இந்தியா- சிங்கப்பூர் இடையே ஒப்பந்தம்


இந்தியா- சிங்கப்பூர் இடையே கடற்படை தளவாடங்கள் குறித்த ஒத்துழைப்பு ஒப்பந்தத்தில் இரு நாட்டு பிரதமர்களும் கையெழுத்திட்டனர்.

பிரதமர் நரேந்திர மோடி இந்தோனேசியா, சிங்கப்பூர் நாடுகளில் அரசு முறை பயணம் மேற்கொண்டிருக்கிறார். கடந்த செவ்வாய்க்கிழமை, புதன்கிழமை இந்தோனேசியா சென்ற பிரதமர் நரேந்திர மோடிஅந்த நாட்டு அதிபர் ஜோகோ விடோடாவை சந்தித்துப் பேசினார். அப்போது இருநாடுகளிடையே 15 ஒப்பந்தங்கள் கையெழுத்தாகின.

பின்னர் சிங்கப்பூர் செல்லும் வழியில் மலேசிய தலைநகர் கோலாலம்பூருக்கு பிரதமர் மோடி சென்றார். அங்கு புதிதாக தேர்ந்தெடுக்கப்பட்ட பிரதமர் மகாதிர் முகமதுவை சந்தித்துப் பேசினார். அப்போது இருநாட்டு கலாச்சார, வர்த்தக உறவை மேம்படுத்துவது குறித்து இரு தலைவர்களும் ஆலோசனை நடத்தினர்.

மலேசியாவில் இருந்து நேற்று பிற்பகலில் சிங்கப்பூருக்கு மோடி சென்றார். அங்கு நேற்று மாலை நடந்த தொழிலதிபர்கள் மாநாட்டில் மோடியும், சிங்கப்பூர் பிரதமர் லீ சியங் லூங்கும் சந்தித்தனர். மாநாட்டில் இரு தலைவர்களும் உரையாற்றினர்.

இதனைத் தொடர்ந்து இன்று (வெள்ளிக்கிழமை) கடற்படை தளவாடங்கள் குறித்த ஒப்பந்தத்தில் இரு நாட்டு தலைவர்களும் கையெழுத்திட்டனர்.

இதுகுறித்து செய்தியாளர்கள் சந்திப்பில் லீ சியாங் லூங் பங்கேற்று பேசும்போது, ”எங்கள் பாதுகாப்பு உறவுகளை பலப்படுத்தியுள்ளோம், எங்கள் கடற்படை இன்று கடற்படை தளவாடங்கள் ஒத்துழைப்பு குறித்த ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டது.

புனேவில் விமான நிலையம் திட்டமிடல் தொடர்பாக பொருளாதார ஒத்துழைப்பை ஆராய சமீபத்தில் மகாராஷ்டிரா- சிங்கப்பூர் கூட்டுக் குழுவைத் நாங்கள் தொடங்கிவுள்ளோம்” என்றார்.

மேலும், முன்னதாக சிங்கப்பூர் அதிபர் அலுவலகமான இஸ்தனாவில் பிரதமர் மோடிக்கு சிறப்பான வரவேற்பு அளிக்கப்பட்டது.