முக்கிய செய்திகள்

ஒற்றை நதி நீர் தீர்ப்பாயத்தால் தமிழ்நாட்டிற்கு பேராபத்து: டிடிவி தினகரன்..

காவிரி பிரச்சனையில் வஞ்சிக்கப்படும் தமிழகத்திற்கு ஒற்றை நதி நீர் தீர்ப்பாயத்தால் பேராபத்து காத்திருக்கிறது என்று அமமுக பொதுச்செயலாளர் டிடிவி தினகரன் எச்சரித்துள்ளார்.

அதுக்குறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியதாவது:-

நாடு முழுவதும் உள்ள நதி நீர் பிரச்சினைகளைத் தீர்க்க ஒரே நதிநீர் தீர்ப்பாயத்தைக் கொண்டு வர மத்திய அரசு முடிவெடுத்திருப்பதன் மூலம்,

ஏற்கனவே காவிரி பிரச்சனையில் வஞ்சிக்கப்படும் தமிழகம் மிகப்பெரிய பாதிப்பைச் சந்திக்கும் ஆபத்து ஏற்பட்டுள்ளது.

நாட்டின் பன்முகத் தன்மையை உடைத்து எல்லாவற்றையும் ஒன்றாக்க முயற்சிக்கும் மத்திய அரசு அடுத்ததாக ‘ஒரே நாடு; ஒரே தீர்ப்பாயம்’ என்பதைக் கையிலெடுத்துள்ளது.

இதற்கான சட்ட முன் வடிவுக்கு மத்திய அமைச்சரவை ஒப்புதல் கொடுத்திருப்பது பெரும் கவலையை ஏற்படுத்தி உள்ளது.

ஏனெனில் நாட்டில் வேறு எந்த நதி பிரச்சினைக்கும் இல்லாத இழுத்தடிப்பாக நீண்ட சட்டப் போராட்டத்திற்குப் பிறகே காவிரி பிரச்சினைக்காக தீர்ப்பாயம் (காவிரி நடுவர் மன்றம்) அமைக்கப்பட்டது.

பல ஆண்டுகால விசாரணைக்குப் பின்னர் நடுவர் மன்றம் வழங்கிய தீர்ப்பு, மத்திய அரசிதழில் வெளியான பிறகும் அதனைக் கர்நாடக அரசு ஒரு பொருட்டாக மதித்ததில்லை.

இது தொடர்பாக உச்சநீதிமன்றம் பிறப்பித்த உத்தரவுகளையோ, தீர்ப்புகளையோ கூட கர்நாடகா அவமதித்தே வருகிறது.

இதை எல்லாம் தட்டிக்கேட்டு காவிரியில் தமிழகத்திற்கு உரிமையான தண்ணீரைப் பெற்றுத் தர வேண்டிய மத்திய அரசுகள் எல்லா காலங்களிலும் வாக்கு வங்கி அரசியலுக்காக கர்நாடகாவுக்குச் சாதகமாகவே செயல்பட்டுக் கொண்டிருக்கின்றன. இதில் பா.ஜ.க, காங்கிரஸ் என்ற பேதமெல்லாம் இல்லை.

இந்தச் சூழலில் நாட்டிலுள்ள எல்லா நதிநீர் பிரச்சினைகளுக்கும் ஒரே தீர்ப்பாயம் என்பதை மத்திய அரசு கொண்டு வந்தால்,

அதனால் கடுமையாக பாதிக்கப்படுகிற மாநிலமாக தமிழகம் தான் இருக்கும். காவிரிநடுவர் மன்றம் உள்ளிட்ட எட்டு தீர்ப்பாயங்கள் செய்து வந்த வேலையை இனி ஒரே தீர்ப்பாயம் கவனிக்கும் என்று சொல்கிறபோது,

பெரிய அளவில் காலதாமதம் ஏற்படுவதற்கான வாய்ப்புகள் இருக்கின்றன.

ஏற்கனவே பல ஆண்டுகள் விசாரிக்கப்பட்டு தீர்ப்பு அளிக்கப்பட்ட பிரச்சினைகளை மீண்டும் முதலில் இருந்து ஆரம்பிப்பது என்பது பாதிக்கப்பட்ட மாநிலங்களுக்கு இழைக்கப்படுகிற அநீதியாக அமைந்துவிடும்.

அதிலும் காவிரி பிரச்சினையில் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ள தமிழகத்திற்கு அது பேரிடியாகிவிடும்.

எனவே மத்திய அரசு இந்த முடிவினை கைவிட்டு, உச்சநீதிமன்ற தீர்ப்பின்படி கர்நாடகாவிடம் இருந்து காவிரியில் தமிழகத்திற்குத் தண்ணீர் பெற்றுத் தருவதற்கான நடவடிக்கைகளை முதலில் மேற்கொள்ள வேண்டும்.

இதனை உறுதி செய்வதற்கான முயற்சிகளைத் தமிழ்நாட்டிலிருந்து சென்றிருக்கிற நாடாளுமன்ற உறுப்பினர்கள் மேற்கொள்ள வேண்டும்.

ஒற்றைத் தீர்ப்பாயத்தின் மூலம் தமிழகத்திற்கு ஏற்படப்போகும் ஆபத்துக்களை உணர்ந்து அதனைத் தடுப்பதற்கான நடவடிக்கைகளை பழனிச்சாமி அரசும் மேற்கொள்ள வேண்டும் என்று வலியுறுத்துகிறேன்.

இவ்வாறு டிடிவி தினகரன் கூறியுள்ளார்.