சிங்கப்பூர் பொதுத் தேர்தல் 2020: ஜூலை 10 -ந் தேதி வாக்குப்பதிவு..

சிங்கப்பூரில் அடுத்த மாதம் 10ஆம் தேதி (ஜூலை 10) பொதுத் தேர்தல் நடைபெறும் என்று அறிவிக்கப்பட்டு உள்ளது.
கொரோனா கிருமித்தொற்று காரணமாக இந்த பொதுத்தேர்தலில் நடைமுறைகள் மாறுபட்டிருக்கும்.

சிங்கப்பூரின் 13வது நாடாளுமன்றம் கலைக்கப்படுவதாக அதிபர் ஹலிமா யாக்கோப் இன்று (ஜூன் 23) அறிவித்ததுடன், தேர்தல் ஆணையையும் வெளியிட்டார்.

அடுத்த செவ்வாய்க்கிழமை (ஜூன் 30) வேட்பு தாக்கல் தினமாக அறிவிக்கப்பட்டுள்ளது.

9 நாட்கள் பிரசாரத்துக்குப் பிறகு, தேர்தலுக்கு முந்தைய நாளான ஜூலை 9 அன்று பிரசாரம் ஏதும் இருக்காது.

தேர்தல் நடைபெறும் ஜூலை 10ஆம் தேதி பொது விடுமுறையாக அறிவிக்கப்பட்டுள்ளது.

சிங்கப்பூரில் 9 வேட்பு மனு தாக்கல் நிலையங்கள் இருக்கும்.

இன்று மாலை 4 மணிக்கு மக்களிடையே தொலைக்காட்சி வழியாக உரையாற்றிய, பிரதமர் லீ சியன் லூங், கொவிட்-19 நிலைமை ஓரளவுக்கு நிலைத்தன்மையை எட்டியுள்ளதால் பொதுத் தேர்தலை இப்போது நடத்த முடிவு செய்ததாகக் குறிப்பிட்டார்.

தேர்தலுக்குப் பிறகு, கொரோனா கிருமித்தொற்றைக் கையாளுதல், நாட்டின் பொருளியல், வேலைகள் போன்றவற்றை உள்ளடக்கிய தேச முன்னேற்றம் தொடர்பான அம்சங்களில் புதிய அரசாங்கம் கவனம் செலுத்த முடியும் என்றும் அதன் தொடர்பாக எடுக்கப்பட வேண்டிய கடினமான முடிவுகளையும் மேற்கொள்ள முடியும் என்றும் பிரதமர் குறிப்பிட்டார்.

தேர்ந்தெடுக்கப்படும் அரசாங்கம் எடுக்கும் முக்கியமான முடிவுகள் மக்களின் வாழ்க்கை, வாழ்வாதாரங்கள், சிங்கப்பூரின் எதிர்காலம் போன்றவற்றில் தாக்கத்தை ஏற்படுத்தும் என்றும் அவர் குறிப்பிட்டார்.

முந்தைய காலங்களைப் போலவே எதிர்வரும் தேர்தலிலும் மக்கள் செயல் கட்சி அனைத்து தொகுதிகளிலும் போட்டியிடும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

சிங்கப்பூரில் 17 குழுத்தொகுதிகள், 14 தனித்தொகுதிகள் என மொத்தம் 93 தொகுதிகள் உள்ளன.

கொவிட்-19 அச்சுறுத்தல் காரணமாக 5 பேருக்கு மேல் கூடக்கூடாது என்ற விதிமுறை நடப்பில் இருப்பதால், கடந்த காலங்களைப்போல அதிகமாக கூட்டம் கூடும் தேர்தல் பிரசாரங்கள் இடம்பெற முடியாது.

தொகுதிகளுக்குச் செல்லும் அரசியல் கட்சிகளும் இந்த நடைமுறையைப் பின்பற்ற வேண்டும்.

அவை சமூக ஊடகங்கள், இணையம் வழியாக பிரசாரங்களை மேற்கொள்ளலாம்.

தேசிய தொலைக்காட்சியில் கட்சிகள் மக்களிடையே தங்களது கருத்துகளை முன்வைக்க வாய்ப்புகள் இருக்கும்.

தேர்தல் நாளில் வாக்காளர்கள் பாதுகாப்பான முறையில் வாக்களிப்பதை உறுதி செய்ய தேர்தல் துறை பல்வேறு நடவடிக்கைகளை வெளியிடும்.

வாக்களிப்பு நிலையங்களின் எண்ணிக்கை 880லிருந்து 1,100ஆக உயர்த்தப்படுவதுடன் ஒவ்வொருவரும் வாக்களிக்க குறிப்பிட்ட 2 மணி நேரம் வழங்கப்படுவது, வாக்களிப்போருக்கு ஒரு முறை மட்டும் பயன்படுத்தக்கூடிய கையுறைகள் வழங்கப்படுவது போன்றவையும் இடம்பெறும்.

கொவிட்-19ஆல் தனிமைப்படுத்தப்பட்டிருப்போர் வாக்களிப்பது தொடர்பான விவரங்கள் பின்னர் வெளியிடப்படும்.

இவ்வாண்டு 2,653,942 வாக்காளர்கள் தங்களது வாக்குகளைச் செலுத்துவர் என்று எதிர்பார்க்கப்படுகிறது. 2015ஆம் ஆண்டு தேர்தலில் வாக்காளர் எண்ணிக்கை 2,460,484 ஆக இருந்தது.

நாடாளுமன்றத்தில் குறைந்தபட்சம் 12 எதிர்க்கட்சி உறுப்பினர்கள் இருப்பர்.

எதிர்வரும் தேர்தலின் தலைமைத் தேர்தல் அதிகாரியாக திரு டான் மெங் டுய் இருப்பார். 2015ஆம் ஆண்டு தேர்தலின் தலைமைத் தேர்தல் அதிகாரியாக திரு இங் வாய் சூங் செயலாற்றினார் என்பது குறிப்பிடத்தக்கது.