சிலை கடத்தல் வழக்குகள் நேர்மையாக நடைபெற்று கொண்டிருக்கும் போது, திடீரென வழக்குகளை சி.பி.ஐ.யிடம் ஒப்படைக்க அரசு முடிவெடுத்திருப்பதில் அரசியல் உள்நோக்கம் உள்ளதாக ஸ்டாலின் குறிப்பிட்டுள்ளார்.
இது தொடர்பாக அவர் விடுத்துள்ள அறிக்கையில், சிலை திருட்டு வழக்குகளை சி.பி.ஐ.யிடம் ஒப்படைக்க அரசு கொள்கை முடிவு எடுத்திருப்பதாக தெரிவித்திருப்பது வியப்பளிப்பதாக தெரிவித்துள்ளார்.
உயர்நீதிமன்றத்தின் நேரடி மேற்பார்வையில் நடைபெற்று வரும் ஒரு விசாரணையில் அதிமுக அரசு இப்படியொரு திடீர் நிலைப்பாட்டை எடுத்திருப்பது உள்நோக்கம் நிறைந்ததாகவே தெரிவதாக குறிப்பிட்டுள்ளார்.
இந்து சமய அறநிலையத்துறை கூடுதல் ஆணையர் கவிதாவை கைது செய்தும், விசாரணையில் எந்த முன்னேற்றமும் இல்லை என்று உயர்நீதிமன்றத்தில் அதிமுக அரசு தெரிவித்திருப்பதில் ஏதோ மர்மம் இருப்பதாக விமர்சித்துள்ளார்.
ஐ.ஜி.பொன்மாணிக்கவேல் தலைமையிலான சிலை திருட்டு தடுப்புப் பிரிவு விசாரணைக்கு முழு ஒத்துழைப்பும் வழங்கி, திருடு போன கோயில் சிலைகளை முறையாகக் கண்டுபிடிப்பதற்கு வழி விடவேண்டும் என அரசுக்கு ஸ்டாலின் வலியுறுத்தியுள்ளார்.