கோவை ஆர்.எஸ்.புரம் காவல்நிலையத்திற்கு மத்திய அரசு விருது..


நாட்டில் ஸ்மார்ட் காவல்நிலையங்களை தேர்ந்தெடுத்து, அதற்கு விருது வழங்கும் முறையை மத்திய உள்துறை அமைச்சகம், கடந்த சில ஆண்டுகளுக்கு முன்பு அறிமுகப்படுத்தியது. அதன்படி, இந்த விருதுக்காக தமிழக அரசு சார்பில், சென்னை அண்ணாநகர் காவல்நிலையம் மற்றும் கோவை ஆர்.எஸ்.புரம் காவல்நிலையம் ஆகியவை பரிந்துரைக்கப்பட்டிருந்தன.

மத்தியப்பிரதேச மாநிலம் தேகான்பூரில் நடைபெற்ற டி.ஜி-க்கள் மற்றும் ஐ.ஜிக்கள் மாநாட்டில் நாட்டின் சிறந்த காவல்நிலையங்களுக்கான விருதை மத்திய உள்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் வழங்கினார்.

அப்போது, நாட்டிலேயே சிறந்த காவல்நிலையத்துக்கான விருது கோவை ஆர்.எஸ்.புரம் காவல்நிலையத்துக்கு வழங்கப்பட்டது. இதற்கான விருதை, மத்திய உள்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங்கிடம் இருந்து, ஆர்.எஸ்.புரம் பி-2 காவல்நிலைய இன்ஸ்பெக்டர் ஜோதி பெற்றுக் கொண்டார்.

இந்த பட்டியலில் உடைமைகளை மீட்டல், குற்றங்களின் எண்ணிக்கை குறைத்தல், தூய்மை ஆகியவற்றின் அடிப்படையில், ஆர்.எஸ்.புரம் காவல்நிலையத்துக்கு முதல் பரிசு வழங்கப்பட்டுள்ளது.

தெலங்கானா மாநிலத்தின் பஞ்சகுட்டா காவல்நிலையத்துக்கு இரண்டாவது பரிசும், உத்தரப்பிரதேச மாநிலம் குடும்பா காவல்நிலையத்துக்கு மூன்றாவது பரிசும் வழங்கப்பட்டுள்ளது.

சென்னை அண்ணாநகர் காவல்நிலையம், இந்த ஸ்மார்ட் காவல்நிலையங்களின் பட்டியலில் 5-வது இடத்தைப் பிடித்துள்ளது.