சருமத்தை காக்கும் ‘குப்பைமேனி’..

குப்பையில் கிடைத்தாலும் மாணிக்கம் மாணிக்கமே.. என்ற பழமொழிக்கேற்ப குப்பையான மேனி என்ற சருமத்தை பாதுகாக்க மாணிக்க்கமாக வந்த மூலிகை தான் குப்பைமேனி.

மழைக்காலங்களில் சாலையோரங்களில் எளிதில் வளரக்கூடிய கீரை, ‘குப்பைமேனி’. பூனைக்கு இந்த செடி மீது அதிகம் விருப்பம் என்பதால், இதற்கு ‘பூனை வணங்கி’ என்றும் ஒரு பெயர் இருக்கிறது.

*குப்பைமேனிக் கீரை, ஒருவகையான கசப்பும் கார்ப்பும் கலந்த சுவை கொண்டது.

பல் நோய், தீப்புண், தாவர வகை நஞ்சு, வயிற்று வலி, வாதநோய்கள், மூலம், நமைச்சல், மூச்சிரைப்பு, மூக்கில் நீர் ஒழுகுதல் போன்ற பிரச்னைகளுக்கு அருமருந்து.

*குப்பைமேனி இலையைச் சாறு எடுத்து, ஒன்று முதல் நான்கு தேக்கரண்டி வரை சிறுவர்களுக்கு கொடுத்துவந்தால், வயிற்றில் இருக்கும் பூச்சிகள் அழிந்து மலம் வழியாக வெளியேறும்.

*குப்பைமேனிச் சாற்றை, பெரியவர்களுக்கு 15 மி.லி முதல் 30 மி.லி-யும், சிறுவர்களுக்கு ஒரு தேக்கரண்டி வீதமும் குடிநீராகச் செய்துகொடுக்கலாம். இதன் மூலம், வாந்தி உண்டாகி, உடல் சூடு தணிந்து, உடலில் உள்ள பித்தம் குறையும்.

*குப்பைமேனி இலையைப் பொடி செய்து, வெள்ளைப்பூண்டு சேர்த்து, ஒன்று அல்லது இரண்டு தேக்கரண்டி வரை குழந்தைகளுக்குக் கொடுத்தால்,

குழந்தைகள் வயிற்றில் இருக்கும் புழுக்கள், மலம் வழியாக வெளியேறும். இதனுடைய இலைப் பொடியை ஒரு கிராம் அளவுக்கு எடுத்து சாப்பிட்டு வந்தால், இருமல் மற்றும் கபம் நீங்கும்.

*நோய்வாய்ப்பட்டு நீண்ட நாட்களாகப் படுக்கையிலேயே கிடந்து, படுக்கைப்புண் வந்தவர்களுக்கு, குப்பைமேனி இலை நல்ல மருந்து. புண் இருக்கும் இடத்தில் இலையை அரைத்து வைத்துக் கட்டுப்போட, புண்கள் ஆறும்.

*குப்பைமேனி இலையை தனியாகவோ மஞ்சள் பொடி சேர்த்தோ புண்களின் மேலும், விஷக்கடி ஏற்பட்ட இடத்திலும் தடவிவர, புண்கள் குணமாகும்.

* குப்பைமேனி இலையுடன் உப்பு சேர்த்து, சொறி, சிரங்கு இருக்கும் இடத்தில் நன்றாகத் தேய்த்து குளித்துவர, நல்ல குணம் தெரியும்.

*நீரில், இதன் இலையைப் போட்டு, கொதிக்கவைத்து, கஷாயமாகச் செய்து, அதனுடன் உப்பு சேர்த்துக் குடித்துவந்தால், மலம் இளகும்.

*குப்பைமேனி இலையை, சுண்ணாம்புடன் சேர்த்து அரைத்து, மூட்டு வீக்கங்களுக்குக் கட்டு போடலாம். காது வலி இருப்பவர்கள் இந்த கலவையைக் காதைச் சுற்றி பூச வேண்டும்.

*குப்பைமேனியைச் சாறு எடுத்து, தலைவலி வந்தால் பூசலாம். குழந்தைகளுக்கு நாட்பட்ட இருமல் இருந்தால்,

இந்த இலைச் சாற்றை சுண்டக்காய்ச்சி, மெழுகுப்பதத்தில் எடுத்து, கால் முதல் அரை தேக்கரண்டி (130 மி.கி முதல் 260 மி.கி) கொடுக்கலாம். இருமல் சட்டென நிற்கும்.

*குப்பைமேனி இலைச் சாறு எடுத்து நல்லெண்ணெயுடன் சேர்த்துக் காய்ச்சி, உடலில் வலி இருக்கும் இடங்களில் தடவிவர, வலி குணமாகும்.

நாட்டு மருந்து முகநுால் பக்கத்திலிருந்து.