விரைவில் தமிழக கோயில்களின் வரலாறுகள் இணையத்தில் வெளியிடப்படும் இந்து அறநிலையத்துறை அமைச்சர் சேகர் பாபு தெரிவித்துள்ளார்.
இந்து சமய அறநிலையத்துறை கட்டுப்பாட்டில் உள்ள அனைத்து கோவில்களின் தல வரலாறு, ஓலைச்சுவடிகள், கல்வெட்டுகள் ஆகியவை முறையாக ஆவணப்படுத்தப்படும் என அத்துறையின் அமைச்சர் சேகர்பாபு தெரிவித்தார்.
இவை அனைத்தும் மின்னணு மயமாக்கப்பட்டு, பக்தர்கள் எளிதில் பார்வையிடக் காட்சிப்படுத்தப்படும் என்றும் அச்சிட்டு புத்தகங்களாக வெளியிட நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு வருகிறது என்றும் அவர் அறிக்கை ஒன்றில் குறிப்பிட்டுள்ளார்.
“ஆன்மிகப் பெரியோர்களால் வெளியிடப்பட்ட அரிய வகை நூல்கள், கோவில் தொடர்பான நூல்கள் உட்பட அனைத்து நூல்களையும் மறுபதிப்பு செய்யும் பணிகளும் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.
“துறையின் சார்பில் மாதந்தோறும் திருக்கோவில் திங்களிதழ் என்ற பெயரில் மாத இதழ் வெளியிடப்பட்டு, அதில் கோவில்களின் முக்கியத் திருவிழாக்கள், கோவில் வரலாறு, கல்வெட்டுகள் பற்றிய முக்கிய தகவல்கள் வெளியிடப்படுகின்றன,” என்று அமைச்சர் சேகர்பாபு கூறியுள்ளார். விரைவில் அனைத்து கோவில்களின் வரலாறுகளும் மறுபதிப்பு செய்யப்பட்டு இணையத்தளத்தில் வெளியிடப்படும் என்றும் அவர் தெரிவித்துள்ளார்.