்படி மனிதனிலும் கடைமனிதன்அவன் – இவை எல்லாம் மறந்துவிட்ட பாவனை காட்டும் காலம் இது. வெகுளிகளில்அவன் அக்கிரகண்ணியன். அவனால் சொந்தம் பாராட்ட முடியாத அர்ச்சனைகள்சொரியப்படுகிறபோது அதையும் அவன் கேட்டுக்கொண்டுதான் இருப்பான்.ஆமோதிக்க, உண்மை உணர்ச்சி அவனை உறுத்தும். மறுக்க, அவனுடையபுகழாசை விடாது. விமர்சகர்களுக்கு வேட்டைதான். காண ஆசைப்படுவதையெல்லாம் கண்டுவிட்டதாகவே சொல்லிவிடலாம். ஆட்சேபணைஇல்லை.”
“கலைஞனின் சமூகப் பொறுப்புகளும் பொதுநல உணர்ச்சிகளும் பெரிதும்மிகைப்படுத்தப்பட்டுவிட்ட காலம் இது.” என்று சுந்தர ராமசாமி எழுதிய காலம் 1966. ஆனால் இந்தக் கூற்று தற்காலத்துக்கும் மிகுவும் பொருத்தமுடையதாகவே இருக்கிறது. முகநூல் பதிவுகள், புத்தக வெளியீட்டு விழாக்கள், புத்தகங்களுக்கு எழுதப்படும் அட்டைக் குறிப்புகள், முன்னுரைகள் என சுயபெருமிதமும், மிகையுணர்ச்சியும், அசட்டுத்தனங்களும், பொய்களும், கோஷங்களும் தீவிரமான பாவங்களுடன் புழங்கும் காலம் இது. ஒரு பதிப்பகத்திலிருந்து எனக்கு அவ்வப்போது அனுப்பப்படும் நூல்களை மிகுந்த பயம் கொண்டே திறப்பேன். அந்தப் பதிப்பகத்தின் உரிமையாளர் தனது அத்தனைப் புத்தகங்களின் ‘ப்ளர்ப்’ குறிப்பையும் மார்பில் வைத்துக் கொண்டு எழுதுகிறாரோ என்று தோன்றும். ‘கண்ணுக்குள் உன்னை வைத்தேன் கண்ணம்மா’ என்ற பாடல் எனக்கு ஞாபகம் வரும்.
‘நேத்து ராத்திரி யம்மா’ திரைப்படப் பாடலின் அதே மலின விரகம் சற்று இலக்கியத்தனமாக நவீனகவிதைகளில் எழுதப்படுகின்றன. அவை அகப்பாடல்களின் நீட்சியாக முன்னணி எழுத்தாளர்களால் உச்சிமுகரப்படுகின்றன. பெண் குழந்தைகள் பிறக்கும் வார்டுகளில் மூத்த கவிஞர்கள் அந்தக் குழந்தைகள் எழுதப்போகும் கவிதைத் தொகுப்புக்கு முன்னுரையளிக்க ரோஜாவோடு காத்திருக்கின்றனர்.
இடைநிலை, சிறுபத்திரிகை எழுத்துகள், படைப்புகளின் மொழி பாலுறவு மற்றும் அதிகாரத்திற்கான ரகசியக் கடிதங்களாக இருக்கின்றன. விடுதிகளின் வரவேற்பறை உரையாடல் மற்றும் ஐபிஎல் மைதானங்களில் ஆடும் சீர் லீடர்களின் சல்லாபங்களைப் போல மொழியை மாற்றியிருக்கிறோம். புத்தக வெளியீட்டு விழாக்களில் பகிரப்படும் வாசகங்கள் எதுவும் அதற்குத் தொடர்புடைய படைப்புகள் சார்ந்தது இல்லை. வேறுவேறு ரகசியங்கள் கிசுகிசுப்பாகப் பகிரப்படும் இடம் அது. ராஜா ஜட்டி கூட அணியாமல் ஊர்வலம் வருகிறார் என்பதைச் சொல்லும் ஒரு உண்மையுணர்ச்சி கொண்ட குழந்தையைக் கூட தெருவில் பார்க்க முடிவதில்லை. பகுத்தறிவும் மெய்மைக்கான தேடலும்தான் அனைத்துப் படைப்புகளுக்கும் அடிப்படை என்பதை மீண்டும் உரக்கச் சொல்லவேண்டிய நிலைமை இது. மானமும் அறிவும் மனிதருக்கு அழகு என்ற பெரியாரின் வாசகத்தை இன்னும் வேறுவகையில் நினைவூட்ட வேண்டியவர்களாக உள்ளோம்.
இத்தகைய பின்னணியில் தான் சுந்தர ராமசாமி, 1964-ம் ஆண்டிலிருந்து இறப்பதற்கு முந்தைய வருடம் வரை மொழிபெயர்த்த 101 கவிதைகளைப் பார்க்க வேண்டும். தொலைவிலிருக்கும் கவிதைகள் என்பதுதான் அத்தொகுப்பின் பெயர். அதற்கு அவர் எழுதிய முன்னுரையின் தலைப்பு ‘இப்படித்தான் மொழிபெயர்த்தேன்’. சம்பிரதாயக் கல்வி, ஆங்கிலப்புலமை இல்லாமல் அவர் கவிதைகளை எப்படி மொழிபெயர்க்க ஆரம்பித்தார் என்பது தொடங்கி, முதல் கவிதைகளை க.நா.சு நடத்திய இலக்கிய வட்டத்துக்கு அனுப்பி வைத்ததையும் அவர் நம்மிடம் பகிர்ந்துகொள்கிறார். க.நா.சுவின் மேல் நட்பும் மதிப்பும் கொண்டிருந்தாலும், ஆங்கிலமூலத்தை அனுப்பி வைத்ததாகவும் அதை அவர் ஒப்பிட்டுப் பார்த்தாரா என்று தெரியவில்லை என்ற சந்தேகத்தையும் முன்வைக்கிறார். க.நா.சுவின் விட்டேற்றி இயல்பையும் சொல்லிவிடுகிறார். பிரமிளுக்கு நன்றி சொல்லும் போது இருவருக்கிடையிலிருந்த கசப்பைப் பதிவுசெய்கிறார். கவிதை மொழிபெயர்ப்பு தொடர்பாக தனக்கிருந்த சந்தேகங்கள், கற்பிதங்கள், தெளிவுகள் ஆகியவற்றை காலவாரியாக இந்த முன்னுரையில் தொகுக்க விரும்பும் சுந்தர ராமசாமி, தான் மொழிபெயர்த்த கவிதைகளின் உள்ளடக்கம், குணம், உலகப்பார்வை குறித்து எதையும் பகிரவில்லை. ஆனால் அதற்குத்தான் அவர் மொழிபெயர்த்த 101 கவிதைகள் உள்ளனவே.
சிறுகதை, நாவல், கட்டுரை போன்ற நவீனத்தமிழின் அனைத்து வடிவங்களிலும் குறிப்பிடத்தகுந்த சாதனையாளராக சுந்தர ராமசாமி மீது எனக்கு மதிப்பு இருந்தாலும் புதுக்கவிதை என்னும் வடிவம் சார்ந்து அவரை எனக்கு விசேஷமாகச் சொல்ல முடியவில்லை. புதுக்கவிதை என்னும் வடிவம் மற்றும் சாத்தியங்களைக் கடைசிவரை நம்பிக்கையோடு பரிசீலித்துப் பார்த்த முன்னோடி அவர். அனுபவம், வெளிப்பாடு, நம்பிக்கைகள், வடிவம் சார்ந்த உடைப்புகளோ கொந்தளிப்புகளோ சுயமிழத்தல்களோ இல்லாத எளிய அழகுப்பொருட்கள் அவை. சுந்தர ராமசாமி என்ற எழுத்தாளன் மற்றும் கருத்தாளனின் சுயம் முனைந்து தெரியும் அழகியல் பூர்வமான சிந்தனைத் தெறிப்புகள்.
ஆனால் இதற்கு நேர்மாறாக, தமிழ் புதுக்கவிதை உலகம் அடைய வேண்டிய பல்லுயிர்த்தன்மை குறித்து சுந்தர ராமசாமி கண்ட கனவுகளென அவர் மொழிபெயர்த்த கவிதைகளைக் கூறலாம். தனது படைப்புகளுக்கு உறை போடுவதல்ல, தனது படைப்புகளையும் கேள்விக்கு உள்ளாக்குவதற்குத் தான் தனது விமர்சனங்கள் பயன்படவேண்டும் என்று அவர் எழுதியிருப்பதை அவரது மொழிபெயர்ப்புக் கவிதைகளுக்கும் பொருத்தலாம். சுந்தர ராமசாமி கவிதைகளில் பெரும்பாலும் தென்படாத நிலவியல், வாழ்க்கைப்பார்வை, காமம் சார் சித்தரிப்புகள், விலங்குகள், மொழி வெளிப்பாடுகள், உணர்வுச்சங்கள், உக்கிரம், இரக்கமின்மை, எள்ளில் கொண்ட கவிதைகள் இவை. 2016-ல் இத்தொகுப்பைப் படிக்கும்போதும், இதிலுள்ள பாதிக்கும் மேற்பட்ட கவிதைகள் இன்றைய கவிதை வாசகனையும் கவிஞனையும் பாதிக்கும் வண்ணம் இருக்கின்றன.
சீன மொழியில் வாங் சியன் என்பவர் எழுதிய கவிதையின் மொழிபெயர்ப்பு இது…
புதிய மனைவி
மூன்றாவது நாள் அவள் சமையலறைக்குள் புகுந்தாள் தன் கைகளைக் கழுவிக்கொண்டாள் கஞ்சி தயாரித்தாள் தன் மாமியாரின் ருசி பற்றி ஏதும் அறியாத நிலையில் நாத்தியிடம் ருசி பார்க்கச் சொன்னாள்.
இந்தக் கவிதையில் வரும் ‘புதிய மனைவி’ யாக சுந்தர ராமசாமியை நாம் திறந்து பார்க்கமுடியும். அவர் தனது இளம்வயதில் மொழிபெயர்த்த ‘ஒரு பட்சியின் படம் வரைய’ கவிதை எழுத்து கவிதையின் பழைய தன்மையுடன், தொனியுடன் உள்ளது. 2004-ல் மொழிபெயர்த்த கவிதை தற்காலத் தமிழ் கவிதை பெற்ற அழகுகளையும் அதுகொண்டிருக்கும் கனவுகளையும் சேர்த்துப் பொதிந்து வைத்துள்ளது.
சுந்தர ராமசாமி தான் தயாரித்த கஞ்சியை மாமியாருக்கு ருசி பார்க்கத் தரவில்லை. ஒருவித தயக்கமும் அவருக்கு இருக்கிறது. நாத்தியிடம் ருசி பார்க்கச் சொல்கிறார்.
சுந்தர ராமசாமி முதலில் மொழிபெயர்த்த கவிதை 1964-ல் ழாக் ப்ரெவருடையது. ஒரு புதிய தலைமுறைக் கவிஞர்களைப் பாதித்த ழாக் ப்ரெவர், வெ.ஸ்ரீராமின் மொழிபெயர்ப்பில் க்ரியாவின் ‘சொற்கள்’ தொகுப்பு வழியாக அறிமுகமானது 2000-ல் தான்.
(அம்ருதாவில் வெளிவரும் ‘நவகுஞ்சரம்’ பத்திக்காக எழுதப்பட்டது)
____________________________________________________________________________________________