கொழும்பு: இலங்கை நாடாளுமன்றத் தேர்தலுக்கான வாக்கு பதிவு நாளை நடைபெறவுள்ளது.
உலகை அச்சுறுத்திக் கொண்டிருக்கும் கரோனா கிருமித்தொற்று விவகாரத்துக்கு மத்தியில் இலங்கை மக்கள் நாடாளுமன்றத் தேர்தலை எதிர்கொண்டுள்ளனர்.
ஆகஸ்ட் 5ம் தேதி (நாளை) நடைபெற உள்ள இத்தேர்தலில் நடப்பு அதிபர் கோத்தபய ராஜபக்சேவின் மூத்த சகோதரர் மகிந்த ராஜபக்சே போட்டியிடுகிறார்.
மகிந்த வெற்றிபெறும் பட்சத்தில் இவ்விரு சகோதரர்களும் இலங்கையின் பெரும்சக்திகளாக உருவெடுப்பர் என்றும் அரசியலமைப்பு சட்டத்தில் மாற்றங்களைக் கொண்டுவர இயலும் என்றும் அரசியல் பார்வையாளர்கள் கருதுகின்றனர்.
21 மில்லியன் இலங்கைக் குடிமக்கள் இத்தேர்தலில் வாக்களிக்க உள்ளனர். முகக்கவசம் அணிந்து, தங்களது சொந்த பேனாக்களைக் கொண்டு வாக்குச்சீட்டில் தங்களுக்குப் பிடித்த வேட்பாளரைக் குறிப்பிட உள்ளனர்.
ஏற்கெனவே இருமுறை தேதி அறிவிக்கப்பட்டு ஒத்திவைக்கப்பட்ட நிலையில் இம்முறை திட்டமிட்டபடி இலங்கை நாடாளுமன்றத் தேர்தல் நடைபெற உள்ளது.
இலங்கையில் மொத்தம் 2,816 பேர் கொரோனா கிருமித்தொற்றால் பாதிக்கப்பட்ட நிலையில் இதுவரை 19 இறப்புச் சம்பவங்கள் பதிவாகி உள்ளன.
26 ஆண்டுகளாக நீடித்த உள்நாட்டு மோதல்களை முடிவுக்குக் கொண்டுவந்ததால் நாடு முன்னேற்றப் பாதையில் செல்வதாக ராஜபக்சே சகோதரர்கள் குறிப்பிட்டு வருகின்றனர்.
இந்நிலையில் எதிர்க்கட்சி சார்பாக களமிறங்குகிறார் சஜித் பிரேமதாசா. இவரது தந்தை ரணசிங்க பிரேமதாசா கடந்த 1993ஆம் ஆண்டு மனித வெடிகுண்டால் கொல்லப்பட்டார். இம்முறை ராஜபக்சே சகோதரர்களுக்கு மக்கள் மத்தியில் அதிக செல்வாக்கு இருப்பதாக அரசியல் கவனிப்பாளர் ஜெயதேவா யங்கோடா தெரிவித்துள்ளார்.
“இதன் வெளிப்பாடாகவே கோத்தபய ராஜபக்சே மக்களால் நாட்டின் அதிபராகத் தேர்வு செய்யப்பட்டார். எனவே, மகிந்த ராஜபக்சே வெற்றி பெறுவது உறுதி. எவ்வளவு பெரும்பான்மையில் வெற்றி பெறுவார் என்பது மட்டுமே தற்போதுள்ள கேள்வி,” என்கிறார் ஜெயதேவா.
நாட்டின் பொருளாதார வளர்ச்சிக்காக தாம் முன்வைத்த திட்டங்களைச் செயல்படுத்த தமக்குப் போதுமான அதிகாரமில்லை என கடந்த வாரம் கூறினார் கோத்தபய ராஜபக்சே. தேர்தலில் அவரது சகோதரர் மகிந்த ராஜபக்சே வெற்றி பெறும் பட்சத்தில் கோத்தபய எதிர்பார்க்கும் அதிகாரம் கிடைக்கும்.