முக்கிய செய்திகள்

சிங்கப்பூரில் கரோனா தொற்று 14,423 ஆக உயர்வு..

சிங்கப்பூரில் கரோனா வைரஸ் பாதிப்பு எண்ணிக்கை 14,423 ஆக அதிகரித்துள்ளது.

இதுகுறித்து சிங்கப்பூர் சுகாதாரத் துறை அமைச்சகம் கூறும்போது, “சிங்கப்பூரில் திங்கட்கிழமையன்று 799 பேருக்கு கரோனா வைரஸ் பாதிப்பு உறுதி செய்யப்பட்டது.

இதனைத் தொடர்ந்து கரோனா வைரஸால் பாதிக்கப்பட்டவர்களின் மொத்த எண்ணிக்கை 14,423 ஆக அதிகரித்துள்ளது” என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

கரோனா தொற்றுக்கு சிங்கப்பூரில் 12 பேர் இதுவரை உயிரிழந்துள்ளனர்

தெற்காசிய நாடுகளிலிருந்து மூன்று லட்சத்துக்கும் மேற்பட்ட குறைவான ஊதியம் பெறும் தொழிலாளர்கள் சிங்கப்பூரில் வேலை செய்து வருகின்றனர். பெரும்பாலும் கட்டுமானம் மற்றும் உணவு விடுதிகளில் அவர்கள் வேலை செய்து வருகின்றனர்.

இத்தகைய ஊழியர்கள் மிக நெருக்கடியான தங்கும் விடுதிகளில் கூட்டமாக வசித்து வருகின்றனர்.

இந்நிலையில் அவர்களிடத்தில் கரோனா தொற்று அதிகரித்துள்ளது. சிங்கப்பூரில் கரோனா தொற்றைக் கட்டுப்படுத்தும் நோக்கில் ஜூன் 1 ஆம் தேதி வரை ஊரடங்கு நீட்டிக்கப்பட்டுள்ளது.

சீனாவில் இருந்து பரவிய கரோனா வைரஸ் தொற்று 200க்கும் மேற்பட்ட நாடுகளில் கடுமையான பாதிப்பை ஏற்படுத்தியுள்ளது.

இவற்றில் அமெரிக்கா, இத்தாலி, ஸ்பெயின் ஆகிய நாடுகள் கடுமையான பாதிப்பைச் சந்தித்துள்ளன.

உலகம் முழுவதும் கரோனா வைரஸால் பாதிக்கப்பட்டவர்கள் எண்ணிக்கை 30,04,116 ஆக அதிகரித்துள்ளது. 2,07,118 பேர் பலியாகியுள்ளனர். 8,82,770 பேர் குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர்.