மாநிலங்களுக்கு உள்ளே பயணிக்க இ பாஸ் கூடாது: மத்திய உள்துறை செயலர் அதிரடி..

நாடு முழுவதும் கரோனா தொற்றால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கையானது 30 லட்சத்தினை நெருங்கிக் கொண்டிருக்கையில், அன்லாக் 3 க்கான மத்திய அரசின் வழிகாட்டுதலின்படி மாநிலத்திற்கு இடையேயான போக்குவரத்து மற்றும் மாநிலத்திற்குளேயான போக்குவரத்திற்கு மாநில அரசுகள் விதித்துள்ள தடைகளை நீக்க வேண்டும் என்று மத்திய உள்துறை செயலாளர் இன்று அனைத்து மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களின் அரசாங்கங்களுக்கு எழுதியுள்ள கடிதத்தில் தெரிவித்துள்ளார்.
கரோனா நெருக்கடி காரணமாக மார்ச் மாதத்திலிருந்து பொது முடக்கமும் அதன் ஒரு அங்கமாக போக்குவரத்திற்கு கடும் கட்டுப்பாடுகளும் விதிக்கப்பட்டன. அதன் பின்னர் லாக்டவுன் 5 வழிகாட்டுதலின் ஒரு பகுதியாக மே மாதத்தில் பொது போக்குவரத்தைத் தவிர்த்து இதர போக்குவரத்திற்கு கட்டுப்பாடுகளுடன் அனுமதி அளிக்கப்பட்டது.

இந்நிலையில் தற்போது மாநிலத்திற்கிடையேயான மற்றும் மாநிலத்திற்கு உள்ளேயான போக்குவரத்திற்கு கட்டுப்பாடுகள் பல மாநிலங்களில் மாவட்ட அளவிலான அதிகாரிகளால் விதிக்கப்பட்டிருந்தது. இதனால் விநியோகச் சங்கிலிகளை மோசமாக பாதிக்கும் என்றும் அதன் மூலம் பொருளாதார நடவடிக்கைகள் மற்றும் வேலைவாய்ப்பை சீர்குலைக்கும் என்றும் உள்துறை அமைச்சகம் இன்று தனது கடிதத்தில் தெரிவித்துள்ளது. இதன் காரணமாக மாநிலங்களுக்கிடையேயும், உள்ளேயும் மக்கள் பயணிப்பதற்கும், பொருட்களை கொண்டு செல்வதற்கும் இனி இ-பாஸ் அவசியமில்லை என்று உள்துறை செயலாளர் அஜய் குமார் பல்லா தெரிவித்துள்ளார்.

இதுபோன்ற கட்டுப்பாடுகளை தொடர்ந்து திணிப்பது பேரிடர் மேலாண்மை சட்டம், 2005-ன் கீழ் மத்திய உள்துறை அமைச்சகம் வழங்கப்பட்ட வழிகாட்டுதல்களை மீறுவதாக கருதப்படும் என்றும், எனவே கட்டுப்பாடுகள் ஏதேனும் இருந்தால் அவற்றை அகற்றவும், உள்துறை அமைச்சக வழிகாட்டுதல்கள் பின்பற்றப்படுவதை உறுதி செய்யவும் அனைத்து மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேச அரசுகளை அவர் கேட்டுக்கொண்டுள்ளார்.

முன்னதாக கடந்த மாதம், “அன்லாக் 3” வழிகாட்டுதல்களை அறிவிக்கும் போது இ-பாஸ் நடைமுறை அவசியமற்றது என குறிப்பிட்டிருந்தது.

இந்நிலையில் தற்போதைய அன்லாக் 3 செயல்முறையானது இம்மாதம் இறுதியில் காலாவதியாகிறது என்பது குறிப்பிடத்தக்கது.