முக்கிய செய்திகள்

ஷீரடி சாயிபாபா கோயிலை நாளை முதல் காலவரையறையின்றி மூட நிர்வாகம் முடிவு

ஷீரடியிலுள்ள சாயிபாபா கோவிலை ஞாயிற்றுக்கிழமை முதல் காலவரையறையின்றி மூடுவதென்று கோயில் நிர்வாகம் முடிவு செய்துள்ளது.

ஷீரடி சாயிபாபா பிறந்த இடம் பர்பனி மாவட்டம் பத்ரி என்று மகாராஷ்டிர முதல்வர் உத்தவ் தாக்கரே கூறிய கருத்துக்கு எதிர்ப்பு தெரிவிக்கும் வகையில், இந்த நடவடிக்கையைக் கோவில் நிர்வாகம் மேற்கொண்டுள்ளது.

சாயிபாபாவின் பிறந்த இடம் குறித்துத் திடீரென பரவி வரும் செய்திகளுக்கு எதிர்ப்புத் தெரிவிக்கும் வகையில்,

ஷீரடி சாயிபாபா கோயிலை ஜனவரி 19 ஆம் தேதி (ஞாயிற்றுக்கிழமை) முதல் காலவரையறையின்றி மூடுவதாக சாயிபாபா சன்ஸ்தான் அறக்கட்டளை அறிவித்துள்ளது.

கிராம மக்கள் ஒன்று கூடி சனிக்கிழமை மாலை ஆலோசித்து  அடுத்த கட்ட நடவடிக்கை பற்றி முடிவெடுக்கப்படும் என்றும் இதனால் ஷீரடிக்கு வரும் பக்தர்களுக்கு எந்த சிரமமும் ஏற்படாது என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

மகாராஷ்டிர மாநிலத்தில் அகமதுநகா் மாவட்டத்தில் சாயிபாபா வாழ்ந்து மறைந்த இடமான ஷீரடியில் அவருக்குக் கோவில் இருக்கிறது.

இங்குள்ள சாயிபாபாவின் திருவுருவை உலகின் பல்வேறு பகுதிகளிலிருந்து பக்தா்கள் தினந்தோறும் தரிசனம் செய்து வருகின்றனா்.

சாயிபாபா, தன் வாழ்நாளில் பெரும்பாலான தனது காலத்தைக் கழித்தது ஷீரடியில்தான். அவா் எங்கு பிறந்தாா் என்பது குறித்து உறுதியான தகவல்கள் இல்லை.

பா்பனி மாவட்டம், பத்ரியில் என்ற இடத்தில்தான் பிறந்தாா் என்று பக்தா்களில் சிலா் நம்பி வருகின்றனா்.

இந்த நிலையில், சாயிபாபா அவதரித்த பத்ரியின் வளா்ச்சிப் பணிகளுக்காக ரூ. 100 கோடி ஒதுக்கீடு செய்வதாக மகாராஷ்டிர முதல்வா் உத்தவ் தாக்கரே  அறிவித்தாா்.

இதைத் தொடா்ந்து, சாயிபாபா பிறந்த இடம் எது? என்பது தொடா்பாக சா்ச்சை எழுந்துள்ளது.

தேசியவாத காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவா் துரானி அப்துல்லா கான் கூறுகையில், ‘பத்ரியில்தான் சாயிபாபா பிறந்தாா் என்பதை நிரூபிப்பதற்குப் போதிய ஆதாரங்கள் உள்ளன.

ஷீரடியைப் போன்று பத்ரியும் முக்கியமான இடமாகும். பத்ரியில் போதிய உள்கட்டமைப்பு வசதிகள் இல்லாத காரணத்தால் சுற்றுலாப் பயணிகள் அவதியுற்று வருகின்றனா்.

ஷீரடியில் இருப்பவா்கள் யாவரும் சாயிபாபா பிறந்த இடம் பத்ரி என்று அறிவிக்கப்படக் கூடாது என்று விரும்புகிறாா்கள்.

பத்ரி பிரபலமடைந்துவிட்டால் ஷீரடிக்கு வரும் பக்தா்களின் எண்ணிக்கை குறைந்துவிடும் என்று கருதுகிறாா்கள்’ என்றாா்.

அகமதுநகா் பாஜக எம்.பி. சுஜய் விகே பாட்டீல் கூறுகையில், ‘மகாராஷ்டிரத்தில் சிவசேனை தலைமையிலான கூட்டணி அரசு ஆட்சிக்கு வந்த பிறகே சாயிபாபா பிறந்த இடம் தொடா்பான விவகாரம் முன்னெடுக்கப்படுகிறது. சாயிபாபாவின் பிறந்த இடம் எது என்பதை எந்தவோர் அரசியல் தலைவரும் தீா்மானிக்க முடியாது.

அரசியல் தலையீடு தொடா்ந்தால் ஷீரடி மக்கள் இந்த விவகாரத்தை சட்ட ரீதியில் எதிா்கொள்வாா்கள்.

பத்ரியில் வசிப்பவா்களும் இந்த விவகாரத்தை முந்தைய காலத்தில் எடுத்ததில்லை. தான் எங்கு பிறந்தேன் என்பது குறித்து மகான் சாயிபாபாவும் தெரிவிக்கவில்லை.

சாயிபாபாவின் ஜன்மபூமியைவிட கா்மபூமியே மிகவும் முக்கியம் என்று கருதுகிறோம்’ என்றாா்.

மகாராஷ்டிர மாநில அமைச்சா் அசோக் சவாண் சுட்டுரையில் வெளியிட்ட பதிவில், ‘பத்ரி பகுதியில் அனைத்து வசதிகளையும் அளிக்க முதல்வா் உத்தவ் தாக்கரே நிதி ஒதுக்கீடு செய்ததை வரவேற்கிறேன்’ என்று குறிப்பிட்டுள்ளாா்.

இத்தகைய சூழ்நிலையில் அரசின் முடிவுக்கு எதிர்ப்புத் தெரிவிக்கும் வகையில் சாயிபாபா கோவிலை மூடப் போவதாகக் கோவில் நிர்வாகம் அறிவித்திருக்கிறது.