சமூக ஆர்வலர்கள் மீதான அடக்குமுறை : வைகோ கண்டனம்..


சமூக ஆர்வலர்கள் மீதான அடக்குமுறையானது ஜனநாயகத்தின் குரல்வளையை அறுக்கும் பாஜக அரசின் பாசிசப் போக்கு என, மதிமுக பொதுச் செயலாளர் வைகோ கண்டனம் தெரிவித்துள்ளார்.

இதுதொடர்பாக வைகோ வியாழக்கிழமை வெளியிட்ட அறிக்கையில், “மகாராஷ்டிரா மாநிலம் புனே மாவட்டத்தில் உள்ள பீமா கோரேகான் என்ற ஊரில் ஆங்கிலேய ஆட்சியாளர்களுக்கும், அப்போதைய முடியாட்சியான பேஷ்வாக்களுக்கும் இடையே, 1818 ஆம் ஆண்டு, உக்கிரமான போர் நடைபெற்றது.

அந்தப் போரில் ஆங்கிலேய ராணுவத்தில் பணிபுரிந்த தாழ்த்தப்பட்ட மகர் வகுப்பினர் ஐநூறு பேர் உயிரிழந்தனர். அதன் பிறகு அப்பகுதியில் ஆங்கிலேய அரசு போர் நினைவுத்தூண் ஒன்றை எழுப்பியது. பீமா கோரேகானில் ஆண்டுதோறும் தலித் மக்கள் ஒன்று கூடி போரில் இறந்த ராணுவ வீரர்களுக்கு மரியாதை செலுத்தும் நிகழ்வு நடத்தப்படுகிறது.

கடந்த ஜனவரி 1 ஆம் தேதியன்று 200 ஆம் ஆண்டு நினைவுநாளையொட்டி பீமா கோரேகானில் தாழ்த்தப்பட்ட மக்கள், மனித உரிமை செயற்பாட்டாளர்கள் உள்ளிட்ட ஆயிரக்கணக்கானோர் திரண்டு மரியாதை செலுத்தினர். அப்போது இந்துத்துவ மதவெறி அமைப்பைச் சேர்ந்தோர் தாழ்த்தப்பட்டோருக்கு எதிராக வன்முறையைத் தூண்டினார்கள். ஒருவர் உயிர்ப்பலி ஆனார். இதன் எதிரொலியாக மகாராஷ்டிரா மாநிலம் மாநிலம் முழுவதும் தலித் மக்கள் ஒன்று சேர்ந்து வீரியமானப் போராட்டங்கள் வெடித்தன.

தலித் மக்களைத் தூண்டிவிட்டு கலவர விதைகளைத் தூவினர் என்று குற்றம் சாட்டி, கடந்த ஜூன் 7 ஆம் தேதியன்று தலித் உரிமைச் செயற்பாட்டாளர் சுதிர் தவாலே, வழக்கறிஞர் சுரேந்திரா காட்லிங், மகேஷ் ரவுட், ஷோமாசென், ரோனா வில்சன் ஆகிய ஐந்து பேரை மகாராஷ்டிரா பாஜக அரசு கைது செய்தது. இவர்கள் அனைவர் மீதும் தடா, பொடா போன்று தற்போது உருவாக்கப்பட்டிருக்கும் கொடிய, சட்டவிரோத நடவடிக்கைகள் தடுப்புச் சட்டத்தின் கீழ் (யுஏபிஏ) வழக்குப் பதிவு செய்யப்பட்டு இருக்கிறது.

செவ்வாய்க்கிழமை, 28 ஆம் தேதி, பீமா கோரேகான் கலவர வழக்கைக் காரணமாகக் காட்டி, மனித உரிமைச் செயற்பாட்டாளர்கள், இடதுசாரி சிந்தனையாளர்கள் ஐந்து பேரை மகாராஷ்டிரா மாநில அரசு, மத்திய அரசின் புலனாய்வு அமைப்புகளின் அறிவித்தலின்படி கைது செய்யப்பட்டு இருக்கிறார்கள். இதற்காக மராட்டிய காவல்துறை டெல்லி, ஹைதராபாத், பரிதாபாத், மும்பை, தானே, கோவா, ராஞ்சி போன்ற இடங்களில் ஒரே நேரத்தில் கைது மற்றும் சோதனை நடவடிக்கைகளை மேற்கொண்டுள்ளது.

ஆந்திர மாநிலத்தைச் சேர்ந்த புரட்சிக் கவிஞரும், எழுத்தாளருமான கவிஞர் வரவரராவ், நலிந்த பிரிவு மக்களுக்காக உரிமைக்குரல் எழுப்பி போராடி வரும் எழுத்தாளரும், சமூக ஆர்வலருமான பேராசிரியர் வெர்னான் கோன்சால்வஸ், டெல்லியில் உள்ள தேசிய சட்டப் பல்கலைக் கழகத்தில் சிறப்பு பேராசிரியராகப் பணியாற்றி வருபவரும், குடியுரிமை சுதந்திரத்துக்கான மக்கள் அமைப்பின் தேசியச் செயலாளருமான, வழக்கறிஞர் சுதா பரத்வாஜ், மனித உரிமைகளுக்காகப் போராடி வரும், மும்பையைச் சேர்ந்த வழக்கறிஞர் அருண் பெரைரா, மக்கள் ஜனநாயக உரிமை யூனியன் அமைப்பின் உறுப்பினரும், மனித உரிமைப் போராளியுமான ஹரியானாவைச் சேர்ந்த கவுதம் நவ்லகா ஆகியோர் சட்ட விரோத நடவடிக்கைகள் சட்டப்படி (யுஏபிஏ) கைது செய்யப்பட்டுள்ளனர். பிரதமர் மோடியைக் கொல்ல சதித்திட்டம் தீட்டியதாக இவர்கள் மீது மகாராஷ்டிரா காவல்துறை வழக்கு புனைந்து இருக்கிறது.

ஒடுக்கப்பட்ட, பழங்குடி இன மக்கள் உரிமைகளுக்காகப் போராடுபவர்கள், சிறுபான்மை மக்களுக்கு எதிரான இந்துத்துவ சக்திகளை எதிர்ப்பவர்கள், மனித உரிமைச் செயற்பாட்டாளர்கள், ஆர்எஸ்எஸ் சங்பரிவார் கூட்டத்தின் சதி நடவடிக்கைகளை மக்கள் மன்றத்தில் தோலுரித்துக் காட்டும் சிந்தனையாளர்கள் மீது நக்சல் முத்திரை குத்தி பிரதமரைக் கொல்ல சதித் திட்டம் தீட்டியதாக மத்தியப் புலனாய்வு அமைப்புகளும், மராட்டிய மாநில அரசும் குற்றம்சாட்டி உஃபா சட்டத்தின் கீழ் கைது செய்து இருப்பது வன்மையான கண்டனத்துக்குரியது.

மோடி அரசின் பொருளாதாரக் கொள்கைகளை எதிர்க்கும் நிபுணர்கள், அரசு விமர்சகர்கள், இந்துத்துவா மதவெறியை எதிர்க்கும் ஜனநாயகப் போராளிகள், மனித உரிமை ஆர்வலர்கள் அனைவரையும் தேச விரோதிகள் என்று முத்திரை குத்துவது மோடி அரசின் பாசிசப் போக்கை அப்பட்டமாகக் காட்டுகிறது. உச்ச நீதிமன்றம் மத்திய, மாநில அரசுகளைக் கண்டித்துள்ளது. மராட்டிய மாநில அரசு உடனடியாக அனைவரையும் விடுதலை செய்ய வேண்டும்.

தமிழ்நாட்டின் உரிமைகளுக்காகவும், தூத்துக்குடி ஸ்டெர்லைட் போராட்டத்தில் பொதுமக்கள் சுட்டு வீழ்த்தப்பட்டதற்கு நீதி கேட்டும் ஐநா மனித உரிமைகள் ஆணையக் கூட்டத்தில் எடுத்துரைத்துவிட்டு நாடு திரும்பிய மே 17 இயக்க ஒருங்கிணைப்பாளர் திருமுருகன் காந்தியை தமிழக அரசு கைது செய்து சிறையில் அடைத்திருக்கிறது. அவரை தனிமைச் சிறையில் அடைத்து வைத்து சித்ரவதை செய்கிறது. அவர் மீது அடுக்கடுக்கான பொய் வழக்குகளை தொடுத்துள்ள காவல்துறை, சட்ட விரோத தடுப்பு நடவடிக்கைகள் சட்டத்தையும் (உஃபா) ஏவி உள்ளது.

தீவிரவாதிகள், நாட்டின் பாதுகாப்புக்கு அச்சுறுத்தலாக உள்ள பயங்கரவாதிகளை ஒடுக்க கொண்டுவரப்பட்டதாக சொல்லப்படும் உஃபா சட்டத்தை மத்திய அரசை எதிர்ப்பவர்கள் மீது ஏவி விடுவது அநீதியான நடவடிக்கை ஆகும்.

மோடி அரசின் மிரட்டலுக்கு அடிபணிந்து கிடக்கும் தமிழக அதிமுக அரசின் ஜனநாயகத்திற்கு எதிரான நடவடிக்கைகளை தமிழக மக்கள் ஒருபோதும் மன்னிக்க மாட்டார்கள். திருமுருகன் காந்தி மீது போடப்பட்டுள்ள உஃபா உள்ளிட்ட வழக்குகளை உடனடியாக் திரும்பப் பெற்றுக்கொண்டு அவரை விடுதலை செய்ய வேண்டும்” என்று வைகோ வலியுறுத்தியுள்ளார்.