பராமரிப்பு பணிக்காக ஸ்டெர்லைட் ஆலையை திறக்க அனுமதிக்க முடியாது என்று சென்னை உயர்நீதிமன்றம் மீண்டும் தெரிவித்துள்ளது. அவசர வழக்காக விசாரிக்கவும் நீதிபதிகள் மறுத்து விட்டனர்.
தமிழக அரசால் கடந்த மே மாதம் மூடப்பட்ட ஸ்டெர்லைட் ஆலையை திறக்க கோரி, வேதாந்தா நிறுவனம் உயர்நீதிமன்றத்தில் தொடர்ந்த வழக்கு நீதிபதிகள் சத்தியநாராயணன், நிர்மல்குமார் அமர்வு முன் மீண்டும் விசாரணைக்கு வந்தது.
வேதாந்தா நிறுவனம் சார்பில் ஆஜரான மூத்த வழக்கறிஞர் ஆரியமாசுந்தரம், ஸ்டெர்லைட் ஆலை மூடப்பட்டுள்ளதல், பல ஆயிரம் கோடி ரூபாய் மதிப்பிலான எந்திரங்கள் பழுதாகி வீணாவதாக வாதிட்டார்.
ஆலை மூடப்பட்டதால் ஆயிரத்திற்கும் மேற்பட்ட தொழிலாளர் குடும்பங்கள் பாதிக்கப்பட்டுள்ளதாக அவர் குறிப்பிட்டார்.
பராமரிப்பு பணிக்காக ஆலையை இயக்க இடைக்கால உத்தரவிட வேண்டும் என்றும் அவர் வாதிட்டார்.
நீண்டகாலத்திற்கு வழக்கை தள்ளிவைக்காமல் அவசரமாக விசாரிக்க வேண்டும் என்றும் அவர் கோரிக்கை வைத்தார்.
மாசு கட்டுப்பாடு வாரியம் தரப்பில் ஆஜரான மூத்த வழக்கறிஞர் வைத்தியநாதன், பதில் மனு தாக்கல் செய்ய கூடுதல் கால அவகாசம் வேண்டும் என கேட்டுக்கொண்டார்.
மதிமுக பொதுச் செயலாளர் வைகோ ஆஜராகி, தங்கள் தரப்பையும் மனுதாரராக ஏற்க அனுமதிக்க வேண்டும் என கோரிக்கை வைத்தார்.
இந்த வழக்கில் உத்தரவிடும் முன் தங்கள் தரப்பு வாதங்களையும் கருத்தில் கொள்ள வேண்டும் என அவர் வேண்டுகோள் விடுத்தார்.
அனைத்து தரப்பு வாதங்களை கேட்ட நீதிபதிகள், பராமரிப்புக்காக ஸ்டெர்லைட் ஆலையை திறக்க அனுமதிக்க முடியாது என்று தெரிவித்தனர்.
ஒரு நிறுவனத்திற்காக அவசரமாக வழக்கை விசாரிக்க முடியாது என்றும் மறுத்து விட்டனர்.
ஸ்டெர்லைட் ஆலையை மூடிய பிறகு அப்பகுதியில் தற்போதுள்ள சுற்றுச்சூழல் மற்றும் நிலத்தடி நீரின் தரம் குறித்து ஆய்வு செய்ய மாசு கட்டுப்பாட்டு வாரியத்திற்கு அறிவுறுத்தினர்.
வழக்கு விசாரணையை வரும் ஏப்ரல் 23 ஆம் தேதிக்கு தள்ளிவைத்த நீதிபதிகள், அன்றைய தினம் இடைக்கால கோரிக்கை குறித்து வாதங்களை முன்வைக்கலாம் என்று உத்தரவிட்டனர்.
இதனிடையே உயர்நீதிமன்றத்தில் செய்தியாளர்களை சந்தித்த வைகோ, ஏப்ரல் 23 ஆம் தேதி வழக்கு விசாரணைக்கு வரும் போது தங்களது வாதத்தை முன்வைக்க இருப்பதாக தெரிவித்தார்