முக்கிய செய்திகள்

பேச்சு சுதந்திரத்தை அனுமதிக்காவிட்டால், நாடாளுமன்றத்தை மூடிவிடுங்கள்: பாஜக மீது சோனியா காந்தி கடும் தாக்கு…


மத்தியில் ஆளும் பாஜக பேச்சு சுதந்திரத்தை அனுமதிக்காமல், எதிர்க்கட்சிகளின் குரல்வளையை நசுக்குகிறது. இதற்கு பதிலாக, நாடாளுமன்றத்தை ஏன் மூடிவிட்டு அனைவரும் வீட்டுக்கு செல்லலாம் என்று மத்தியில் ஆளும் பாஜக மீது காங்கிரஸ் கட்சியின் முன்னாள் தலைவர் சோனியா காந்தி கடுமையாகச் சாடியுள்ளார்.

இந்தியா டுடே கன்கிளேவ் மும்பையில் நடந்தது. இதில் காங்கிரஸ் கட்சியின் முன்னாள் தலைவர் சோனியா காந்தி பங்கேற்றுப் பேசினார். அப்போது அவர் கூறியதாவது:

2014-ம் ஆண்டு பாஜக தலைமையிலான தேசிய ஜனநாயகக் கூட்டணி ஆட்சிக்கு வந்ததில் இருந்து, நமது சுதந்திரம் தாக்குதலுக்கு ஆளாகி இருக்கிறது. நாட்டில் ஒருவர் கருத்துக்களை மற்றொருவர் தாங்கிக் கொள்ள முடியாத அளவுக்கு சகிப்பின்மை வளர்ந்து வருகிறது.

சிறுபான்மை மக்களிடையே ஒரு விதமான அச்சம் ஏற்பட்டுள்ளது, அவர்கள் மிரட்டலுக்கு ஆளாக்கப்பட்டு இருக்கிறார்கள். இவர்களைத் தட்டிக்கேட்க வேண்டிய, நியாயத்தை கேட்க வேண்டிய குரல்கள் இன்னும் அமைதியாகவே இருக்கின்றன. இதன் காரணமாக, மத துவேஷங்களை தூண்டிவிட்டு, பதற்றம் அதிகரித்து வருகிறது. தேர்தலில் வெற்றி பெறுவதற்காக, பாஜக மக்களிடையே பிரித்தாலும் சூழ்ச்சியை பயன்படுத்தி வருகிறது. நமது நாடு மிகப்பெரிய வன்முறைகளுக்கு மத்தியில் இருந்துவருகிறது.

பிரதமர் நரேந்திர மோடி தலைமையிலான அரசு நாடாளுமன்றத்தில் அசுர பலத்துடன் இருந்து கொண்டு எதிர்கட்சிகளின் குரல்களை நசுக்கி வருகிறது. நாடாளுமன்றத்தில் எதிர்க்கட்சிகளை பேசவிடாவிட்டால், அவர்கள் பேச்சு சுதந்திரத்தை பறித்தால், நாடாளுமன்றத்தை மூடிவிட்டு அனைவரும் வீட்டுக்கு சென்று விடலாமே. முன்னாள் பிரதமர் வாஜ்பாய் நடத்திய அரசுபோன்று இப்போதுள்ள அரசு இல்லை. இப்போதுள்ள பாஜக அரசு நாடாளுமன்ற விதிகளையும், செயல்முறைகளையும் மதிப்பதில்லை.

கடந்த 2014-ம் ஆண்டு, மே 26-ம்தேதிக்கு முன் உண்மையிலேயே இந்தியாவில் மிகப்பெரிய பின்னடைவு இருந்ததா என்ற கேள்வி எழுகிறது. கடந்த 4ஆண்டுகளாக இந்தியா வளர்ச்சி, பொருளாதார மேம்பாடு, சிறப்பான நிலையை நோக்கி சென்றதா?.

பாஜகவின் ஆட்சியின் கீழ் நிர்வாகம் சீரழிந்துள்ளது. நமது நீதித்துறை குழப்பமான சூழலுக்கு உட்பட்டுள்ளது. தகவல் அறியும் உரிமைச் சட்டம் வெளிப்படைத் தன்மைக்காக காங்கிரஸ் அரசு கொண்டு வந்தது ஆனால், இன்று சட்டம் யாருக்கும் பயன்படுத்தப்படாமல், குளிர்பதன அறையில் பத்திரப்படுத்தப்பட்டுள்ளது.

காங்கிரஸ் அரசு கொண்டு வந்த ஆதார் திட்டம் இன்று மக்களின் அந்தரங்கங்களை ஊடுருவிப்பார்க்கும் கருவியாக மாற்றப்பட்டுள்ளது.

கடந்த 2014-ம் ஆண்டு தேர்தலில் நரேந்திரமோடி தலைமையிலான பாஜகவால் காங்கிரஸ் கட்சி தோற்கடிக்கப்பட்டது. அதற்கு முக்கிய காரணமாக எங்கள் அரசு மீது சுமத்தப்பட்ட ஊழல் குற்றச்சாட்டாகும். , 2ஜி அலைக்கற்றை ஊழல் குறித்து தரப்பட்ட மிகைப்படுத்தப்பட்ட அறிக்கையால், எங்கள் ஆட்சிக்கு அது மிகப்பெரிய பின்னடைவாக இருந்தது.

மக்களை புதிய வகையில் சென்று சேரும் வகையில், தொடர்பு கொள்ளும்வகையில், காங்கிரஸ் கட்சி செயல்படுவது அவசியம். அப்போதுதான் மீண்டு எழமுடியும். நம்முடைய திட்டங்களையும், கொள்கைகளையும் எப்படி செயல்படுத்துகிறோம் என்பதில்தான் வெற்றி அடங்கிஇருக்கிறது.

இவ்வாறு சோனியா காந்தி பேசினார்.