தென்னிந்திய நடிகர் சங்க நிர்வாகிகள் தேர்தல் விறுவிறுப்பான வாக்குப்பதிவு…..

தென்னிந்திய நடிகர் சங்கத்துக்கான தேர்தல் சென்னை மயிலாப்பூரில் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது.

தென்னிந்திய நடிகர் சங்கத்தை, அடுத்த 3 ஆண்டுகளுக்கு நிர்வகிக்கும் நிர்வாகிகளைத் தேர்வு செய்வதற்கான தேர்தல், மயிலாப்பூரில் உள்ள புனித எப்பாஸ் மகளிர் மேல் நிலைப் பள்ளியில் நடைபெற்று வருகிறது.

இந்தத் தேர்தலில் விஷால் தலைமையிலான பாண்டவர் அணியும், கே.பாக்யராஜ் தலைமையிலான சுவாமி சங்கரதாஸ் அணியும் மோதுகின்றன.

ஆயிரத்து 100 தபால் வாக்குகள் உள்பட மொத்தம் 3 ஆயிரத்து 171 வாக்குகளைக் கொண்ட இந்த தேர்தல், காலை 7.30 மணிக்குத் தொடங்கியதும், நடிகர்கள் பாக்யராஜ், நாசர், விஷால் ஆகியோர் தங்களது வாக்குகளைப் பதிவு செய்தனர்.

முன்னதாக செய்தியாளர்களிடம் பேசிய விஷாலிடம் தேர்தல் பிரச்சனைகளுக்கு காரணம் தாங்கள் தான் என்ற குற்றச்சாட்டு உள்ளதே என்று கேட்கப்பட்டது.

இதற்குப் பதில் அளித்த அவர், தனக்கு வழங்கப்பட்டிருக்கும் பொறுப்புக்கு ஏற்றவாறே செயல்படுவதாகவும், அனைவரையும் குஷிப்படுத்த வேண்டும் என்றால், ஐஸ் கிரீம் தான் விற்க வேண்டும் என்று கூறினார்.

இதைத் தொடர்ந்து நடிகர் ஆர்யா, மிதிவண்டிப் பயிற்சி முடித்த கையோடு தனது வாக்கினைப் பதிவு செய்தார்.

ஆர்யாவை அடுத்து நடிகை சரண்யா பொன்வண்ணன், தனது கணவர் பொன் வண்ணனுடன் வந்து வாக்களித்தார்.

நடிகர்கள் ரமேஷ்கண்ணா, சின்னி ஜெயந்த், சார்லி, சுந்தர்.சி, மன்சூர் அலிகான், ராம்கி, மோகன், விதார்த் ஆகியோரும் வாக்களித்தனர்.

நடிகைகளில், கே.ஆர். விஜயா, ராதா, அம்பிகா, குஷ்பு, பூர்ணிமா பாக்யராஜ், வடிவுக்கரசி, ஆகியோர் ஆர்வத்துடன் ஓட்டு போட்டனர்.

காலை 9.45 மணி நிலவரப்படி, 475 வாக்குகள் பதிவாகி உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

தேர்தலை முன்னிட்டு சென்னை கிழக்கு மண்டல இணை ஆணையர் தலைமையில் 400 காவலர்கள் பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர்.

நடிகர் பார்த்திபனும் தனது வாக்கினைப் பதிவு செய்தார். அப்போது செய்தியாளர்களிடம் பேசிய அவர், இரண்டு அணியும் நல்லது செய்ய வேண்டும் என்று தான் ஆசைபடுவதாகக் கூறினார்.

பின்னர் பழம்பெரும் நடிகைகளான சச்சு, வெண்ணிற ஆடை நிர்மலா ஆகியோரும் நடிகர் சங்கத் தேர்தலில் வாக்களித்தனர்.

காலை 11.30 மணி அளவில் நடிகர் விஜய், வாக்களிக்க வந்தார். அவரைக் காண ரசிகர்கள் திரளவே போலீசார் பலத்த பாதுகாப்புடன் விஜயை வாக்கு மையத்துக்கு அழைத்துச் சென்றனர்.

வாக்கு மையத்திற்குள் இருந்த நடிகர் விவேக்குடன் சிறிது நேரம் பேசிய விஜய், தமது வாக்கினைப் பதிவு செய்தார்.

வாக்களித்து முடித்து விட்டு விஜய் வெளியே வந்த போது, போலீசார் அங்கிருந்தவர்களை தள்ளியதாகக் கூறப்படுகிறது. இதனால் நடிகர் சங்க உறுப்பினர்களுக்கும், போலீசுக்கு வாக்குவாதம் ஏற்பட்டது.

குடிநீர் விவகாரம் : மு.க. ஸ்டாலின் தலைமையில் வரும் 24-ம் தேதி கண்டன ஆர்ப்பாட்டம்

அரசு பள்ளிகளில் 19,426 ஆசிரியர்கள் உபரியாக உள்ளனர்: பள்ளிக்கல்வித்துறை..

Recent Posts