புகைப்படங்கள் நம் ஆயுளைக் குறைக்கும் : ஷங்கர்ராமசுப்ரமணியன்

Shankarramasubramaniyan’s article about documentations shankar 28.4

______________________________________________________________________________________________________

 

shankar's photography articleஇந்தியர்கள், வரலாற்றையும் வரலாற்று நிகழ்வுகளையும் பண்பாட்டையும் அந்தந்தக் காலத்திய பொருள்சார் கலாசாரத்தையும், ஆவணப்படுத்துவதில் ஈடுபாடில்லாதவர்கள் என்ற குற்றச்சாட்டு தொடர்ந்து சொல்லப்பட்டு வருகிறது. அந்தக் குற்றச்சாட்டில் பெரும்பகுதி, நமது நவீன காலப் பார்வையில் உண்மையாக இருப்பினும், எல்லாவற்றையும் ஆவணப்படுத்தி என்ன ஆகப்போகிறது என்ற விட்டேத்தியாக இருந்த நம் முன்னோர்களின் விவேக ஞானத்தையும் நாம் இப்போது பரிசீலித்தே ஆகவேண்டும்.

 

பிறப்பு முதல் மரணம் வரை ‘செல்ஃபி’ எடுக்கப்படும் காலகட்டத்தில் இருக்கிறோம். புகைப்படக் கருவிக்கு முன்னால் அரிதாக நின்றால்கூட ஆயுள் குறைந்துவிடும் என்று ஒரு நம்பிக்கை நம்மிடையே சில பத்தாண்டுகள் முன்புவரை நிலவியது. அது இப்போதைய தலைமுறையினருக்கு வினோதமாகப்படலாம். தோன்றியது எல்லாவற்றையும் சொல்லவோ எழுதவோ வேண்டியதில்லை; தோன்றுவது எல்லாவற்றையும் படம்பிடிக்க வேண்டியதில்லை; செய்வதெல்லாவற்றையும் பதியவோ ஆவணப்படுத்தவோ வேண்டியதில்லை; ஒரு காலத்தில் நமக்கு இப்படியான ஒரு விவேகம் இருந்திருக்கிறது. இந்த நடைமுறை விவேகத்தின் வெளிப்பாடாகவும் இதுபோன்ற‘மூடநம்பிக்கைகளை’ கருதமுடியும்.

 

இந்தியா போன்ற காலனிய நாடுகளில் நம் மக்களை ஆவணப்படுத்துவதற்கும் அதன் வழியாக தங்கள் காலனிய நிர்வாகத்தை செயல்படுத்தும் காரியமாகவும்தான் புகைப்படமெடுப்பதும் ஆவணப்படுத்துவதும் இங்கே தொடங்கியிருக்கியது. ஆங்கிலேயர் காலத்தில் ஆந்திர மாநிலத்தில் வாழும் சமூகக் குழுவினரையும் அவர்களது பழக்கவழக்கங்களையும் புரிந்துகொள்வதற்காக கல்வியறிவு பெற்ற தெலுங்கர்களை நாவல் எழுதச் சொல்லி அரசே ஊக்கப்படுத்தியும் உள்ளது.

 

ஒரு பண்பாடு எப்போது அதிகமாக ஆவணப்படுத்தப்படுகிறதோ, அந்தப் பண்பாடு,அதுதொடர்பான மக்களிலிருந்து அன்னியப்பட்டு அரிதான வஸ்துவாகி வருவதையும் 21ம் நூற்றாண்டில் பார்க்கிறோம். புலிகளை வேட்டையாடி,உடல்களைப் பாடம் செய்து அந்தஸ்துக்கு மாட்டிவைத்து, புகைப்படமுமெடுத்த பண்பாடுதான் புலிகளை அரிதான விலங்குகளாகவும் மாற்றிவைத்துள்ளது. புலிகளை வேட்டையாடிய அதே மனோபாவம்தான் ‘சேவ் டைகர்’திட்டங்களையும் வனத்துக்கு வெளியே செயல்படுத்தி வருகிறது.

 

திருநெல்வேலி அல்வா செய்யும் முறை தொடங்கி, அதன் ருசியின் தனித்துவம் ஆராய்வது வரை, அதிகபட்சமாக திருநெல்வேலி அல்வா ஊடகங்களில் செய்திகளாகவும் பேட்டிகளாகவும் படங்களாகவும் ஆவணப்படுத்தப்பட்டுள்ளது.‘ஒரிஜினல் திருநெல்வேலி அல்வா’ என்ற பெயரில் கர்நாடகாவின் ஹோஸ்பேட் வரை வேன் வைத்து திருநெல்வேலி அல்வா தற்போது விற்கப்படுகிறது. திருநெல்வேலி அல்வா தன்னையே நகலெடுத்துக் கொண்டது போல பல்கிப் பெருகியதையடுத்து, திருநெல்வேலி அல்வாவின் ருசி குறையத் தொடங்கியதை திருநெல்வேலிக்காரனாக நான் அறிவேன். திருநெல்வேலியின் பூர்விக ருசி கொண்ட அல்வாவைத் தேடமுடியாதபடி பெயர் பலகைகள் திருநெல்வேலி அல்வாவை மூடியுள்ளன.

 

திருநெல்வேலி டவுண் மார்க்கெட்டில் உள்ள வைரமாளிகையில் தயாராகும் ருசியான புரோட்டாவை, சென்னை ரஷ்யன் கல்ச்சுரல் சென்டரில் விற்கத்தொடங்கும் போது அதன் எளிமையும் ருசியும் பறிபோனதை உணர்ந்தவன் நான். கோவில்பட்டி கடலை மிட்டாயும் இனிப்புச்சேவும் சென்னை நட்சத்திர விடுதியில் கிடைக்கும்போது அங்கே சில சிறிய தொழில்மனைகள் மூடப்படுகின்றன.

 

நம் அன்றாட உபயோகத்தில் மிகச் சமீபத்தில் பயன்படுத்திய அம்மியும் உலக்கைகளும் நாட்டுப்புறவியல் அருங்காட்சியகத்தில் இடம்பெறும் போது அவை அன்றாடப் பயன்பாட்டிலிருந்து அன்னியப்பட்டு கிராமங்களிலிருந்தே அப்பொருட்கள் தொலைந்துபோய் விடுகின்றன. வெளிநாட்டவர்களுக்கு நமது ஊர் வழிகாட்டியே ‘டிரெடிஷனல் ஸ்டோன் கிரைண்டர்ஸ்’ என்று விளக்கிக் கொண்டிருக்கலாம்.

 

கடந்த பதினைந்து ஆண்டுகளுக்கும் மேலாக, நான் குடியிருக்கும் வேளச்சேரிக்கு அருகிலுள்ள பள்ளிக்கரணை கடந்த சில ஆண்டுகளாக சுற்றுப்புறச்சூழல் ஆர்வலர்கள் வழியாக பெரும் ஊடக கவனத்தை எட்டியுள்ளது. 2000க்கு முன்பு வேளச்சேரிக்கு வந்தபோது, தாம்பரம் போகும் வழியில் குப்பைமண்டி அடிக்கடி தீப்பிடித்து புகை நாற்றம் அடிக்கும் இடமாகத்தான் பள்ளிக்கரணையை நான் கடந்திருக்கிறேன். சமீபத்தில் அது சதுப்பு நிலப்பகுதி என்பதும் இயற்கையின் அருங்கொடைகளில் ஒன்று என்றும், விதவிதமான பறவைகளின் இருப்பிடமென்றும் தெரியவந்தது.

 

இன்னும் குப்பைகள் சூழவே பள்ளிக்கரணை ஏரி இருந்தாலும், பறவைகளைப் பார்க்க வருபவர்களுக்கென்று குடில்களும் பறவைகளின் ஓவியங்கள் மற்றும் அவற்றின் பெயர் மற்றும் உயிரியல் பெயருடன் கூடிய தட்டிகளும் வைக்கப்பட்டுள்ளன.

 

க்ரியா வெளியிட்ட ‘பறவைகள்’ என்ற வழிகாட்டி நூலின் உதவியுடன் நானும் என் மகளும் சில சந்தர்ப்பங்களில் அங்கு சென்று பறவைகளை அடையாளம் கண்டிருக்கிறோம். இப்போது அங்கே மேயும் நீலத்தாழைக் கோழி எனக்கு மிகவும் அறிமுகம். சீக்கிரத்தில் எனது கவிதையிலும் அந்தப் பறவை இடம்பெறலாம். (ஜாக்கிரதை நீலத்தாழைக் கோழியே).

 

கடந்த ஓராண்டாக அரை டிரவுசருடன் ஞாயிற்றுக்கிழமைகளில், ஒரு கைமுழமளவு நீளத்தில் இருக்கும் டெலி லென்ஸ் காமிராக்களுடன் பள்ளிக்கரணை சதுப்புப் பகுதிகளில் படமெடுக்க வருவதைப் பார்க்கிறேன். அவர்களது புதிய ஆர்வத்தைப் புரிந்துகொள்ள முடியாமல் பூநாரைகள் குப்பைகளுக்குள்ளும் சகதியான நீரிலும் நீந்திக்கொண்டிருக்கின்றன. பள்ளிக்கரணை சதுப்புநிலத்தின் பரப்பளவு மற்றும் அதற்கு வந்துசெல்லும்,அங்கேயே வசிக்கும் பறவைகளின் எண்ணிக்கையைவிட புகைப்படங்கள் அதிகம் எடுக்கப்பட்டிருக்கும். நீர் வரை இறங்கி அந்த அரைடிரவுசர்கள் பறவைகளை எண்கோணங்களிலும் படம் எடுக்கிறார்கள்.

 

வனங்களுக்குத் துப்பாக்கிகளோடு போகும் மனோபாவத்திற்கும் புகைப்படக்கருவிகளோடு போவதற்கும் தொடர்பு உண்டு. அது தெரியாமலேயே அவர்கள் படம் எடுக்கிறார்கள். அந்த அப்பாவிப் பறவைகளும் என்ன செய்வதென்று தெரியாமல் இடம்பெறுகின்றன. நாம் புகைப்படமெடுக்கத் தொடங்கும்போது இருந்த உயிருக்கும் புகைப்படத்தில் பதிவான உயிருக்கும் வித்தியாசம் இருக்கிறது. நாம் புகைப்படம் எடுக்கும் வனத்துக்கும் புகைப்படத்தில் பதிவான பிறகு இருக்கும் வனத்துக்கும் வித்தியாசம் உள்ளது. நாம் புகைப்படம் எடுக்கும் ஒரு இனக்குழுவுக்கும் புகைப்படமெடுத்த பிறகு பதிவான இனக்குழுவுக்கும் வித்தியாசம் உள்ளது. ஒரு தொல்சடங்கைப் புகைப்படமெடுக்கும் போதும், அது பதிவான பிறகும் அந்தத் தொல்சடங்கின் ஏதோ பிரத்யேக அம்சம் பறிபோய்விடுகிறது. ஆஸ்திரேலியப் பூர்வகுடிகள் இப்போது புகைப்படங்களாக மட்டுமே எஞ்சியுள்ளனர்.

 

ராஜஸ்தான், கோவா போன்ற சுற்றுலாப் பிரதேசங்களுக்குச் செல்லும்போது கொஞ்சம் நுண்ணுணர்வு உள்ளவர்களும் ஒன்றை உணரமுடியும். அந்த இடத்தையே பூர்விகமாகக் கொண்ட மனிதர்கள் சுற்றுலா வருபவர்களை சந்தோஷப்படுத்துவதற்காக அவர்கள் மூலம் பெறும் வருவாய்க்காக தங்கள் சொந்தக் கலாசார அடையாளங்களையே விற்பவர்களாக மாற்றப்பட்டிருப்பதை உணர்ந்திருக்கலாம். ராஜஸ்தானில் உள்ள ஜோத்பூர் அரண்மனையைச் சுற்றி காவலர்களாக வேலைக்கு இருப்பவர்கள் ராஜஸ்தானின் பாரம்பரிய உடையை அணிந்து சிரமப்பட்டுக் கொண்டிருப்பதைக் காணமுடியும். சிறுநீர் கழிப்பதுகூட அத்தனை சிரமம் அந்த உடையில். ஒரு சுற்றுலாத் தலம், பார்ப்பவர்கள் மற்றும் புகைப்படக்கருவிகளால் கண்டு கண்டு சலிப்பையடைகிறது.

 

புகைப்படங்களாகவும் வீடியோக்களாகவும் பதியப்படும் ஒவ்வொரு முறையும் பள்ளிக்கரணை சதுப்பு நிலத்தின் பரப்பளவும், அதிலுள்ள பறவைகளும் கொஞ்சகொஞ்சமாக குறைகின்றன. நவீன தர்க்கத்திற்கு இந்தக் கூற்று ஏற்புடையதாக இல்லாமல் இருக்கலாம். ஆனால் உண்மை. புகைப்படங்கள் ஆயுளைக் குறைக்கும்.

 

(அம்ருதா மார்ச் இதழில் வெளியான கட்டுரை இது)

 

______________________________________________________________________________________________________________