முக்கிய செய்திகள்

தன்னை உணர்ந்த தலைவராக ஸ்டாலின்…: செம்பரிதி

அய்ம்பதாண்டுக்கால அரசியல் அனுபவத்திற்குப் பின்னர் அந்த இடத்தில் அமர்ந்திருக்கிறார் திமுக தலைவர் மு.க.ஸ்டாலின்.

அதுமட்டுமல்ல, தன் மீதான விடாப்பிடியான விமர்சனங்களுக்கு என் உயரம் எனக்குத் தெரியும் என்ற கலைஞரின் பாணியிலான பதிலுடனேயே தனது முதல் உரையைத் தொடங்கி இருக்கிறார் ஸ்டாலின்.

கலைஞரைப் போல் எனக்கு பேச வராவிட்டாலும், எதையும் முயன்று பார்க்கும் துணிச்சலுடன் உங்கள் முன்னால் நிற்கிறேன் என்ற கட்டியத்துடன் தனது கருத்துரையைத் தொடங்கி இருக்கும் அவரது கவனம், தலைமைக்கான தகைமையை பளிச்சென வெளிச்சம் போட்டுக் காட்டி இருக்கிறது.

அண்மைக் காலமாக சமூகவலைத் தளங்களில், வாய்தவறி கூறும் வார்த்தைகளை வைத்தும், வெகு இயல்பான மனிதத் தடுமாற்றங்கள் நிகழும் தருணங்களை மையமாக வைத்தும், சமூக வலைத்தளங்களில் திராவிட இயக்கத்தின் மீது எதற்கென்று தெரியாமலேயே தீராத வன்மத்துடன் அலையும் அரைவேக்காட்டு அறிவிலிக் கூட்டத்தினர், மிக மோசமான விமர்சனங்களை அள்ளி இரைத்து வருகின்றனர்.

எத்தனை பெரிய அறிவியல் தொழில் நுட்பமும், ஓர் அறிவிலிச் சமூகத்தின் கையி்ல் சிக்கினால், அது எந்த அளவுக்கு இழிவான, அருவருப்பான வடிவத்தில் கையாளப்படும் என்பதற்கு மீம்ஸ் கலாச்சாரத்தில் ஊறிய தற்போதைய சமூக வலைத்தளங்களின் போக்கே தெளிவான சான்று. திராவிட முன்னேற்றக் கழகத்தையும், அதன் தலைவர் ஸ்டாலினையும் கிண்டலடித்து மீம்ஸ் போடும் மேதைகளுக்கு, அதனால் இந்தச் சமூகத்திற்கு நேர  இருக்கும் பேராபத்து தெரிந்திருக்க நியாயமில்லை. திராவிட இயக்கம் என்ற தமிழகத்தின் அரணை பலவீனப்படுத்தி, இடித்துத் தள்ளி விட்டால், சமூகநீதிப் பயிர்களை நாசம் செய்ய சமயம் பார்த்துக் காத்திருக்கும் பரிவாரங்கள் எந்தத் தடையுமின்றி எளிதில் உள்ளே புகுந்துவிடும் என்ற என்ற தன்னுணர்வும் அவர்களுக்கு இருக்க வாய்ப்பில்லை.

காலம் முழுவதும் கலைஞரை ஒரு கூட்டம் எந்தக் காரணத்திற்காக எதிர்த்ததோ, அதே கூட்டம், அதே காரணத்திற்காக, ஸ்டாலின் மீதும் அத்தகைய தாக்குதல்களைத் தொடர்ந்து கொண்டிருக்கிறது. இதுகுறித்த தெளிவான புரிதல் ஸ்டாலினுக்கு இருப்பதை அவரது உரை நன்றாகவே புலப்படுத்தி உள்ளது.

தந்தையைப் போல பேசத் தெரியவில்லை, அவரைப் போல தமிழை ஆளத் தெரியவில்லை என்றெல்லாம் முன்வைக்கப்படும் விமர்சனங்களுக்கான பதிலுடன் தனது உரையைத் தொடங்கியதன் மூலம், கலைஞருக்கும் தனக்குமான ஆளுமை வேறுபாட்டை, ஸ்டாலின்,  துல்லியமாகவே உணர்ந்தும்  இருக்கிறார். அதனைப் பிறருக்கு உணர்த்தியும் இருக்கிறார்.

“பேசத் தெரியாவிட்டால் என்ன, செயல் மூலம் என்னை நிரூபித்துக் காட்டுகிறேன்” என்பதையே, பொதுவெளிக்கு மட்டுமின்றி, கட்சியின் பொதுக்குழுவுக்குமான செய்தியாகவும் அவர் விடுத்துள்ளார்.

மாநகரத்தின் மேயராக, தொகுதியின் சட்டப்பேரவை உறுப்பினராக, உள்ளாட்சி அமைச்சராக, துணை முதலமைச்சராக அவரது செயல்பாட்டில் எந்தக் குறைபாட்டையும் சுட்டிக்காட்டிவிட எதிர்க் கட்சிகளாலும் முடியவில்லை. இரட்டைப் பதவிக்கு தடைவிதித்து, மேயர் பதவியைத் துறக்க வைத்த முன்னாள் முதலமைச்சர் ஜெயலலிதாவால், அந்தப் பதவியில் இருந்து ஸ்டாலின் ஆற்றிய சிறப்பான பணிகளுக்கான சுவடுகளை அழித்து விட முடியவில்லை. தமிழகத்திற்கு அரசியல் ரீதியாக இரண்டு வகைகளில் சிறந்து விளங்கும் தலைமை தற்போது தேவைப்படுகிறது.

ஒன்று – தமிழகம் இன்றுவரை தனித்து மிளிரக் காரணமாக இருக்கும் சமூகநீதி, பகுத்தறிவு, மதநல்லிணக்கம் சார்ந்த கோட்பாட்டுரீதியான அடையாளங்கள் காக்கப்பட வேண்டும்.

இரண்டு – விவசாயம், தொழில் உற்பத்தி, பொருளாதார வளர்ச்சி, வேலைவாய்ப்பு, மாநில உரிமை என அனைத்துத் தளங்களிலும் தடுமாறி நிற்கும் தமிழகத்தின் அரசு இயந்திரத்தை சீரமைத்து முழு வீச்சுடன் இயங்கச் செய்ய வேண்டும்.

இவற்றில் முதல் தேவைக்கான அடிப்படைகளை, திமுகவைத் தவிர பிற அரசியல் கட்சிகள் முழக்கங்களாக கூட முன்வைக்கும் நிலையில் இல்லை. பெரியார், அண்ணா, கலைஞரின் தொடர்ச்சியாக இன்று நம்முன் எஞ்சி நிற்கும் ஓரே தலைமை ஸ்டாலின் மட்டும்தான்.

இரண்டாவது தேவையைப் பொறுத்தவரை திமுக ஆட்சியில் இருந்த போது, தனது சிறப்பான செயல்பாட்டின் மூலம் ஸ்டாலின் நிரூபித்திருக்கிறார்.

இந்த இரண்டு காரணங்களுக்காகவே ஸ்டாலின் தமிழகத்திற்கு தற்போது தேவைப்படுகிறார்.

தத்துவார்த்த ரீதியாகவும், தகவமைப்பு ரீதியாகவும் தமிழகத்தின் எதிர்காலம் குறித்த தெளிவான பிரகடனங்களையும் அவர் தனது முதல் உரையில் உரத்து ஒலிக்கத் தவறவில்லை.

நாட்டுக்கே காவியடிக்க முயலும் மோடியின் ஆட்சிக்கு முடிவு கட்ட புறப்பட்டு வா என திமுக உடன்பிறப்புகளுக்கு அவர் விடுத்துள்ள அழைப்பு முக்கியமானது. பாஜகவின் பக்கம் திமுக சாய்ந்து கொண்டிருப்பதாக நிலவும் பேச்சுக்கு முற்றுப்புள்ளி வைக்கும் பதிலாக, முத்தாய்ப்பான கொள்கை முழக்கங்களில் ஒன்றாகவே ஸ்டாலின் அதனை முன்வைத்திருக்கிறார்.

அண்ணாவின் பேச்சை சிறுவனாக மேடையருகே நின்று பதிவு செய்த போது, தாம் மேடையேறி பேசுவேன் என நினைத்ததில்லை என்கிறார்.

தந்தையை முதலமைச்சராக பார்த்த இளம் வயதில் தானும் இந்தக் கட்சிக்கு ஒருநாள் தலைமை ஏற்பதற்கான வாய்ப்புக் கிடைக்கும் எனக் கருதியதில்லை  எனக் கூறியிருக்கிறார்.

இவற்றையெல்லாம், ஒரு யதார்த்தமான மனநிலை கொண்ட மனிதராகவே அவர் வெளிப்படுத்தி இருப்பதைப் பார்க்க முடிகிறது. அதில், பாசாங்கோ, பசப்பலோ இருப்பதாக தெரியவில்லை.

இளைஞர் திமுகவைத் தொடங்கி, அதனை இளைஞரணியாக ஸ்டாலின் வளர்த்த கதைகளை ஊடகங்கள் இன்று வேறு வழியின்றி பேசிப்பேசி ஓய்கின்றன. ஆம்; தமிழகத்தின் தவிர்க்க முடியாத தேவையாகவும், தலைவராகவும் ஸ்டாலின் பரிணமித்திருக்கிறார். அது மட்டுமின்றி, தனக்கான தனித்துவமான அரசியல் பாணியையும், பாதையையும் வரையறுத்து வடிவமைக்கும் திறனையும் அவர் கலைஞரிடமிருந்தே  பெற்றிருக்கிறார்.

கலைஞரிடமிருந்து தாம் பேசக் கற்கவில்லை எனினும், துணிச்சலைக் கற்றிருக்கிறேன் என்ற பிரகடனத்தில் இருந்தே தன்னை உணர்ந்த தலைவராக ஸ்டாலின் உருவாகி இருக்கிறார் என்பதை அறிய முடிகிறது.

தன்னைப் பற்றிய சுய விமர்சனத்தையே பிரகடனமாக முன்வைக்கும் தலைமைப் பண்பு இன்றைய அரசியலில் எத்தனை பேருக்கு இருக்கிறது? அத்தகைய சால்புடைமையே தலைவராவதற்கான சகல தகுதிகளையும் கொண்டவராக ஸ்டாலினை உயர்த்தி இருக்கிறது என்பதை மறுத்துவிட முடியுமா?

அது மட்டுமல்ல, திராவிட இயக்கத்தைக் கட்டிக்காக்க வேண்டிய மகத்தான பொறுப்பு தம்மீது சுமத்தப் படும் தருணத்தை, தாம் புதிதாக பிறந்த தருணமாகவே அவர் உருவகித்திருக்கிறார்.

கருத்துரிமை முதல் பெண்ணுரிமை வரை பெரியார், அண்ணா, கலைஞர் வழியாக கூர்தீட்டப்பட்ட கொள்கைகளில் திமுக எப்போதும் பின்வாங்காது என்ற உறுதியையும் ஸ்டாலின் அளித்திருக்கிறார்.

அனைத்து அரசியல் விழுமியங்களும் நீர்த்துப் போன தற்போதைய காலத்தில், குறைந்த பட்ச கொள்கைசார் அரசியலைப் பேசும் தலைவராக ஸ்டாலின் மட்டுமே கண்ணுக்குத் தெரிகிறார். கொள்கை என்பது ஓர் அரசியல் கட்சிக்கு முழக்கம் மட்டுமல்ல, அரசியல் பயணத்தில்  அக்கட்சியும், தலைமையும் தடம்புரண்டு தடுமாறி விழுந்துவிடாமல் தடுக்கும் அரணாகவும் தாங்கிப் பிடிக்கக் கூடியது. அத்தகைய கொள்கை அரண் திமுகவைத் தவிர வேறு எந்தக் கட்சியிலும் இருப்பதாக நம்மால் நம்பிவிட முடியுமா?    

உல்லாச விடுதிகளில் உருவான அரசியல் சதிகளால் ஏற்பட்ட திடீர் இடைவெளி மூலமாக உள்ளே புகுந்து ஸ்டாலின் தலைவராகி விடவில்லை. படிப்படியாக நகர்ந்தும், பணியாற்றியும் அவர் இந்தப் பதவியை அடைந்துள்ளார் என்பதை யாரும் மறுத்துவிட முடியாது. முன்னாள் மத்திய அமைச்சர் ஆ.ராசா தமது உரையில் இந்தப் பின்னணியை தெளிவாகவே சுட்டிக்காட்டினார். திடீரென கட்சியையும், ஆட்சியையும் எந்தத் தகுதியுமின்றி கைப்பற்றிய உத்தரப்பிரதேசத்தின் அகிலேஷ் யாதவ் தொடங்கி, ஹரியானாவின் சவுதாலாக்கள் வரையிலான சங்கடமான கதைகளையும் ஆ.ராசா அதற்கு உதாரணங்களாக எடுத்துக் காட்டினார்.

தந்தை பெரியார், பேரறிஞர் அண்ணா, முத்தமிழறிஞர் கலைஞர் ஆகிய மூன்று ஆளுமைகளின் அரசியல் திட்பத்தையும் உள்வாங்கிய திரட்சியாகவே ஸ்டாலின் உருவெடுத்திருக்கிறார் என்பதை, “தமிழினமே… உனக்காக என் இறுதி மூச்சு உள்ளவரை பாடுபடுவேன்” என்ற அவரது முத்தாய்ப்பான முழக்கமே உறுதிப்படுத்துகிறது.

“தளபதியே வா.. .தலைமை ஏற்க வா…” என பல ஆண்டுகளாக காத்திருந்த திமுக தொண்டர்களின் இன்றைய கொண்டாட்டத்திற்கு அழுத்தமான அர்த்தமிருப்பதாகவே தெரிகிறது.

    

Stalin, A leader  Realized Himself