முக்கிய செய்திகள்

சூரிய கிரகணம் பற்றிய அறிவியல் உண்மைகள் …

சூரிய கிரகணம் பற்றிப் பல்வேறு விதமான தகவல்கள் வலம் வருகின்றன. அச்சப்படத் தக்கதா, சூரிய கிரகணம்? அறிவியல் கூறும் உண்மைதான் என்ன?

வானியல் அபூா்வ நிகழ்வான வளைய சூரிய கிரகணம் இந்தியாவின் பல பகுதிகளில் வியாழக்கிழமை (டிச. 26) காலை 9 மணி முதல் மதியம் 12.29 மணி வரை நிகழ இருக்கிறது. தமிழகத்தில் காலை 8 மணி முதல் 11.15 மணிவரை நாம் இதைப் பார்க்கலாம்.

மக்களிடையே சூரிய கிரகணம் பற்றிப் பல்வேறு நம்பிக்கைகள் நிலவுகின்றன. சாப்பிடலாமா, வெளியே வரலாமா, குளிக்க வேண்டுமா, கர்ப்பிணிப் பெண்கள் பாதிக்கப்படுவார்களா… என நிறைய கேள்விகள், அச்சங்கள்.

இவை ஒருபுறம் என்றால் சூரிய கிரகணத்தைப் பாதுகாப்பாகக் கண்டுகளிக்க ஏற்பாடுகளும் செய்யப்பட்டு வருகின்றன. மிகவும் பாதுகாப்பாக சூரிய கிரகணத்தை காண்பது குறித்து விழிப்புணர்வும் ஏற்படுத்தப்பட்டு வருகிறது.

இந்த நிலையில், சூரிய கிரகணம் குறித்த பல்வேறு அறிவியல் பூர்வமான தகவல்களைத் தமிழ்நாடு அறிவியல் இயக்கத்தைச் சேர்ந்தவர்கள் தெரிவித்துள்ளனர்.

சூரிய கிரகணம் என்பது என்ன?

சூரிய கிரகணம் என்பது வானத்து சந்திரனின் நிழல் விளையாட்டுதான். சூரியனுக்கும், பூமிக்கும் இடையில் சந்திரன் நேராக வந்து, அதன் நிழல் சூரியனை மறைத்தால், அது சூரிய கிரகணம். சூரியனுக்கும், சந்திரனுக்கும் இடையில் பூமி வரும்போது அதன் நிழல் சந்திரன் மீது விழுந்து சந்திர ஒளியை மறைத்தால் அது சந்திர கிரகணம். சூரிய கிரகணம் அமாவாசை நாளிலும், சந்திர கிரகணம் முழு நிலா நாளிலும் வரும்.

சூரிய கிரகணத்தின் போது சந்திரனின் நிழல் முழுமையாக சூரியனை மறைத்துவிட்டால் அது முழு சூரிய கிரகணம். சந்திரனின் நிழல் சூரியனின் வட்டத்துக்குள் விழுந்து, சூரியன், நெருப்பு வளையமாக (Ring of fire) தெரிந்தால் அது வளைய சூரிய கிரகணம் எனப்படும். சூரியன் சந்திரனின் நிழலால் பகுதி சூரியன் மட்டும் மறைக்கப்பட்டால் அது பகுதி சூரிய கிரகணம். இப்போது டிசம்பர் 26 அன்று நடைபெற உள்ளது வளைய சூரிய கிரகணம்.

சூரிய கிரகணத்தை எங்கு காணலாம்?

வளைய சூரியகிரகணம் தமிழகத்தில், உதகை, கோவை, திருப்பூர், திண்டுக்கல், திருச்சி, புதுக்கோட்டை, சிவகங்கை, கரூர் மற்றும் ஈரோடு என 9 மாவட்டங்களில், சூரியன் பொன் வளையமாகத் தெரியும். மற்ற மாவட்டங்களில் மற்றும் இந்தியா முழுமைக்கும் சூரியன் பகுதி கிரகணமாகத் தெரியும்.

வளைய சூரிய கிரகணம் இந்தியாவில் கேரளத்தின் காசர்கோடு மாவட்டம் செகாவத்து என்ற ஊரில் துவங்கி, உதகையில் நுழைகிறது. சூரிய கிரகணம் டிசம்பர் 26ம் நாள், காலை 8.07 மணிக்குத் துவங்கி, காலை 11.14 க்கு முடிகிறது. (சுமார் 3 மணி7 நிமிடம்) ஆனால், சூரியன் நெருப்பு வளையமாக ( Ring of fire) தெரியும் நேரம் காலை 9.31க்கு துவங்கி 9.34 வரை சூரியனின் வளையம் நீடிக்கிறது.

2019, டிசம்பர்26 வளைய கிரகணப் பாதையின் அகலம்: 118 கி.மீ, நீளம்: 12,900 கி.மீ, வளைய சூரிய கிரகண பாதை சவூதியில் துவங்கி, வடக்கு பசிபிக் பெருங்கடலில் உள்ள காம் (Gaum) வரை பயணிக்கிறது.

சந்திரன் எப்படி பெரிய சூரியனை மறைக்கிறது?

சூரியன் சந்திரனை விட 400 மடங்கு பெரியது. அதுபோலவே, சந்திரனுக்கும், பூமிக்கும் உள்ள தூரத்தைப் போல சூரியனுக்கு உள்ள தூரம் 400 மடங்கு அதிகம். எனவே, பூமியிலிருந்து பார்க்கும்போது சந்திரன், சூரியன் இரண்டும் ஒரே அளவில் தெரிகிறது. எனவே, சந்திரனின் நிழல் சூரியனை மறைத்து சூரிய கிரகணத்தை உருவாக்குகிறது.

கிரகணத்தின்போது சூரியன் வளையமாகத் தெரிகிறது? ஏன்?

சந்திரன் பூமியை நீள்வட்டத்தில் சுற்றி வருகிறது. அப்போது சில சமயம் அருகிலும், சில சமயம் தொலைவிலும் இருக்கும். முழு சூரிய கிரகணம் என்பது சந்திரன் அருகில்/அண்மையில் இருக்கும்போது ஏற்படும். வளைய கிரகணம் என்பது சந்திரன் தூரத்தில்/சேய்மையில் இருக்கும்போது, சந்திரனின் நிழல் சூரியனுக்குள்ளேயே விழும். சூரியனை முழுமையாக மறைக்காது. சூரியன் எட்டிப்பார்த்துக்கொண்டு வெளியே இருக்கும். இதனையே வளைய சூரிய கிரகணம் என்று சொல்கிறோம்.

சூரிய கிரகணத்தின்போது சூரியனைப் பார்க்கலாமா?

சூரிய கிரகணத்தின் போது மட்டுமல்ல, எப்போதுமே சூரியனை வெறும் கண்ணால் பார்க்கக் கூடாது. சூரியனைப் பார்ப்பதற்கு சிறப்பான ஒரு சூரிய கண்ணாடி தயாரித்துள்ளனர். அதனைபோட்டுக்கொண்டு சூரியனைப் பார்த்தால் எவ்வித பாதிப்பும் ஏற்படாது. சூரியனைப் பார்க்கும்போது கண்ணுக்கு எப்போதும் பாதுகாப்பு அவசியம். பாதுகாப்பான சூரிய வடிகட்டி கண்ணாடி(solar filer) குறைந்த விலையில் லட்சக்கணக்கில் வினியோகித்து வருகிறோம். தமிழ்நாடு முழுவதும் விழிப்புணர்வு செய்யப்பட்டுள்ளது.

சென்னையில் பெசன்ட்நகர் கடற்கரையில் தேநீர் விருந்துடன் காலை 8 மணி முதல் 11.30 வரை பார்க்க ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.. வானம் மேகமூட்டத்துடன் காணப்படும் போது சூரிய கிரகணத்தை பார்க்கும் வாய்ப்புகள் குறையும்..

சூரிய கிரகணத்தால் உலகில் எந்த ஒரு ஜீவராசிக்கும் தீங்கு ஏற்படுவது இல்லை. இதில் முக்கியமாக நாம் தெரிந்து கொள்ள வேண்டியது என்னவென்றால், இவர்கள் குறிப்பிடும் 6 கிரகங்களில் சூரியன், சந்திரன் இரண்டும் கிரகங்கள் இல்லை. சூரியன் அறிவியல் ரீதியாக ஒரு விண்மீன். சந்திரன் பூமியின் துணைக்கோள். கேது என்ற கோளே, நம் சூரிய மண்டலத்தில் இல்லை. புராணத்தின் வழியே கூறப்படும் கற்பனை.

சூரிய கிரகணத்தின் முழுமையான நேரம் காலை 8.06 லிருந்து காலை 11.14 வரை மட்டுமே. இவர்கள் சொல்லுவது காலை 8 மணி முதல் மதியம் 1.15 வரை என்று. இதுவும் தவறு. மேலும் இவர்கள் குறிப்பிடும் மூல நட்சத்திரம் என்பது, விருச்சிக ராசி மண்டலத்தில் பூமியிலிருந்து 550 ஒளியாண்டுகள் தொலைவில் உள்ளது. தனுசு ராசி 5000 ஒளியாண்டுகள் தொலைவில் உள்ளது. சூரியனோ பூமியிலிருந்து 14.79 கோடி கி.மீ தூரத்தில்தான் உள்ளது. இதில் எப்படி சூரிய கிரகணத்தால் மூல நட்சத்திரம் மற்றும் தனுசு ராசி பிரச்னைக்குள்ளாகும்?

சூரிய கிரகணத்தின்போது எந்தவொரு தீமை விளைவிக்கும் கதிர்களும் சூரியனிடமிருந்து வரவில்லை. அவை உணவை, உயிரினங்களைப் பாதிப்பதும் இல்லை. எனவே குளிக்க வேண்டியதும் இல்லை. உணவை மூடிவைக்க வேண்டியதும் இல்லை. வீட்டை/கோவிலை கழுவ வேண்டியதும் இல்லை. கிரகணத்துக்கு முன்னும் பின்னும் குளிக்க வேண்டியது இல்லை. கடலில் குளிக்க வேண்டியதோ, சாங்கியமாக நல்ல தண்ணீரில் உப்பைப் போட்டு குளிக்க வேண்டியதில்லை. அறிவியல் ரீதியாக சிந்திக்க வேண்டும். போலி அறிவியலுக்குள் மூழ்கிவிடக்கூடாது. தாரளமாய் நீங்கள் கிரகணத்தின் போது சாப்பிடலாம். எந்த பிரச்சினையும் ஏற்படாது.

கிரகணத்தின்போது நிறைய கண்டுபிடிப்புகள் நிகழ்ந்திருக்கின்றன. அதில் முக்கியமாக 3 கண்டுபிடிப்புகள் உலகத்திற்கு நன்மை பயப்பவை.

1. தனிம அட்டவணையின் இரண்டாவது தனிமம், லேசான தனிமம் ஹீலியம் கண்டுபிடிக்கப்பட்டது 1868, ஆகஸ்ட் 18 அன்று நிகழந்த முழு சூரிய கிரகணத்தின் போதுதான் பண்டறிந்த வானவியலாளர் பியரீ ஜான்சென் (Pierre Janssen.). அதன் பின்னரே 1895ல் பூமியில் ஹீலியம் இருப்பது கண்டறியப்பட்டது.

2. ஆல்பர்ட் ஐன்ஸ்டீன் கண்டுபிடித்த சார்பியல் தத்துவம்( Relativity Theory of Light) நிரூபணம் செய்ய சான்று கிடைத்தது, 1919_ மே 19 இந்தியாவின் குண்டூரில் நிகழ்ந்த முழு சூரியகிரகணத்தின் போதுதான். கண்டறிந்தவர் ஆர்தர் எட்டிங்டன்( Arthur Eddington)

3. சூரியனின் வெளிப்பகுதியான ஒளி மகுடத்தை(Corona) பார்க்கவே முடியாது. 1930ல் நிகழ்ந்த முழு சூரியகிரகணத்தின்போது,ஜெர்மன் வானவியலாளர் வால்டர் க்ரோட்ரைன் (Walter Grotrian ), சூரிய கிரகணத்தின் போது சூரியனின் ஒளிவட்டம் மிகுந்த ஒளியுடன் தெரிந்ததையும், அதன் ஒளி மட்டுமல்ல, வெப்பமும் சூரிய பரப்பை விட அதிகமாக உள்ளதையும் கண்டறிந்தார். போட்டோஸ்பியர்(Photosphere) 5800 கெல்வின்.

இத்தனை அறிவியல் உண்மைகளையும் மனதில்கொண்டு, மிகத் துணிச்சலாக சூரிய கிரகணத்தை எதிர்கொள்ளலாம், தங்கள் பணிகளை வழக்கம்போல மேற்கொள்ளலாம் என்றும் அறிவியல் இயக்கத்தினர் தெரிவிக்கின்றனர்.