சிறுமை: மேனா. உலகநாதன்

போர் எனும் போது
பூமியும் மனமும்
ஒன்றாகவே அதிர்கின்றன
 
புயலெனக் கிளம்பும்
புழுதியின் மூர்க்கத்தில்
பூக்கள் உதிர்ந்து மடிகின்றன
 
போர்…
ஒருபோதும்
மனித இனத்தின்
மேலான அடையாளங்களில்
ஒன்றானதில்லை
ஆகிடவும் முடியாது
 
ஆனாலும் போர்களை
மனிதர்களால் தவிர்க்க
முடியவில்லை
 
விடுதலை உணர்வால்
வீரம் பொங்க
தோள்கள் துடித்தெழ
தொடுக்கப்பட்ட
போர்களால் ஏற்படும்
புண்ணின் வலி
பெருமிதங்களின்
ஒத்தடத்தில் காணாமல்
போகக் கூடும்
 
நாடுபிடிக்கும் ஆசையுடன்
நடைபெற்ற நாய்ச்
சண்டைகளோ
மானுடம் அதுவரை
அடைந்த நாகரிக
முகத்தை
கீறியும், குதறியும்
குரூரமாக்கிச் சிதைத்து விடும்
 
இரண்டுமில்லாமல்
இப்போது நடப்பது
ஆட்சியை பிடிப்பதற்கான
அவலட்சணப் போர்
 
பிச்சை
எடுக்க வைத்த
பாகனின் சிறுமையை
யானையின் கம்பீரம்
ஒருபோதும்
மன்னித்ததில்லை