முக்கிய செய்திகள்

‘சொர்க்கமும் இல்லை, நரகமும் இல்லை எல்லாம் கற்பனைக் கதை’: ஸ்டீபன் ஹாக்கிங்கின் மறக்க முடியாத பேட்டி…


சொர்க்கமும் இல்லை, நரகமும் இல்லை. எல்லாம் கற்பனைக் கதை என்று ஸ்டீபன் ஹாக்கிங் ஒருமுறை தி கார்டியனுக்கு அளித்தப் பேட்டியை இன்று நாம் நினைவுகூர்வது அவருக்குச் செய்யும் அஞ்சலியாகும்.

ஸ்டீபன் ஹாக்கிங்…அறிவியல்பூர்வமான பிரபஞ்ச தரிசனத்தின் குரலாக அறியப்பட்டார். ஆம்யோட்ராஃபிக் லேடெரல் ஸ்கிலிராசிஸ் (Amyotrophic Lateral Sclerosis – ALS) என்ற தசை உருக்கி நோய் அவரை அவருடைய 21-ஆம் வயதில் தாக்கியது. மெல்ல மெல்ல உடலியக்கத்தையும், பேசும் திறனையும் பறிகொடுத்தார்.

மரணம் நெருங்கிவிட்டதாக மருத்துவர்கள் கூறினார்கள். ஆனாலும், சக்கர நாற்காலியில் வலம் வந்தவாறு ஆய்வுகளைத் தொடர்கிறார். கணினி பேச்சுத் தொகுப்பி மூலம் (Speech generating device) மற்றவர்களுடன் தொடர்பு கொண்டார்.

எளிய மனிதர்களும் அண்டவெளி அறிவியல் பற்றி தெரிந்துகொள்ள வேண்டும் என்பதையே இலக்காகக் கொண்ட ஸ்டீபன் ஹாக்கிங் தி கார்டியன் இதழுக்கு ஒருமுறை அளித்தப் பேட்டி உலகளவில் வாதவிவாதங்களுக்கு வழிவகுத்தது.

எல்லா மதங்களுமே சொர்க்கம், நரகம் குறித்து தத்தம் மக்களுக்கு போதிக்கிறது. ஆனால், எப்போதுமே மதக் கோட்பாடுகளுக்கு அப்பாற்பட்ட கருத்துகளை தெரிவித்த ஸ்டீபன் ஹாக்கிங் ஒருமுறை “சொர்க்கமும் இல்லை, நரகமும் இல்லை: எல்லாம் கற்பனைக் கதையே” என்றார்.

இதற்காக அவர் பல்வேறு மதத்தினரின் எதிர்ப்பையும் சம்பாதித்தார் என்பது வேறு கதை.

தி கார்டியனுக்கு அவர் அளித்த பேட்டியில், “மனித மூளையானது ஒரு கணினியைப் போன்றது. ஒரு கணினியின் உபகரணங்கள் பழுதாகி அது இயக்கத்தை நிறுத்திவிட்டால் எப்படி அது எங்கும் செல்வதில்லையோ அப்படித்தான் மனித உயிரும் மூளை தனது கடைசி நிமிட இயக்கத்தை நிறுத்தியவுடன் மனிதன் மரித்துப்போகிறான். அவர் அதன் பின்னர் சொர்க்கத்துக்கும் செல்வதில்லை, நரகத்துக்கும் செல்வதில்லை. இவை எல்லாம் வெறும் கற்பனைக் கதை. இருள் மீது பயம் கொண்ட மக்களுக்காக சொல்லப்பட்ட கதை” என்றார்.

மேலும் அவர் கூறும்போது, “என்னுடைய மரணம் இளம் வயதிலேயே நிகழும் என்று சொல்லப்பட்டபது. ஆனால், அந்த கணிப்பைத் தாண்டியும் 49 வயதில் வாழ்ந்து கொண்டிருக்கிறேன். எனக்கு மரணத்தின் மீது பயமில்லை. அதேவேளையில், மரணிக்க வேண்டிய அவசரத்திலும் இல்லை. நான் செய்ய வேண்டிய பணிகள் நிறைய இருக்கின்றன” என்றார்.

தி கிராண்ட் டிசைன் சம்பாதித்த எதிர்ப்புகள்..

2010-ம் ஆண்டு ஸ்டீபன் ஹாக்கிங் ‘தி கிராண்ட் டிஸைன்’, (The Grand Design) என்ற புத்தகத்தை எழுதியிருந்தார். அதில் அண்டம் உருவானவிதத்தையும் அண்டம் ஏன் இருக்கிறது என்பதை விளக்கவும் எந்த படைப்பாளியும் (கடவுளும்) தேவையில்லை எனக் கூறியிருந்தார். இந்தப் புத்தகம் பல்வேறு மத குருமார்களிடமும் எதிர்ப்பை சம்பாதித்தது.

யூத மதகுரு லார்ட் சாக்ஸ் என்பவர், “ஸ்டீபன் ஹாக்கிங் தர்க்கவாதங்களை கட்டுக்கதைகள் என்று உடைத்தெரியும் குற்றத்தை செய்து கொண்டிருக்கிறார்” எனக் குற்றஞ்சாட்டினார் என்பது குறிப்பிடத்தக்கது.