பூலோக வைகுண்டம் என்றழைக்கப்படும் ஸ்ரீரங்கம் ரங்கநாதர் கோயிலில் நடைபெறும் திருவிழாக்களில் முதன்மையான விழாவான வைகுண்ட ஏகாதசி விழாவின் முக்கிய நிகழ்ச்சியான சொர்க்கவாசல் திறப்பு வரும் ஜனவரி 6ஆம் தேதி நடைபெறுகிறது.
மார்கழி மாதத்தில், பன்னிரு ஆழ்வார்களில் ஒருவரான ஆண்டாள் அருளிய திருப்பாவையையும், மாணிக்க வாசகர் அருளிய திருவெண்பாவையும் பாடி கன்னிப்பெண்கள் நோன்பு இருப்பது காலம் காலமாக நடைபெற்று வருகிறது.
மேலும் பகவான் ஸ்ரீகிருஷ்ணருக்கு பிடித்தமான மாதமும் மார்கழி மாதம் தான். அதனால் தான் மாதங்களில் நான் மார்கழி என்று அருளியிருக்கிறார்.
வைணவ பக்தர்கள் மட்டுமல்லாமல், இந்துக்கள் அனைவரும் போற்றி வணங்கும் மிகப் புனிதமான மாதமாக மார்கழி மாதம் உள்ளது.
இந்த மாதத்தில் வைகுண்ட ஏகாதசி திருநாளும், சிவ பக்தர்களுக்கு உகந்த நாளான திருவாதிரை திருநாளும் வருகிறது.
வைணவ பக்தர்களின் திருவிழாக்களிலேயே மிகப்பெரிய திருவிழாவாக வைகுண்ட ஏகாதசி திருவிழா அனைத்து வைணவ ஆலயங்களில், ஆண்டு தோறும் கொண்டாடப்பட்டு வருகிறது.
இந்தவிழாவானது மார்கழி மாதத்தில் 21 நாள்கள் கொண்டாடப்படுவது வழக்கம். முதல் பத்து நாள்கள் பகல் பத்து எனவும், வைகுண்ட ஏகாதசி திருநாள் முடிந்த பின்பு 10 நாள்கள் இராப்பத்து எனவும் கொண்டாடப்படுவது மரபு.
அதிலும் பூலோக சொர்க்கம் என்றும், 108 வைணவ ஆலயங்களில் முதன்மையானதாகவும், பெரிய கோயில் என்றும் வைணவ பக்தர்களால் பயபக்தியுடன் போற்றப்படும் ஸ்ரீரங்கம் கோயிலில் வைகுண்ட ஏகாதசி திருவிழா வெகு விமரிசையாக கொண்டாடப்படும்.
இங்கு நடைபெறும் அனைத்து திருவிழாக்களும் புகழ்பெற்றவையாக இருந்தாலும், வைகுண்ட ஏகாதசி திருவிழாவிற்காகவே உலகம் முழுவதும் இருந்து லட்சக்கணக்கான பக்தர்கள் வந்து வைகுண்ட வாசனாகிய ஸ்ரீரங்கநாதரை தரிசித்துச் செல்வது வழக்கம்.
இந்த ஆண்டு பகல் பத்து விழா வியாழக்கிழமை திருநெடுந்தாண்டகத்துடன் தொடங்கியது. வெள்ளிக்கிழமை பகல் பத்து திருவிழா தொடங்கி, ஜனவரி மாதம் 5ஆம் தேதி வரை நடைபெறும்.
பின்னர் பகல் பத்து திருவிழாவின் கடைசி நாளில், நம்பெருமாளாகிய ஸ்ரீரங்கநாதர் மோகினி அலங்காரத்தில் எழுந்தருளுகிறார்.
இராப்பத்து திருவிழாவின் முதல் நாளான ஜனவரி 6ஆம் தேதியன்று, வைகுண்ட ஏகாதசி திருவிழாவின் முக்கிய நிகழ்வான சொர்க்க வாசல் எனப்படும் வைகுண்ட வாசல் திறப்பு நடைபெற உள்ளது.
இதில் உலகம் முழுவதும் இருந்து லட்சக்கணக்கான பக்தர்கள் கலந்து கொண்டு தரிசனம் செய்வார்கள்.
இதையடுத்து, இராப்பத்து நாட்களின் போது, தினந்தோறும், நம்பெருமாள் திருமாமணி மண்டபத்தில், அனைத்து ஆழ்வார்கள் மற்றும் ஆச்சாரியார்களுடன் சேவை சாத்தும் வைபம் நடைபெறும்.
அந்த நாட்களில் திருவாய்மொழி பாசுரங்களும் அபிநயம், வியாக்யானங்களுடன் அரையர்களால் சேவிக்கப்படும்.
விழாவிற்கான ஏற்பாடுகளை ஸ்ரீரங்கம் கோயிலின் இணை ஆணையர் பொன்.ஜெயராமன் உள்ளிட்ட அறங்காவலர் குழுவினர் சிறப்பாக செய்து வருகின்றனர்.