
சிவகங்கையில் சாலை விதிமீறலை தட்டிக்கேட்ட போக்குவரத்து பெண் உதவி ஆய்வாளரை ஆபாசமான வார்த்தைகளால் திட்டிய சிவகங்கை நகர பாஜக தலைவர் அதிரடியாக கைது செய்யப்பட்டுள்ளார்.
சிவகங்கையிலிருந்து மதுரையை நோக்கி காரில் சென்று கொண்டிருந்த சிவகங்கை நகர பாஜக தலைவர் உதயா சீட் பெல்ட் அணியாமல் சென்றதாக தெரிகிறது. கோட்டை முனியாண்டி கோவில் அருகே வாகன சோதனையில் ஈடுபட்டிருந்த போக்குவரத்து பெண் உதவி ஆய்வாளர் அழகுராணி இதுகுறித்து கேட்டுள்ளார். அப்போது அழகு ராணியுடன் வாக்குவாதத்தில் ஈடுபட்ட உதயா ஒரு கட்டத்தில் மிகவும் தகாத வார்த்தைகளால் வசைபாடினார்.
அங்கிருந்தவர்கள் தங்கள் செல்போன்களில் வீடியோ எடுத்தனர். இந்த வீடியோ ஆதாரத்துடன் சிவகங்கை காவல் நிலையத்தில் பெண் உதவி ஆய்வாளர் அழகுராணி புகார் அளித்தார். அதன் பேரில் பாஜக நகர தலைவர் உதயாவை போலீசார் கைது செய்தனர். இதை அறிந்த கட்சியினர் மாவட்ட தலைவர் சக்தி நாதன் தலைமையில் காவல் நிலையம் முன்பு குவிந்தனர். நீண்ட நேரம் பேச்சுவார்த்தைக்கு பின்னர் போலீசார் கூட்டத்தை கலைந்து போக செய்தனர். மிகவும் ஆபாசமான வார்த்தைகளால் வசைபாடிய சிவகங்கை பாஜக நகர தலைவர் உதயா மீது நான்கு பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது.