தென்மேற்கு பருவமழை கேரளாவில் வருகிற 25-ந் தேதி தொடங்க வாய்ப்பு..


தென்மேற்கு பருவமழை கேரளாவில் வருகிற 25-ந் தேதி தொடங்க வாய்ப்புள்ளது என்று வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
கேரளாவில் தென்மேற்கு பருவமழை ஆண்டுதோறும் ஜூன் மாதம் 1-ந்தேதி தொடங்குவது வழக்கம்.

இதற்கான அறிகுறிகள் தோன்றியதும் வானிலை ஆய்வு மையம் தென்மேற்கு பருவமழை தொடங்குவதற்கான வாய்ப்பு பற்றிய தகவலை வெளியிடும்.

அதன்படி, இந்த ஆண்டு தென்மேற்கு பருவமழை கேரளாவில் வருகிற 25-ந் தேதி தொடங்க வாய்ப்புள்ளது என்று இந்திய வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

தற்போது வளிமண்டல அடிப்பகுதியில் காற்று மேற்கு நோக்கி வீச தொடங்கி உள்ளது. மேலும் அரபிக்கடலில் இன்று முதல் மழை பெய்ய வாய்ப்பு ஏற்பட்டுள்ளது. இந்த மழை 17-ந்தேதி வரை நீடிக்கும் என்று வானிலை ஆய்வு மையம் எதிர்பார்க்கிறது. இந்த மழை தொடர்ந்தால் அதனால் ஏற்படும் வானிலை மாற்றம் காரணமாக தென்மேற்கு பருவமழை 25-ந்தேதி தொடங்கி விடும்.

கேரளாவில் தென்மேற்கு பருவமழை தொடங்கினால் நாட்டின் பிற பகுதிகளிலும் மழைக்கான வாய்ப்பு ஏற்படும் என்றும் வானிலை ஆய்வு மையத்தினர் தெரிவித்துள்ளனர்.

கேரளாவில் வருகிற 25-ந்தேதி தென்மேற்கு பருவமழை தொடங்கி விட்டால் அது கடந்த 7 ஆண்டுகளில் முன்கூட்டியே பருவமழை தொடங்குவது இதுதான் முதல் முறையாக இருக்கும்.

ஒவ்வொரு ஆண்டும் ஜூன் முதல் வாரம் தென்மேற்கு பருவமழை தொடங்கும் என்று எதிர்பார்த்து அது ஒரு வாரம் வரை தாமதமாவது வழக்கம். ஆனால் இந்த ஆண்டு மே மாத இறுதியிலேயே பருவமழை தொடங்கும் என்ற அறிவிப்பு எதிர்பார்ப்பை அதிகரித்துள்ளது.

கேரளாவில் தென்மேற்கு பருவமழை பெய்யும்போது குமரி மாவட்டத்தில் அதிகளவு மழை பெய்யும். இந்த ஆண்டு முன்கூட்டியே பருவமழை பெய்தால் குமரி மாவட்டத்திலும் அதிக மழை பெய்ய வாய்ப்பு ஏற்படும்.

ஜூன், ஜூலை மாதங்களில் பெய்யும் தென்மேற்கு பருவமழையின்போதுதான் குமரி மாவட்ட அணைகள் அனைத்தும் நிரம்புவது வழக்கம்.

கடந்த சில ஆண்டுகளாக பருவமழை பொய்த்ததால் போதுமான தண்ணீர் கிடைக்கவில்லை. இந்த ஆண்டு முன்கூட்டியே பருவமழை தொடங்கினால் குமரி மாவட்ட அணைகள் அனைத்தும் நிரம்ப வாய்ப்புள்ளது.

தென்மேற்கு பருவமழையின்போதுதான் தமிழகத்தின் 5 தென்மாவட்டங்களின் நீர் ஆதாரமாக திகழும் முல்லை பெரியாறு அணையிலும் நீர் பெருகும்.

இந்த ஆண்டு தென்மேற்கு பருவமழையை எதிர் கொள்ள முல்லை பெரியாறு அணையில் மத்திய குழு நேற்று ஆய்வு மேற்கொண்டது. அணையின் மதகுகள் நீர்வரத்து, பிரதான அணை, பேபி அணை பகுதிகளிலும் அதிகாரிகள் ஆய்வு மேற் கொண்டனர்.