முக்கிய செய்திகள்

தனி மனுஷியாக பேருந்து மறிப்பு, மு.க.ஸ்டாலின் சந்திப்பு… நெகிழ்கிறார் தெய்வானை..


“82 ஆம் வருஷத்தில திமுகவுல சேர்ந்தேன். இப்ப வரைக்கும் ஒரே கட்சிதான்” எனப் பெருமை வழிய சொல்கிறார் தெய்வானை. காவிரி மேலாண்மை வாரியம் அமைக்க வலியுறுத்தி, கருத்து ஒருமித்த கட்சிகளை இணைத்து திமுக ஒருங்கிணைத்த முழு அடைப்பு நேற்று நடந்தது. சென்னை மெரினாவில் நடந்த மறியலில் மு.க.ஸ்டாலின், திருநாவுக்கரசர், திருமாவளவன் உள்ளிட்ட தலைவர்கள் கைது செய்யப்பட்டனர். தமிழகம் முழுவதும் கடைகள் அடைக்கப்பட்டன. பரபரப்பான கடை வீதிகள் வெறிச்சோடி கிடந்தன. சி.ஐ.டி.யூ., தொ.மு.ச., உள்ளிட்ட சில போக்குவரத்து சங்கங்கள் முழு அடைப்புக்கு ஆதரவு அளித்தாலும் அண்ணா தொழிற்சங்கம் பணிக்குச் செல்வதாக முடிவெடுத்திருந்தது. அதனால், குறிப்பிட்ட பேருந்துகள் ஓடின.

நேற்று காலை, ஆம்பூரில் இயங்கிய பேருந்தை தனி ஒருவராக, கட்சிக் கொடியுடன் சென்று மறித்தார் ஆம்பூர் 28 வார்டு மகளிர் அணி துணை செயலாளர் தெய்வானை. அவரின் இந்தச் செயல் வீடியோவாகப் பதிவு செய்யப்பட்டிருந்ததால், அது சமூக ஊடகத்தில் வேகமாகப் பரவியது. தொலைக்காட்சிகளிலும் அந்த வீடியோ ஒளிப்பரப்பாகியது. அது திமுக வின் செயல்தலைவர் மு.க.ஸ்டாலினின் பார்வைக்கும் சென்றதும், தெய்வானையை வாழ்த்துவதற்காக நேரில் அழைத்திருந்தார். அதற்காகச் சென்னை வந்திருந்தவரிடம் பேசினேன்.

“ஆம்பூர்தான் நான் பொறந்த ஊரு. ஓசூர்ல கல்யாணம் செய்துகொடுத்தாங்க. வீட்டுக்காரும் திமுகதான். இந்தி எழுத்து அழிப்புப் போராட்டத்துக்கெல்லாம் என் வீட்டுக்காரங்க போயிருக்காங்க. நானும் நிறைய மறியல், ஆர்ப்பாட்டம்னு கட்சிக்காகப் போயிருக்கேன். கலைஞர் மீட்டிங்ன்னா எங்கேயிருந்தாலும் போயிடுவேன். சாயந்திரம் ஆறு மணிக்கு மீட்டிங் ஆரம்பிக்கும்ன்னா, ஒரு மணி நேரம் முன்னாடியே போய் உட்கார்ந்திருவோம். கலைஞர் பேசறதைக் கேட்கிறது ரொம்பப் பிடிக்கும். மீட்டிங் முடிய ராத்திரி பன்னெண்டு, ஒண்ணுக்கூட ஆயிடும். இப்பெல்லாம் பத்து மணிக்கெல்லாம் கூட்டம் முடிஞ்சுடுது.” என்றவரிடம் நேற்று நடந்தவற்றைக் கேட்டேன்.
” எம் புள்ளைங்க ஓசூர்ல இருந்தாலும், நான் பொறந்த ஊருக்கே வந்துட்டேன். நேத்து காலையில, மறியலுக்காக வந்தேன். அனைத்துக் கட்சிக்காரங்களும் வரட்டும்னு காத்திட்டு இருந்தோம். அப்போ பார்த்து, ஒரு பஸ் வந்துச்சு, என்னடா இது காவிரிக்காக முழு அடைப்பு பண்ணின்னா இந்த அரசாங்கம் பஸ்ஸை ஓட்டுறாங்களேன்னு, கொடியைப் பிடிச்சிட்டுப் போய் குறுக்கே நின்னுட்டேன். டிரைவர் கீழே இறங்கினாதான் நகருவேன் சொன்னேன். அப்பறம், இந்த டிரிப் மட்டும் போய்ட்டு நிறுத்திடுவாங்கன்னு மத்தவங்க சொன்னதும்தான் விட்டேன். இதுமாதிரிதான் எப்பவும் செய்வோம். இதைக் கேள்விப்பட்டு தளபதி சந்திக்கக்கூப்பிடுவாருன்னு கொஞ்சம்கூட நினைக்கல.

இன்னிக்கு வந்து தளபதியைப் பார்த்தேன். நல்லா செயல்படறீங்கன்னு தளபதி வாழ்த்தினாரு. ரொம்ப சந்தோஷமா இருந்துச்சு. வேற ஏதும் பேச முடியாத அளவுக்குக் கூட்டம். கலைஞர் பேச்சைக் கேட்டு வளர்ந்தவங்க நாங்க. எம் புள்ளைங்களையும் கொள்கை மாறி, அம்மா ஒரு கட்சி, புள்ளைங்க ஒரு கட்சின்னு வேற எங்கேயும் போயிடக்கூடாதுன்னு சொல்லியே வளர்த்திருக்கேன். அவங்களும் திமுகவுலதான் இருக்காங்க. தளபதியைப் பார்த்திட்டேன். கலைஞர் ஐயாவைவும் பார்த்துடனும்னு விருப்பம். கூடிய சீக்கிரம் அதுவும் நடக்கும்னு நினைக்கிறேன்.” என்கிறார் நம்பிக்கையுடன்.
காவிரி மேலாண்மை வாரியம் அமைக்கக் கோரும் குரல் தமிழகத்தின் அனைத்துப் பகுதிகளிலும் உணர்வுபூர்வமாக வெளிப்பட்டு வருகிறது என்பதற்கு ஆம்பூர் தெய்வானை அவர்களின் செயல் ஓர் உதாரணம்.
நன்றி
விகடன்