இலங்கை குண்டு வெடிப்பு எதிரொலி: காவல்துறை தலைவர் ராஜினாமா

இலங்கையில் உளவுத்துறை எச்சரித்திருந்த நிலையிலும் குண்டு வெடிப்பு தாக்குதலைத் தடுக்கத் தவறியதாக எழுந்த குற்றச்சாட்டை அடுத்து காவல்துறை தலைவர் புஜித் செயசுந்தரா தமது பதவியை ராஜினாமா செய்துள்ளார்.  

இலங்கையில் நடத்தப்பட்ட தொடர் குண்டுவெடிப்பு தாக்குதலைத் தொடர்ந்து, அந்நாட்டில் நாள்தோறும் குண்டுவெடிப்புகள் குறித்த அச்சம் மக்களிடையே நிலவி வருகிறது. சில இடங்களில் இருந்து வெடிகுண்டுகளும் கைப்பற்றப்பட்டு வருகின்றன. ஈஸ்டர் பண்டிகை அன்று கடந்த ஞாயிற்றுக்கிழமை தீவிரவாதிகள் நிகழ்த்திய குண்டுவெடிப்பு குறித்து அச்சத்தில் இருந்து, இயல்பு நிலைக்கு திரும்ப அந்நாட்டு மக்கள் முயற்சித்துவரும் நிலையில், மீண்டும் தீவிரவாத தாக்குதல் நடைபெற வாய்ப்பு இருப்பதாக அமெரிக்கா, இங்கிலாந்து, நெதர்லாந்து, ஆஸ்திரேலியா உள்ளிட்ட பல்வேறு உலக நாடுகளும் எச்சரிக்கை விடுத்துள்ளன.

ஞாயிற்றுக்கிழமை தேவாலயங்கள் மற்றும் நட்சத்திர ஹோட்டல்களில் தற்கொலைப்படை தீவிரவாதிகள் நடத்திய தாக்குதலில் 359 பேர் உயிரிழந்ததாக தகவல்கள் வெளியான நிலையில், 253 பேர் உயிரிழந்த தாக அந்நாட்டு சுகாதாரத்துறை அமைச்சகம் தெரிவித்துள்ளதாக செய்திகள் வெளியாகியுள்ளன.

இந்நிலையில், இலங்கை அதிபர் சிறிசேன கேட்டுக் கொண்டதற்கிணங்க, அந்நாட்டின் காவல்துறைத் தலைவர் புஜித் ஜெயசுந்தரா தமது பதவியை ராஜினாமா செய்துள்ளார். குண்டுவெடிப்பு தாக்குதல் குறித்து உளவுத்துறை விடுத்த எச்சரிக்கை தமக்கு தெரிவிக்கப்படவில்லை என சிறிசேன கூறியிருந்தார். 

இலங்கையில் ஐஎஸ் பயங்கரவாத இயக்கத்தைச் சேர்ந்த 130 முதல் 140 பேர் இருப்பது தெரிய வந்திருப்பதாகவும், அவர்களில் 70 பேர் இதுவரை கைது செய்யப்பட்டிருப்பதாகவும் அதிபர் சிறிசேன தற்போது தெரிவித்துள்ளார்.

Shangri-La என்ற ஹோட்டலில் நிகழ்ந்த குண்டு வெடிப்பு தாக்குதலில், தேசிய தவுஹித் ஜமாத்தின் தலைவரும், இஸ்லாமிய தீவிரவாதியுமான ஜஹ்ரான் ஹாசிம் இறந்து விட்டதாகவும் அதிபர் சிறிசேனா கூறியுள்ளார். குண்டுவெடிப்பில் அவருக்கு துணையாக செயல்பட்ட மற்றொரு தீவிரவாதி  இல்ஹாம் அஹமத் இப்ராஹிம் என அடையாளம் காணப்பட்டிருப்பதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.

இதனிடையே, குண்டுவெடிப்பு சம்பவம் தொடர்பாக அந்நாட்டு வர்த்தகத்துறை அமைச்சர் ரிஷாத் பத்யூத்தின் சகோதருக்கு தொடர்பு இருப்பது தெரியவந்துள்ளது. இதனையடுத்து, அவரை இலங்கை போலீசார் கைது செய்துள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

இந்நிலையில், வெள்ளிக்கிழமை பள்ளிவாசல்களில் நடைபெறும் பொதுத் தொழுகை நிறுத்தப்பட்டு, வீடுகளுக்குள் இருந்த படியே இஸ்லாமியர்கள் தொழுகை நடத்தினர்.

 

வாரணாசியில் வேட்புமனுத் தாக்கல் செய்த பிரதமர் மோடி: ஓபிஎஸ் உள்ளிட்ட கூட்டணிக் கட்சித் தலைவர்களும் உடன் இருந்தனர்

பிக்பாஸ் 3 சீசனில் அனுஷ்ஷ்ஷ்காவா…!

Recent Posts