மருது சகோதரர்கள், பாஞ்சாலங்குறிச்சி ஊமத்துரை, சிவத்தையா தம்பி, மீனங்குடி முத்துக்கருப்பத்தேவர், சித்திரங்குடி மயிலப்பன் சேர்வை, விருப்பாச்சி கோபாலர், தேளி யாதுலர், பழசி கேரள வர்மா, ஆகியோருடன்
ஆங்கிலேயருக்கு எதிராக தென்னிந்திய கூட்டமைப்பை உருவாக்கினர்.
1801 சூன் 12 ஆம் தேதி சின்ன மருது திருச்சி திருவரங்கம் முதலிய இடங்களில் வெளியிட்ட அறிக்கை “ஜம்புத் தீவு பிரகடனம்”.
அவ்வறிக்கையின் மூலம் எல்லா இனங்களையும் சேர்ந்த மக்கள் நாட்டுப் பற்று மிக்க பணிகளை மேற்கொள்ள வேண்டுமென்றும், ஆங்கிலேயருக்கு எதிராகப் போர் தொடுக்க வேண்டுமென்றும் அறை கூவல் விடுக்கப்பட்டது.
கட்டபொம்மனின் தம்பி ஊமைத்துரைக்கு அடைக்கலம் தந்ததாகக் காரணம் கூறி 1801 மே 28 இல் ஆங்கிலேயர் போர் தொடுத்தனர். இப்போர் 150 நாட்கள் இடைவிடாமல் நடந்தது.
காளையார்கோவில் காடுகளில் கொரில்லா முறையில் போர் நடந்தது. மருது சகோதரர்கள் மற்றும் பிற விடுதலை வீரர்களைப் பிடித்துக் கொடுப்போர்க்கு வெகுமதி அறிவிக்கப்பட்டது. காளையார்கோவில் காட்டினை அழிப்பவர்க்கு, அழிக்கப்படும் நிலம் 20 வருடத்திற்கு இலவச குத்தகையாக வழங்கப்படும் என ஆங்கிலேயர் அறிவித்தனர்.
காளையார்கோவிலில் கர்னல் அக்னியூ மருது சகோதரர்களை கைதுசெய்தார். சிவகங்கையின் சுதந்திர ஆட்சி முடிவுக்கு வந்தது. சிவகங்கை அரசர் வெங்கம் உடையனத்தேவர் கைதுசெய்யப்பட்டு நாடு கடத்தப்பட்டார். பாகனேரி அரசர் வாளுக்கு வேலி அம்பலம் மருது சகோதரர்களை மீட்க செய்த முயற்சிகள் தோல்வியடைந்தன.
மருது சகோதரர்கள் திருப்பத்தூர் கோட்டையில் 24-10-1801 அன்று தூக்கில் போடப்பட்டு வீர மரணம் அடைந்தனர். மருதுக்களுடன் அவர்கள் ஆண் வாரிசுகள் அனைவரும் (“துரைச்சாமி” சின்ன மருதுவின் மகன் ஒருவரைத் தவிர ) தூக்கிலிடப்பட்டனர்.
500க்கும் மேற்பட்ட விடுதலை வீரர்கள் முறையான விசாரணையின்றி தூக்கிலிடப்பட்டனர்.
மருது சகோதரர்களின் விருப்பப்படி அவர்களது தலை சொர்ண காளீசுவரர் கோவிலுக்கு முன்பு புதைக்கப்பட்டுள்ளது..
வெள்ளையர்களிடம் பிடிபட்ட சின்ன மருதுவின் மகன் துரைச்சாமியும் மருதுவின் தளபதிகளும் பிரின்ஸ் ஆஃப் வேல்ஸ் (இன்றைய பினாங்கு) நாட்டுக்கு நாடு கடத்தப்பட்டனர்.
மருது சகோதரர்களும், அவரது குடும்பமும் நாட்டிற்காக, தங்களை தியாகம் செய்தது நம்மையெல்லாம் மெய் சிலிர்க்க வைக்கின்றது. தேச விடுதலைக்காக போராடிய பலரின் வாழ்க்கை வரலாற்றில் இவர்களுடையது மாபெரும் சகாப்தம்.
வழக்கறிஞர்
கே.எஸ் இராதாகிருஷ்ணன்
முகநுால் பதிவு.