தமிழகத்தில் இரட்டை ஆட்சி: ஸ்டாலின் விளாசல்

தமிழகத்தில் ஆளுநர் ஒரு பக்கமும், முதலமைச்சர் பழனிசாமி மறுபக்கமும் என இரட்டை ஆட்சி நடைபெற்று வருவதாக திமுக செயல்தலைவரும், எதிர்க்கட்சித் தலைவருமான ஸ்டாலின் சாடியுள்ளார். பேரவையில் புதன் கிழமை ஆளுநர் மாவட்டங்களுக்கு சென்று ஆய்வு நடத்துவது குறித்து நேரமில்லா நேரத்தில் எதிர்க்கட்சித் தலைவர் ஸ்டாலின் கேள்வி எழுப்பினார். இதுகுறித்து முதலமைச்சர் பதிலளிக்க வேண்டும் எனவும் வலியுறுத்தினார். இதற்கு, ஆளுநர் ஆய்வு விவகாரம் குறித்தெல்லாம் பேரவையில் விவாதிக்க முடியாது என சபாநாயகர் தனபால் தெரிவித்தார். முதலமைச்சர் பழனிசாமியும் எந்தப் பதிலும் தெரிவிக்காமல் அமைதிகாத்தார்.  இதையடுத்து திமுக உறுப்பினர்கள் அவையில் இருந்து வெளிநடப்பு செய்தனர். வெளியில் வந்து செய்தியாளர்களிம் பேசிய ஸ்டாலின் கூறியதாவது:

சில நாட்களுக்கு முன்னர் ஆளுநர் எந்த ஆய்வையும் மேற்கொள்வதில்லை என ஆளுநர் மாளிகை தரப்பிலேயே தெரிவிக்கப்பட்டது. தற்போது, ஆளுநர் மாவட்ட அதிகாரிகளைச் சந்திக்க இருப்பதாக ஆளுநர் மாளிகையில் இருந்து வெளிவரும் செய்திக் குறிப்பே வெளியிடப்பட்டுள்ளது. தலைமைச் செயலாளர் கிரிஜா வைத்தியநாதன் மூலம் இதுபோன்ற நடவடிக்கைகளை ஆளுநர் மேற்கொண்டு வருகிறார். இவையெல்லாம் தமிழக அரசுக்கு தெரியுமா.. முதலமைச்சர் பழனிசாமிக்கு தெரிந்துதான் நடைபெறுகிறதா… என்று விளக்கமளிக்குமாறு பேரவையில் கேள்வி எழுப்பினேன். முதலமைச்சர் பழனிசாமி எந்தப் பதிலும் கூறாமல் அமைதிகாத்தார். அவர்களது இந்தப் போக்கைக் கண்டித்து அவையில் இருந்து வெளிநடப்பு செய்தோம். முதலமைச்சர் பழனிசாமி நடத்துவது அடிமை ஆட்சி என்றால், ஆளுநர் பன்வாரிலால் வேறுமாதிரி ஆட்சியை நடத்திக் கொண்டிருக்கிறார். தமிழகத்தில் இரட்டை ஆட்சி நடைபெற்று வருகிறது என்பதுதான் உண்மை.

இவ்வாறு ஸ்டாலின் தெரிவித்தார்.  

Stalin Walk out From Assembly