கலைஞரிடம் கற்றது பேச்சல்ல, துணிச்சல்: திமுக தலைவர் மு.க.ஸ்டாலின்

திமுக தலைவராக பொறுப்பேற்ற பின்னர் மு.க.ஸ்டாலின் ஆற்றிய முதல் உரையில் இருந்து…

பகுத்தறிவு-சுயமரியாதை-சமூக நீதி-சமத்துவம் எனும் நான்கு தூண்களால் எழுப்பப்பட்ட இயக்கம்தான் திராவிட முன்னேற்றக் கழகம். பெரியாரையும் அண்ணாவையும் நெஞ்சில் விதைத்திருக்கிறார் கலைஞர். அவரைப் போல எனக்குப் பேசத் தெரியாது. பேசவும் முடியாது. ஆனால் எதையும் முனைந்து செயல்படுத்தும் துணிவு உண்டு.

இன்று நீங்கள் கேட்கும் பார்க்கும் மு.க.ஸ்டாலின் ஆகிய நான் புதிதாக பிறக்கிறேன். இது வேறொரு நான்.

திராவிட இயக்க மரபணுக்களோடு, நல்லதொரு எதிர்காலத்தை உருவாக்கும் கனவுகளோடு நான் பிறந்திருக்கிறேன். என்னுடன் பிறந்திருக்கும் கோடிக்கணக்கான உடன்பிறப்புகளுக்கும் வாழ்த்துகள். என் உயிரினும் மேலான தலைவர் கலைஞரின் உடன்பிறப்புகளே நீ இல்லாமல் என் கனவுகளை மெய்ப்பிக்க முடியாது.

வா.. என்னோடு கை கோர்க்க வா. இந்தியா முழுவதும் காவி வண்ணம் அடிக்க நினைக்கும் மோடி அரசுக்கு பாடம் புகட்ட வா. முதுகெலும்பில்லாத மாநில அரசை தூக்கி எறிய வா.
தந்தை பெரியார் கற்றுத்தந்த சுயமரியாதை-பெற்றுத் தந்த சமத்துவத்திலிருந்து ஒரு போதும் நாம் பின்வாங்கப் போவதில்லை.

நான் முன்னே செல்கிறேன்.. நீ பின்னே வா என அழைக்கவில்லை. நாம் அனைவரும் சேர்ந்தே செல்வோம் என அழைக்கிறேன். மூத்தவர்கள் எல்லோரும் என் அண்ணன்கள், அக்காக்கள். இளையவர்கள் எல்லோரும் என் தம்பிகள், தங்கைகள். இதுதான் என் குடும்பம். நானும் ஒரு தொண்டன். இங்கு அனைவரும் சமம். தலைமைக்கு கட்டுப்பட்டவர்களாக நீங்கள் இருக்க வேண்டும். உங்கள் எண்ணங்களை பிரதிபலிப்பதாக தலைமை இருக்கும்.

என் கடைசி மூச்சு உள்ளவரை, என் கடைசி இதயத்துடிப்பு உள்ளவரை என் உயிருனும் மேலான தமிழினமே உனக்காக உழைப்பேன். உனக்காகப் போராடுவேன்.

Stalin first speech as DMK Chief

நன்றி – கோவி லெனின் முகநூல் பதிவில் இருந்து