முக்கிய செய்திகள்

ஸ்டெர்லைட் ஆலையில் தருண் அகர்வால் குழு இன்று முதல் ஆய்வு

தூத்துக்குடி ஸ்டெர்லைட் ஆலையில் ஓய்வு பெற்ற நீதிபதி தருண் அகர்வால் தலைமையிலான குழு இன்று முதல் 3 நாள் ஆய்வு செய்ய உள்ளது.

தூத்துக்குடி மக்களின் தொடர் போராட்டம் காரணமாக ஸ்டெர்லைட் ஆலையை சீல் வைத்து மூடி தமிழக அரசு உத்தரவிட்டது.

இந்த உத்தரவை எதிர்த்து வேதாந்தா நிறுவனம் டெல்லியில் உள்ள பசுமை தீர்ப்பாயத்தில் மனுத் தாக்கல் செய்தது.

இந்த வழக்கை விசாரித்த பசுமை தீர்ப்பாயம், ஸ்டெர்லைட் ஆலைத் தொடர்பான பிரச்சனைகள் பற்றி ஆராய்ந்து அறிக்கை அளிக்க , ஓய்வு பெற்ற நீதிபதி தருண் அகர்வால் தலைமையில் குழு அமைத்து உத்தரவிட்டது.

அந்தக்குழு செப்டம்பர் 22 ஆம் தேதி முதல் 3 நாட்களுக்கு ஸ்டெர்லைட் ஆலையில் ஆய்வு செய்யும் என்றும் தேசிய பசுமை தீர்ப்பாயம் தெரிவித்தது.

இதன்படி ஓய்வு பெற்ற நீதிபதி தருண் அகர்வால் தலைமையில் குழு இன்று ஆய்வு பணியை தொடங்க உள்ளது.

இதற்கான ஏற்பாடுகளை தூத்துக்குடி மாவட்ட நிர்வாகம் செய்து வருகிறது.

அதேநேரத்தில் ஸ்டெர்லைட் ஆலையில் உள்ள தாமிரத்தாது மற்றும் ஜிப்சம் ஆகியவற்றை அகற்றும் பணியும் இன்று தொடங்க உள்ளது.