முக்கிய செய்திகள்

சொந்த மண்ணில் தென்னாப்பிரிக்காவை வீழ்த்திய இலங்கை!

 

தென் ஆப்ரிக்காவுக்கு எதிரான 2-வது டெஸ்ட் போட்டியில் வெற்றி பெற்று இலங்கை அணி தொடரை கைப்பற்றியது.

இலங்கையில் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள தென் ஆப்ரிக்கா 2 டெஸ்ட், 5 ஒருநாள், 1 டி20 போட்டியில் விளையாடி வருகிறது. இதில் இரு அணிகளுக்கும் இடையிலான டெஸ்ட் தொடர் முதலில் நடைபெற்றது. முதல் டெஸ்ட் போட்டியில் இலங்கை அணி வெற்றி பெற்றது. இதனையடுத்து 2-வது மற்றும் கடைசி டெஸ்ட் போட்டி கொழும்புவில் நடைபெற்றது.

இப்போட்டியில் டாஸ் வென்ற இலங்கை அணி பேட்டிங் செய்தது. முதல் இன்னிங்சில் அந்த அணி 338 ரன்களை எடுத்து ஆட்டமிழந்தது. அதிகபட்சமாக டி சில்வா 60, குணாதிலகா 57, கருணரத்னே 53 ரன்கள் எடுத்தனர். தென் ஆப்ரிக்கா தரப்பில் அபாரமாக பந்துவீசிய மகாராஜா 9 விக்கெட்டுகளை வீழ்த்தி அசத்தினார். இதனையடுத்து முதல் இன்னிங்ஸை துவக்கிய தென் ஆப்ரிக்கா அணி 124 ரன்களுக்கு ஆட்டமிழந்தது. அதிகபட்சமாக கேப்டன் டூ பிளசி 48 ரன்கள் எடுத்தார். மற்ற வீரர்கள் ஒற்றை இலக்க ரன்களில் ஆட்டமிழந்து ஏமாற்றினர். இலங்கை தரப்பில் சிறப்பாக பந்துவீசிய தனஞ்ஜயா 5 விக்கெட்டுகளையும், தில்ருவான் பெரேரா 4 விக்கெட்டுகளை வீழ்த்தினர்.

பின்னர் 214 ரன்கள் முன்னிலையுடன் 2-வது இன்னிங்சை துவக்கிய இலங்கை அணி 5 விக்கெட் இழப்புக்கு 275 ரன்கள் எடுத்து டிக்ளர் செய்தது. 490 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இமாலய இலக்குடன் களமிறங்கிய தென் ஆப்ரிக்கா அணி 3-ம் நாள் ஆட்டநேர முடிவில் 5 விக்கெட் இழப்புக்கு 139 எடுத்து திணறியது. இதனையடுத்து இன்று நான்காம் நாளாக ஆட்டத்தை தொடர்ந்த தென் ஆப்ரிக்கா அணிக்கு டி புருயின்-பவுமா ஜோடி சற்று ஆறுதல் அளித்தனர். இருவரும் 6-வது விக்கெட்டுக்கு 123 ரன்கள் சேர்த்தனர். 63 ரன்கள் எடுத்திருந்த நிலையில் பவுமா ஆட்டமிழந்தார். பின்னர் வந்த வீரர்களும் அடுத்தடுத்து ஆட்டமிழந்தாலும் மறுமுனையில் நிலைத்து நின்று ஆடிய டி புருயின் சதமடித்து ஆறுதல் அளித்தார். தென் ஆப்ரிக்கா அணி 290 ரன்களுக்கு ஆட்டமிழந்தது.  இதன்மூலம் 199 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்ற இலங்கை அணி 2-0 என தொடரை கைப்பற்றி அசத்தியது.