முக்கிய செய்திகள்

கன்னியாஸ்திரி பாலியல் வன்கொடுமை வழக்கு: பாதிரியாருக்கு சம்மன்..

கன்னியாஸ்திரி பாலியல் வன்கொடுமை வழக்கில் செப்டம்பர் 19ஆம் தேதி விசாரணைக்கு நேரில் ஆஜராக பிஷப் ஃபிராங்கோவுக்கு கேரள போலீசார் சம்மன் அனுப்பியுள்ளனர்.

கேரள மாநிலம் திருவனந்தபுரத்தைச் சேர்ந்த கன்னியாஸ்திரி ஒருவர் ஜலந்தரைச் சேர்ந்த பாதிரியார் ஃப்ராங்கோ மூலக்கல் என்பவர், 2014 முதல் 2016 வரை 13 முறை தன்னை பாலியல் வன்கொடுமை செய்தார் என புகார் அளித்தார். இருப்பினும் பிஷப் மூலக்கல் மீது எந்த நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை.

இந்நிலையில், இது குறித்த விசாரணைக்காக வரும் செப்டம்பர் 19ஆம் தேதி நேரில் ஆஜராகுமாறு பாதிரியார் ஃபிராங்கோ மூலக்கல்லுக்கு கேரள போலீசார் நோட்டீஸ் அனுப்பியுள்ளது.

இதனிடையே, கேரள சுயேட்சை எம்.எல்.ஏ. பி.சி. ஜார்ஜ், “அந்தக் கன்னியாஸ்திரி பாலியல் தொழிலாளி என்பதில் சந்தேகமே இல்லை.
பிஷப் 13 முறை பாலியல் வன்கொடுமை செய்ததாகச் சொல்லும் அவர், 12 முறை ரசித்துவிட்டு 13வது முறை மட்டும் பாலியல் வன்கொடுமை செய்துவிட்டதாகக் கூறுகிறார்? முதல் முறையே புகார் அளிக்காதது ஏன்?’ எனத் தெரிவித்துள்ளார்.
இந்தக் பேச்சைக் கண்டித்து அவருக்கு தேசிய மகளிர் ஆணையம் சம்மன் அனுப்பியுள்ளது. எம்எல்ஏ கூறிய அவதூறான கருத்து முற்றிலும் ஏற்கமுடியாதது என அதில் கண்டிக்கப்பட்டுள்ளது.
இருப்பினும் தான் கூறிய கருத்தில் உறுதியாக இருப்பதாக எம்எல்ஏ ஜார்ஜ் இன்று கூறியுள்ளார்.