சிறிது வெளிச்சம் : எழுத்தாளர் எஸ் .ராமகிருஷ்ணனின் சிறுகதை..


‘எட்வினா ஓ ப்ரேன்’ என்ற ஐரிஷ் பெண் எழுத்தாளர் ஒரு கதை எழுதியிருக்கிறார். கதையின் தலைப்பு, ‘ஒரே நம்பிக்கை’, ஆறு பெண் குழந்தைகளுக்குத் தந்தையான ஒரு மெக்கானிக், சாலை விபத்தில் இறந்துவிடுகிறான்.

அந்தக் குடும்பம் எந்த இழப்பீடும் கிடைக்காமல் தெருவில் நிற்கிறது. பெண்பிள்ளைகளை வைத்துக்கொண்டு என்ன செய்வது என்று புரியாமல், மெக்கானிக்கின் மனைவி சாரா, வீட்டு வேலைகள் செய்கிறாள். துணிக்குப் பூவேலை செய்து விற்கிறாள். ஓய்வே இல்லாமல் ஓடி ஓடி வேலை செய்கிறாள்.

ஒவ்வொரு திங்கட்கிழமையும் சாரா தன் பிள்ளைகளுடன் உள்ளூர் வங்கிக்குச் செல்வாள். வங்கியின் வரவேற்பு அறையில் பிள்ளைகளை உட்கார வைத்துவிட்டு, அவள் தனியே உள்ளே செல்வாள்.

சில நிமிடங்களில் தனக்குத் தேவையான பணத்தை எடுத்துக்கொண்டதாகச் சொல்லி பிள்ளைகளை வெளியே அழைத்துச் செல்வாள். இப்படிப் பல வருடங்கள். பிள்ளைகள் வளர்ந்து பெரியவர்கள் ஆகிறார்கள்.

ஒரு நாள், அந்த வீட்டின் மூத்த மகள் தன் அப்பாவின் சாவையும் அதில் இருந்து தன் அம்மா தங்களை எப்படி வளர்த்தாள் என்பதையும் ஒரு கதைபோல் எழுதி, பிரபலமான இதழ் ஒன்றுக்கு அனுப்பி வைக்கிறாள். அது பிரசுரமாகிறது. அந்த கதைக்கு 50 டாலர் பணம் கிடைக்கிறது.

அது, தன் முதல் சம்பாத்தியம் என்று சொல்லி, அம்மாவிடம் தனக்கென ஒரு வங்கிக் கணக்கைத் துவக்கச் சொல்கிறாள் மகள்.
தாய், மகள் இருவரும் வங்கிக்குப் போகிறார்கள். உள்ளே அம்மா மிகுந்த தயக்கத்துடன் மகளிடம் சொல்கிறாள், “எனக்கு
இந்த வங்கியில் ஒருபோதும் கணக்கு இருந்ததில்லை.

பணமில்லை என்று நீங்கள் நினைக்கக்கூடாது என்பதற்காக அடிக்கடி இந்த வங்கிக்கு உங்களை அழைத்து வருவேன்.

உங்களை வெளியே நிறுத்திவிட்டுத் தனியே உள்ளே சென்று வருவேன். அது உங்களிடம் நம்பிக்கை ஏற்படுத்துவதற்கான நாடகம். அதை நிஜம் என்று நீங்கள் நம்பினீர்கள். கையில் காசு இல்லாமல் கஷ்டப்படும்போது,

அதை நினைத்து நீங்கள் பயந்துவிடக்கூடாது என்பதற்காக அப்படிச் செய்தேன். ஏதாவது ஒரு நம்பிக்கையைப் பற்றிக்கொண்டுதான் வாழ்க்கை செல்கிறது.

படிப்பறிவு இல்லாத எனக்குத் தெரிந்த ஒரு நம்பிக்கை இதுதான். இன்று நீ எழுத்தாளராகி, ஒரு வங்கிக் கணக்கைத் துவக்கப் போகிறாய். சந்தோஷமாக இருக்கிறது” என்று வாய்விட்டு அழுதாள்.

அனைவரின் குடும்பமும் இப்படி ஏதோ ஒரு நம்பிக்கையை பற்றிக்கொண்டுதான் துளிர்த்து வருகிறது. கஷ்டத்தைவிடவும் அதை மூடி மறைப்பதுதான் பெருந்துயரம். அவமதிப்பு, வெறுப்பு என எத்தனையோ வலிகளைத் தாங்கிக்கொண்டு, வாழ்க்கையின் மீதான பற்றுடன் மனிதர்கள் .

நன்றி
எழுத்தாளர் -எஸ் .ராமகிருஷ்ணன்