பழங்குடியின சமூக போராளி ஸ்டேன் சாமி மறைவுக்கு ஐ.நா. மனித உரிமைகள் ஆணையம் இரங்கல் தெரிவித்துள்ளது. தமிழகத்தைச் சேர்ந்தவரும், ஜார்கண்ட் மாநிலத்தில் பழங்குடியின மக்களுக்காக குரல் கொடுத்து வந்த மனித உரிமைகள் செயல்பாட்டாளருமான ஸ்டேன் சுவாமி மருத்துவமனையில் உடல்நிலை மோசமடைந்து வெண்டிலேட்டர் உதவியுடன் சிகிச்சை பெற்று வந்த நிலையில் நேற்று காலமானார். இவரது மறைவிற்கு பல்வேறு மாநில முதல்வர்கள், தலைவர்கள் இரங்கல் தெரிவித்து வருகிறார்கள். இந்நிலையில், மனித உரிமை செயற்பாட்டாளர் ஸ்டேன் சுவாமி மறைவுக்கு ஐ.நா மனித உரிமைகள் அமைப்பு இரங்கல் தெரிவித்துள்ளது. நீண்ட கால விசாரணைக் காவலில் அடைக்கப்பட்ட ஸ்டேன் சுவாமியின் மறைவு அதிர்ச்சியையும், வேதனையும் அளிக்கிறது என்று ஐ.நா மனித உரிமைகள் அமைப்பு தெரிவித்துள்ளது.
இதுகுறித்து அந்த அமைப்பு வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில், உரிய சட்ட அடிப்படை இன்றி சிறையில் உள்ள கைதிகளை அரசுகள் உடனே விடுவிக்க வேண்டும். ஸ்டேன் சுவாமி (84) பழங்குடியின மக்களுக்காக தொடர்ந்து போராடி வந்தவர். ஸ்டேன் சுவாமி உள்ளிட்ட 16 பேரை விடுவிக்க இந்திய அரசிடம் ஐ.நா. தொடர்ந்து வலியுறுத்தி வந்தது. ஸ்டேன் சுவாமியை உபா சட்டத்தின் கீழ் ஒன்றிய அரசு கைது செய்ததற்கு ஐ.நா. ஏற்கனவே எதிர்ப்பு தெரிவித்திருந்தது என்று குறிப்பிட்டிருக்கிறது. அடிப்படை உரிமையான கருத்து சுதந்திரத்தை பயன்படுத்தியதற்காக யாரையும் கைது செய்யக்கூடாது என்றும் ஐ.நா. தெரிவித்துள்ளது.