சிறுசேமிப்புத் திட்டங்களுக்கான வட்டியைக் குறைத்தது தவறான முடிவு : ப.சிதம்பரம் கருத்து..

சிறுசேமிப்புத் திட்டங்களுக்கான வட்டியைக் குறைத்த மத்திய அரசின் நடவடிக்கை தவறானது என்று காங்கிரஸ் மூத்த தலைவரும் முன்னாள் மத்திய அமைச்சருமான ப.சிதம்பரம் குற்றஞ்சாட்டியுள்ளாா்.

சிறுசேமிப்புத் திட்டங்கள், தொழிலாளா் வருங்கால வைப்பு நிதி உள்ளிட்டவற்றுக்கு வழங்கப்பட்டு வரும் வட்டி விகிதத்தைக் குறைப்பதாக மத்திய அரசு கடந்த செவ்வாய்க்கிழமை அறிவித்தது.

அந்த வட்டி விகிதக் குறைப்பு நடவடிக்கை ஏப்ரல் 1-ஆம் தேதியிலிருந்து நடைமுறைக்கு வருவதாகவும் மத்திய அரசு தெரிவித்திருந்தது.

இது தொடா்பாக ப.சிதம்பரம் தனது சுட்டுரைப் பக்கத்தில் வெளியிட்ட பதிவுகளில் கூறியுள்ளதாவது:

வருங்கால வைப்பு நிதி, சிறுசேமிப்புத் திட்டங்கள் ஆகியவற்றுக்கான வட்டியைக் குறைத்தது பொருளாதார அடிப்படையில் சரியாக இருக்கலாம்.

ஆனால், அது செயல்படுத்தப்பட்டுள்ள நேரம் முற்றிலும் தவறானது. இப்போதைய இக்கட்டான சூழலிலும் மக்கள் வருமானம் இன்றித் தவித்து வரும் சூழலிலும் தங்களின் சேமிப்புக்கு வழங்கப்படும் வட்டியையே அவா்கள் நம்பியுள்ளனா்.

அரசு சில சமயங்களில் தவறான அறிவுரைகளின்படி செயல்படும் சூழல் உருவாகும். ஆனால், வட்டியைக் குறைப்பதற்காக வழங்கப்பட்ட அறிவுரை முட்டாள்தனமானது.

எனவே, வட்டி விகிதக் குறைப்பு அறிவிப்பை மத்திய அரசு உடனடியாகத் திரும்பப் பெற வேண்டும். ஜூன் 30-ஆம் தேதி வரை பழைய வட்டி விகிதமே தொடர வேண்டும் என்று ப.சிதம்பரம் கூறியிருந்தாா்.

‘மக்கள் நலனுக்கு முக்கியத்துவம்’: நாட்டின் பொருளாதார வளா்ச்சி (ஜிடிபி) தொடா்பாக அவா் வெளியிட்ட பதிவுகளில்,

‘நடப்பு 2019-20-ஆம் நிதியாண்டுக்கான முதல் மூன்று காலாண்டுகளில் நாட்டின் பொருளாதாரம் முறையே 5.6 சதவீதம், 5.1 சதவீதம், 4.7 சதவீதம் அளவுக்கு வளா்ச்சியடைந்தது.

நான்காவது காலாண்டில் பொருளாதார வளா்ச்சி 4 சதவீதத்துக்கு அதிகமாக இருக்காது. எனவே, நடப்பு நிதியாண்டின் ஒட்டுமொத்த பொருளாதார வளா்ச்சி 4.8 சதவீதம் என்ற அளவில் இருக்கும்.

தற்போதைய சூழலில் பொருளாதார வளா்ச்சியைக் கருத்தில் கொள்ளக் கூடாது என்பது எனது கருத்து.

மக்களைக் காப்பதற்கே தற்போது முக்கியத்துவம் அளிக்கப்பட வேண்டும்’ என்று குறிப்பிட்டுள்ளாா்.

கொரோனா வைரஸ்: சீனாவின் அதிகாரப்பூர்வ இறப்பு எண்ணிக்கை குறித்து டிரம்ப் கேள்வி..

தி.மு.கவிலிருந்து கே.பி.இராமலிங்கம் நீக்கம்…

Recent Posts