ஐக்கிய அரபு எமிரேட்சில் பணிபுரிந்து வந்த இந்தியர் ஒருவர், மாற்று மதம் குறித்து சமூக வலைத்தளத்தில் அவதுாறாக பதிவிட்டதால், வேலையில் இருந்து நீக்கப்பட்டுள்ளார்.
மேற்கு ஆசிய நாடான ஐக்கிய அரபு எமிரேட்சின், ராஸ் அல் கைமாவில் உள்ள சுரங்க நிறுவனத்தில், பிரஜ்கிஷோர் குப்தா என்பவர் பணியாற்றி வந்தார்.
பீகார் மாநிலத்தை சேர்ந்த இவர், ‘பேஸ்புக்’கில், மாற்று மதத்தினர் குறித்து வெளியிட்ட சர்ச்சைப் பதிவு, அவருக்கு சிக்கலை ஏற்படுத்தியது.
இந்தியாவில், கரோனா பரவியதற்கு சிலர் தான் காரணம் என்றும், டெல்லியில் நடந்த வன்முறையை, ‘தெய்வீக நீதி’ என்றும் குறிப்பிட்டு பிரஜ்கிஷோர், பேஸ்புக்கில் பதிவிட்டிருந்தார்.
இந்நிலையில், அவர் பணிபுரிந்த நிறுவனம், அவரை வேலையில் இருந்து நீக்கியுள்ளது.
நிறுவனத்தின் மூத்த அதிகாரி ஜீன் பிரான்கோயஸ் மிலியன் கூறியதாவது: சகிப்புத்தன்மை, சமத்துவம் ஆகியவற்றை, ஐக்கிய அரபு எமிரேட்ஸ் அரசு ஊக்குவித்து வருகிறது.
இதுகுறித்து, அனைத்து ஊழியர்களுக்கும் சுற்றறிக்கை அனுப்பப்பட்டுள்ளது. எந்த மதம், இனத்தை சேர்ந்தவர்களாக இருந்தாலும் சரி, இதுபோன்ற நடத்தையை நிறுவனம் ஏற்றுக் கொள்ளாது. மீறினால், பதவி நீக்கம் செய்யப்படுவர். இவ்வாறு, அவர் கூறினார்.
ஏற்கனவே, மாற்று மதத்தினருக்கு எதிரான கருத்துக்களை வெளியிட்ட மூன்று இந்தியர்கள், இம்மாத துவக்கத்தில், பதவி நீக்கம் செய்யப்பட்டனர் என்பது குறிப்பிடத்தக்கது.