
மறைந்த முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவின் 73-வது பிறந்தநாளை முன்னிட்டு அவரது உருவப்படத்திற்கு சசிகலா மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார்
சொத்துக்குவிப்பு வழக்கில் சிறைக்கு சென்ற ஜெயலலிதாவின் தோழி சசிகலா கடந்த ஜனவரி 27-ஆம் தேதி விடுதலை பெற்றார். அதன்பின்னர் தமிழகம் வந்த சசிகலா எந்த நிகழ்ச்சியிலும் கலந்து கொள்ளாமல் இருந்தார்.
இந்நிலையில் இன்று ஜெயலலிதாவின் 73-வது பிறந்தநாளை முன்னிட்டு அவரது உருவப்படத்திற்கு சசிகலா மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார். பின்னர் பேசிய சசிகலா,
“நான் கொரோனாவில் இருந்தபோது கழக உடன்பிறப்புகள், பொதுமக்கள் எல்லோருடைய வேண்டுதலாலும் நலம் பெற்று தமிழகம் வந்தேன். ஜெயலலிதாவின் உண்மையான உடன் பிறப்புகள் ஒன்றிணைந்து மீண்டும் தேர்தலில் வெற்றி பெற்று ஆட்சியமைக்க வேண்டும்.
இன்னும் 100 ஆண்டுகளுக்கு மேலாக அதிமுக ஆட்சி இருக்கும் என்று ஜெயலலிதா சொல்லிவிட்டு சென்றார். அதை மனதில் வைத்து அனைவரும் ஒன்றாக இணைந்து செயல்படுவீர்கள் என்று நம்புகிறேன்.
நானும் அதற்கு உறுதுணையாக நிற்பேன். விரைவில் தொண்டர்கள், பொதுமக்களை சந்திப்பேன்” எனத் தெரிவித்தார்.