தமிழகத்தில் புதிய முதலீடுகளைச் செய்ய சிங்கப்பூர் திட்டம்!

தமிழகத்தில் புதிய தொழில் முதலீடுகளைச் செய்ய சிங்கப்பூர் திட்டமிட்டிருப்பதாக அந்நாட்டின் தூதர் ராய் கோ தெரிவித்துள்ளார்.

 

சென்னையில் வெள்ளிக்கிழமை ஆளுநர் பன்வாரிலால் புரோஹித்தைச் சந்தித்த ராய் கோ, இந்தியாவின் அந்நிய வர்த்தகத்தில் 3.4 சதவீத பரிவர்த்தனையை சிங்கப்பூர் மேற்கொண்டு வருவதாக பெருமிதம் தெரிவித்ததாக ஆளுநர் மாளிகை வெளியிட்ட செய்திக்குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்தியாவுடன் சிங்கப்பூருக்கு நெருக்கமான வர்த்தக உறவு இருப்பதாகவும் அவர் தெரிவித்தார். குறிப்பாக தமிழகத்துடன் பண்பாட்டு ரீதியான நெருக்கம் கொண்ட நாடாக சிங்கப்பூர் இருப்பதாகவும், முதலீடு செய்ய ஏதுவான அம்சங்களையும், கட்டமைப்புகளையும் கொண்ட பகுதியாக தமிழகம் இருப்பதாகவும் அவர் தெரிவித்ததாக, ஆளுநர் மாளிகை வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. சிங்கப்பூரின் மக்கள் தொகையில் இந்தியர்கள் 9 சதவீதமாக உள்ளனர் என்றும், குறிப்பாக தமிழகம் மற்றும் கேரளாவைச் சேர்ந்தவர்களே சிங்கப்பூரில் அதிகம் வசிப்பதகாவும் ராய் கோ தெரிவித்துள்ளார். தமிழகத்துடன், கல்வி, சுற்றுலா, தொழில்நுட்பம் ஆகிய துறைகள் சார்ந்த புதிய புரிந்துணர்வு  ஒப்பந்தங்களை சிங்கப்பூர் மேற்கொள்ள இருப்பதாக ஆளுநர் பன்வாரிலால் புரோஹித் கூறியுள்ளார். இதுபோன்ற தகவல்கள் எல்லாம் முன்னர் தலைமைச் செயலகத்தில் இருந்து முதலமைச்சர் அறிவிப்பாகத்தான் வெளிவருவது வழக்கம். தற்போதெல்லாம் ஆளுநர் மாளிகைச் செய்திக்குறிப்பாக வெளிவருகிறது என்பதுதான் கவனத்துக்குரியது.

 

Singapore keen on starting new ventures in Tamil Nadu: Consul General Roy Kho