ஈபிஎஸ், ஓபிஎஸ்சுடன் ஒரே மேடையில் ஸ்டாலின், கனிமொழி: இது தமிழகம் தானா?

முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி, துணை முதலமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் ஆகியோருடன் ஓரே மேடையில், திமுக தலைவர் ஸ்டாலின், கனிமொழி, டி.டி.வி தினகரன் ஆகியோர் பங்கேற்கப் போகின்றனர் என்றால் உங்களால் நம்ப முடிகிறதா… எம்.ஜி.ஆர் நூற்றாண்டு நிறைவு விழாவில் இது உண்மையாகவே நடைபெறப் போகிறது.

அதிமுக நிறுவனர், முன்னாள் முதல்வர் எம்ஜிஆரின் நூற்றாண்டு நிறைவு விழா வரும் செப்.30 அன்று நந்தனம் ஒய்.எம்.சி.ஏ மைதானத்தில் பிரம்மாண்டமாக நடைபெற உள்ளது. இதற்கான அழைப்பிதழைக் கண்டு அரசியல் ஆர்வலர்கள் திகைத்துப் போயுள்ளனர்.

திமுக திராவிடர் கழகத்திலிருந்து 1949-ம் ஆண்டு தொடங்கப்பட்டது. அப்போது திமுகவிலிருந்த சிவாஜி கணேசன் பின்னர் காங்கிரஸுக்கும், காங்கிரஸ் ஆதரவாளராக இருந்த எம்ஜிஆர் அண்ணாவின் எழுத்தாளுமையால் ஈர்க்கப்பட்டு கருணாநிதியின் நட்பான அழைப்பை ஏற்று திமுகவுக்கும் வந்தனர்.

திமுகவால் எம்ஜிஆரும், எம்ஜிஆரால் திமுகவும் வளர்ந்தது என்றால் அது மிகையாகாது. அண்ணாவின் பேச்சாற்றல், கருணாநிதி உள்ளிட்ட தலைவர்களின் அயராத உழைப்பு, என்.எஸ்.கே, எஸ்.எஸ்.ஆர், கே.ஆர்.ராமசாமி போன்றோரின் கலையுலக அர்ப்பணிப்பு காங்கிரஸ் ஆட்சியின் மேல் இருந்த வெறுப்பு போன்ற காரணங்கள் 1967-ல் காங்கிரஸை வீழ்த்தி திமுக வெற்றி பெறக் காரணமாக இருந்தாலும் எம்ஜிஆர் எனும் சக்தியும், தேர்தல் நேரத்தில் அவர் சுடப்பட்டதும் மிக முக்கியக் காரணங்களில் ஒன்று என்று அரசியல் ஆர்வலர்கள் கூறுவார்கள்.

அண்ணாவின் மறைவுக்குப் பின்னர் கருணாநிதி முதல்வராவதற்கு எம்ஜிஆர் பெரிதும் ஆதரவாக இருந்தார் என்பது வெளிப்படை. திமுகவுக்கு பெரிய செல்வாக்காக இருந்த எம்ஜிஆர் கருணாநிதிக்குப் பிறகு திமுகவின் பொருளாளரானார். 1972-ல் கருணாநிதியுடன் ஏற்பட்ட பிணக்கில் திமுகவிலிருந்து வெளியேற்றப்பட்டு அதிமுகவைத் தொடங்கினார்.

பின்னர் திமுகவிற்குப் பெரிய சவாலாக இருந்த எம்ஜிஆர் உயிருடன் இருந்தவரை 1987 வரை திமுக ஆட்சிக்கே வரமுடியாத நிலை இருந்தது. ஜெயலலிதாவை அறிமுகப்படுத்தியது எம்ஜிஆர். அவரது மறைவுக்குப் பின்னர் அவர் தலைமையேற்று திமுக ஆட்சிக்குப் பெரும் சவாலாக இருந்தார்.

இவ்வாறு திமுகவிலும், அதன் பின்னர் தனிக்கட்சி தொடங்கியபோதும் தமிழக அரசியலில் பெரிய சக்தியாக இருந்தவர் எம்ஜிஆர். அவர் 1917-ம் ஆண்டு ஜனவரி மாதம் 17-ம் தேதி பிறந்தார். எம்ஜிஆரின் நூற்றாண்டு கடந்த ஜனவரி முதல் கொண்டாடப்பட்டு வருகிறது. அதன் நிறைவு விழா வரும் செப்.30 அன்று நந்தனம் ஒய்.எம்.சி.ஏவில் நடைபெற உள்ளது.

ஜெயலலிதா இருந்தவரை திமுக, அதிமுக எதிர் எதிர் துருவங்களாக இருந்தது. ஒருவர் இல்லத் திருமணத்தில் இன்னொருவர் கலந்துகொள்ள மாட்டார்கள். ஒரே குடும்பத்தைச் சேர்ந்தவர்கள் அதிமுக- திமுகவில் இருந்தால் அவர்கள் இல்ல நல்லது கெட்டதுக்குக்கூட அழைக்கமாட்டார்கள். அந்த அளவுக்கு கடுமையாகப் பிரச்சினை இருந்தது.

இந்நிலையில் ஜெயலலிதா மறைவுக்குப் பின்னர் இந்த நிலை சற்று தளர்ந்தது. கருணாநிதியின் மறைவுக்குப் பின்னர் திமுக அதிமுக தலைவர்கள் மீண்டும் மோதிக்கொண்டனர். சமீப காலமாக ஊழல் விவகாரத்தில் திமுக, அதிமுகவை கடுமையாக விமர்சித்து வருகிறது. இந்நிலையில் எம்ஜிஆர் நூற்றாண்டு விழா அழைப்பிதழில் ஸ்டாலின், கனிமொழி வாழ்த்துரை என்று போட்டுள்ளது அனைவரையும் ஆச்சர்யத்தில் ஆழ்த்தியுள்ளது.

அதைவிட ஆச்சர்யம் டிடிவி தினகரன் பெயர் அழைப்பிதழில் உள்ளது. திமுகவைக்கூட ஏற்றுக்கொள்ளும் ஓபிஎஸ், ஈபிஎஸ் அணியினர் டிடிவி தினகரனை ஜென்ம வைரியாகப் பார்க்கின்றனர். அழைப்பிதழில் அவரது பெயரும் உள்ளது. கடும் விமர்சனமும், தங்களுக்குச் சவாலாக இருக்கும் டிடிவி தினகரனுடன் ஒரே மேடையில் எப்படி அமர்வார்கள் என்பது அனைவரின் எதிர்பார்ப்பு.

ஆனாலும், டிடிவி தினகரனுக்கு அங்கீகாரம் கொடுப்பதுபோல் கொடுத்து கடைசியில் மாவட்டச்செயலாளர்களுக்கு கீழே அவர் பெயர் அழைப்பிதழில் உள்ளது. இதன் காரணமாக அவர் நிகழ்ச்சியில் பங்கேற்பாரா? என்பது தெரியவில்லை. அரசியலில் எதிர்ரெதிர் திசையில் இருந்தாலும் வடமாநிலங்கள் போல் தனிப்பட்ட நட்பைப் பேணும் பண்பு வளர்வது தமிழக அரசியலில் ஒரு ஆரோக்கிய நிகழ்வாகக் கூறலாம்.

Stalin to share same stage with EPS, OPS!