தருமு சிவராம் என்றழைக்கப்பட்ட பிரமிள் 1939ஆம் ஆண்டு ஏப்ரல் 20ஆம் தேதி இலங்கை திரிகோணமலையில் பிறந்தவர். எழுத்தாளர் சி.சு.செல்லப்பா நடத்திய ‘எழுத்து’ இதழ் வாயிலாக கவிஞராக அறிமுகமானார். தனது முப்பது வயதுகளில் தமிழகம் வந்த அவர் 6.1.1997இல் வேலூர் அருகே கரடிக்குடியில் காலமானார். நவீனத் தமிழ் இலக்கியத்தில் பாரதி, புதுமைப்பித்தன் வரிசையில் தோன்றிய மகத்தான ஆளுமை.
சித்தர் என்றும் சிறியர் என்றும்
அறியொணாத சீவர்காள்!
சித்தர் இங்கு இருந்தபோது
பித்தர் என்று எண்ணுவீர்.
– சிவவாக்கியர் பாடல்
20-ம் நூற்றாண்டு தமிழ் இலக்கிய வெளியில் பாரதி, புதுமைப்பித்தனுக்குப் பிறகு கவிதை, சிறுகதை, விமர்சனம், ஆன்மிக எழுத்து இவற்றுடன் ஓவியம், சிற்பக் கலை போன்றவற்றிலும் அபூர்வமான மேதைமையை வெளிப்படுத்தியவர் பிரமிள். அவர் வாழும் காலத்திலும், அவர் மறைந்த பிறகும் அவரது சாதனைகள் தீவிர வாசகர்களால்கூட அதிகம் உணரப்படாத நிலையே இங்குள்ளது.
தமிழ்ப் புதுக்கவிதை இயக்கம், ந. பிச்சமூர்த்தி, கு.ப.ரா., வல்லிக்கண்ணன் போன்ற உரைநடைக்காரர்களால் மந்தமாகவும் விசாரத்தன்மையுடனும், பழைமையை முற்றிலும் கைவிடாத இயல்புடனும் முன்னெடுக்கப்பட்டுக்கொண்டிருந்த காலகட்டம் அது. அப்போது, தமிழ்க் கவிதை மரபின் சமத்காரத்தைக் கைவிடாமல், விமர்சன உத்வேகத்தோடு எழுந்த குரல் பிரமிளுடையது. கற்பனையின் அதீதம், தர்க்கத்தால் உடைக்க முடியாத உண்மை மற்றும் சப்த ஒழுங்குடன் வெளிப்பட்ட கவிதைகள் அவருடையவை. மிகையுணர்ச்சி மற்றும் அசட்டுத்தனத்தை முற்றிலும் துறந்த வைர ஊசியின் கூர்மை கொண்ட மொழியின் அசல் திருப்பங்கள்.
அறிவைத் தேடிச்செல்பவர், வாழ்வின் மெய்மை தேடிச்செல்லும் விமர்சனக் கூர்மை கொண்ட எவரும் சந்திக்க நேரும் இருட்டை புதுமைப்பித்தன், ‘செல்லும் வழி இருட்டு/ செல்லும் மனம் இருட்டு/ சிந்தை அறிவினிலும் / தனி இருட்டு’ என்று உணர்ந்தார். பிரமிளோ, ‘ஆருமற்ற சூனியமாய்/ தளமற்ற பெருவெளியாய்/ கூரையற்று நிற்பது என் இல்!’ என்று தன் வீடு எதுவென்று தேடித் தொடங்குகிறார்.
சிறுகதைகள், குறுநாவல்கள்
பிரமிள் படைப்புகளில் அதிகம் கண்டுகொள்ளப்படாதவை அவருடைய சிறுகதைகளும் குறுநாவல்களும்தான். அவரது புனைவுகளில் சம்பிரதாயமான கதைத் தன்மையோ, நிகழ்ச்சி
களின் அடுக்குகளோ இல்லை. கதாபாத்திரங்கள், நிகழ்ச்சிகள் வாயிலாகக் கதைப் பிரச்சினையின் மூலாதாரத்தைத் தேடும் சிந்தனை மற்றும் விமர்சனக் கோலங்கள் என்று அவற்றை வகுக்க முடியும். பௌதீக யதார்த்தத்தைத் தாண்டிய ரகசியங்களைத் தொட விழையும் மர்மக் கதைகள் அவருடையவை. இயற்கையிலும், மனித உறவுகளிலும் இருக்கும் நல்லிணக்கம்குறித்தும் அவை மீறப்படும்போது கிடைக்கும் தண்டனைகளையும் அவர் ‘கருடனூர் ரிப்போர்ட்’ போன்ற கதைகளில் வெளிப்படுத்துகிறார்.
அவரது சிறந்த கதைத் தொடரில் ஒன்றான லங்காபுரி, லங்காபுரி ரகஸ்யம், லங்காபுரி ராஜா, தந்தம் கதைகளை எடுத்துக்கொள்வோம். ஒட்டுமொத்தமாக இந்தக் கதைகளைப் படித்தால் ஒரு நாவலின் ஒருமையை இக்கதைகளில் காண முடியும். இலங்கையில் சிங்கள இனவாதம் தமிழ் மக்களின் மீதான ஒடுக்குமுறையாக மாறத் தொடங்கும் காலகட்டத்தில் நடக்கும் கதைகள்தாம் இவை.
இரு சமூகங்கள் நல்லிணக்கமாக இருந்த சூழலும், இனவாதத்தின் நுழைவும், பரஸ்பர மோதல்களுக்குப் பிறகு இருபக்கமும் வெளிப்படும் மனிதாபிமானப் பண்புகளையும் இக்கதைகள் லங்காபுரி என்ற வனப் பிரதேசத்தில் வசிக்கும் மனிதர்கள் சார்ந்து பேசுகின்றன. இந்தக் கதைகளில் மனித இணக்கத்தை ஒரு யானைப் படிமமாக மாற்றியுள்ளார் பிரமிள். நல்லிணக்கம் இருக்கும்போது, இயற்கையின் பேருருவாக வணங்கப்படும் நிலையில் இருந்த யானை, சமூகங்கள் பிளக்கப்படும்போது தன் இனத்தைக் காப்பாற்ற மூர்க்கமாகப் போராடி இறக்கிறது.
இந்தக் கதைகளில் மக்களால் வணங்கப்படும் தெய்வமாக வரும் ராஜா என்ற பெயருள்ள யானையைத் தட்டையான படிமமாக மட்டும் இல்லாமல், கதையின் முடிவில் மெய்மையின் விகாச உருவமாக மாற்றிவிடுகிறார் பிரமிள். இந்தக் கதைகளில் சிங்கள இனவாதம் மட்டும் அல்ல, மூர்க்கம் கொள்ள இருந்த தமிழ் இனவாதமும் விமர்சிக்கப்படுகிறது.
சத்தியத்தைத் தேடியவர்
பிரமிள், அடிப்படையில் சத்தியத்தைத் தேடிய ஆன்மிகவாதி. தனது நிறைவேறாத ஆன்மிக இலக்கின், குறைபட்ட சாத்தியமாகவே தனது படைப்புகளைப் பார்த்திருக்கிறார். மனோலயமே அவருக்கு சிகர சாதனையாகத் தெரிந்திருக்கிறது. படைப்பை வெளியிடும் மனநிலையைச் சலனமயமானது என்றும் நிச்சலனமே லட்சியமாக இருப்பதாகவும் அவரது முதல் கவிதைத் தொகுதியான ‘கைப்பிடியளவு கடல்’முன்னுரையில் தெரிவிக்கிறார்.
தன் வாழ்நாள் முழுக்க மெய்மையைத் தேடி சாது அப்பாத்துரை, ஜே.கிருஷ்ணமூர்த்தி, ராம் சுரத்குமார் போன்றவர்களிடம் தொடர்ந்து உரையாடலை நிகழ்த்தியிருக்கிறார். நம் தெருக்களில் பிச்சைக்காரர்களாகத் தோற்றமளிக்கும் சாதாரணர்களோடு சாதாரணர்களாக வாழ்க்கை நடத்தும் மறைஞானிகளைப் பற்றி, அவர்களுடைய அன்றாட வாழ்க்கையைக் கவனித்து, உரையாடி தன் அனுபவங்களை எழுதியுள்ளார்.
‘பீச் ஸ்டேசன் அவ்வையார்’, ‘மிலிட்டரி சித்தர்’ஆகிய கட்டுரைகள் இங்குள்ள அவைதீக ஞானத்தேடலை வெளிப்படுத்தும் படைப்புகளாகும். காந்தி, அம்பேத்கர், பெரியார் போன்றவர்களின் சமூக, அரசியல் பங்களிப்புகளை இந்திய அறிவியக்க, விடுதலை மரபின் தொடர்ச்சியாகவே பார்த்தவர் பிரமிள். திராவிட இயக்கத்தையும், அதன் அரசியலையும் வெறும் சீரழிவாகவே விமர்சகர்கள் வெங்கட் சாமிநாதன் போன்றோர் விமர்சித்தபோது, அதன் சாதக அம்சங்களை பிரமிள் சுயமாக அவதானித்து மதிப்பிட்டார்.
பிரமிள் எழுதிய ஆன்மிக எழுத்துகள் குழந்தைகளும் படிக்கும் அளவு எளிமை கொண்டவை. ஒரு எழுத்தாளன் வேறுவேறு ஒழுங்குகளில் வெவ்வேறு விதமான மொழி வெளியீட்டை நிகழ்த்த முடியும் என்பதற்கான எடுத்துக்காட்டு அவர். திருக்கோணமலையைச் சேர்ந்த இல்லறத் துறவியான சாது அப்பாத்துரை குறித்து எழுதப்பட்ட தியானதாரா, தமிழில் எழுதப்பட்ட சிறந்த மெய்யியல், வாழ்க்கை நெறி நூல். சாது அப்பாத்துரை போதிக்கும் எளிய வாழ்க்கை அறங்களையும் வழிகாட்டுதல்களையும் கொண்ட சிறுபடைப்பு அது.
இந்திய, தமிழ் பகுத்தறிவு மரபைச் சேர்ந்த ஆன்மிகவாதி என்று அவரை வகுக்கலாம். இலங்கையில் இனவாதம் தலைதூக்கும்போது, இந்தியாவின் பன்மைத்தன்மையால் ஈர்க்கப்படும்- லங்காபுரி கதையில் வரும்- பெரியவரான சார்ளிஸ் உடவத்தவைப் போல பிரமிளை இந்தியாவும் தமிழகமும் ஈர்த்திருக்க வேண்டும். மனிதனின் விடுதலையை வேறெந்த உலகிலும் அவர் தேடவில்லை.
இந்த பூமியில் மட்டும்தான் மனிதர்கள் இருக்கிறார்கள். இங்கேயே பிரச்சினை தீர்க்கப்பட வேண்டும் என்ற விவேகத்தை நம்பியவர் அவர். தான் உன்னதமாகக் கொண்டாடிய மௌனி போன்ற பெரும் படைப்பாளிகளைக் கூட, அவர்களிடம் சாதிய உணர்வு தலைதூக்கியபோது, வைதிகம் நுழையும் இடத்தில் படைப்பூக்கம் விடைபெறும் என்று விமரிசித்தவர் பிரமிள்.
மெய்யான வீடு தேடி…
இலங்கையில் உள்ள திருக்கோணமலையில் 1939-ம் ஆண்டு ஏப்ரல் 20-ம் தேதி பிறந்த பிரமிள், தனது தாயின் மரணத்துக்குப் பிறகு 1970-களில் சென்னைக்கு வந்தார். பிரான்ஸுக்குச் சென்று ஓவியராகவும் எழுத்தாளராகவும் வாழ்வதற்கான இலக்கில் இங்கே வந்து பின்பு தங்கிவிட்டார். எங்கோ ஒரு இடத்தில் பிறந்து, ஏதோ ஒரு இலக்கில் தமிழகம் வந்து, படைப்புகளைத் தவிர சின்ன லௌகீக சௌகரியங்
கள், அங்கீகாரங்களைக்கூட அடையாமல் தனியனாக வேலூர் அருகில் உள்ள கரடிக்குடியில் 1997-ல் மறைந்துபோனார் பிரமிள். அவர் வாழும் காலத்தில் தனது படைப்புகளைச் சிறுநூல்களாக வெளியிடுவதற்கே மிகுந்த சிரமங்களை எதிர்கொண்டார். கால. சுப்ரமணியம் என்ற ஒரு தனிநபர் இயக்கத்தாலேயே இவரது படைப்புகள் இன்று முழுமையாக வாசகர்கள் படிப்பதற்குப் புத்தகங்களாகக் கிடைத்துள்ளன.
வாழ்நாள் முழுவதும் அவர் ஒரு மெய்யான வீட்டைத் தேடி அலைந்திருக்கிறார். ‘வீடுகள் யாவும் வாயிளித்து ஆபாசமான பசியைப் போன்று/ நிற்கக் கண்டவனாயினும்,/ வீடு/ ஒன்றுண்டெனவே எண்ணுகிறேன்./ இந்தச் சுவர்களினுள் விழுங்கப்பட அல்ல./ கருவாகி/ புனிதத் தசைகளில் ஊறும் ரத்தச் சுனையைக் காண’(சுவர்கள் என்ற கவிதையிருந்து…) என்று ஏங்கியிருக்கிறார் பிரமிள்.
தமிழ் நவீன இலக்கியத்தின் முதல்நிலை சாதனையாளர்களான புதுமைப்பித்தன், பிரமிள் இருவரின் விமர்சனப் பார்வைவழி தற்போதைய படைப்பிலக்கியச் சூழலைப் பார்த்தால் அவர்களது லட்சியங்களிலிருந்து எவ்வளவு விலகிவிட்டோம் என்ற ஏமாற்றமே மிஞ்சுகிறது.
கவிதை, சிறுகதை, நாவல்கள் ஒரு பழக்கமாக, தொழில்முனைவாக, தொடர்பு வலைப்பின்னலைக் கட்டியெழுப்புவதாக, தொண்டுநிறுவனச் செயல்பாடுகளை ஒத்ததாக மாறியிருக்கின்றன. தாம் வாழும் காலத்தில் நிறுவனங்கள், மத, சமூகக் கேந்திரங்களுக்கு மட்டுமல்ல, அந்தந்தக் காலகட்டத்தில் ஆதிக்கமாக இருந்த சிந்தனைகளுக்குக் கூட சேவகம் செய்யாதவர்கள் அவர்கள்.
லட்சியம் இல்லாத இடத்தில் விமர்சனம் இல்லை. அந்த வகையில் தமிழ் நவீன இலக்கியத்தைப் பொறுத்தவரை பிரமிள் லட்சியப் படிமம்.
நன்றி : தி இந்து (தமிழ்)