தமிழகத்திலிருந்து கேரளாவுக்கு அனுப்பப்படும் வெள்ள நிவாரண பொருட்களில், அதிமுகவினர் ஸ்டிக்கர் ஓட்டி விளம்பரம் செய்து வருவதால், ”ஸ்டிக்கர் ஒட்டி அதிமுக” என்ற ஹேஷ்டேக் டுவிட்டரில் டிரெண்ட் ஆகி வருகிறது.
கடந்த நூறாண்டுகளில் இல்லாத மிகப்பெரும் இயற்கை பேரழிவை கேரளா சந்தித்துள்ளது. கனமழையின் காரணமாக ஏற்பட்ட வெள்ளம் மற்றும் நிலச்சரிவில் சிக்கி இதுவரை 300க்கும் மேற்பட்டோர் உயிரிழந்துள்ளனர்.
வெள்ளத்தில் சிக்கியிருந்த லட்சகணக்கான மக்கள் மீட்கப்பட்டு நிவாரண முகாம்களில் தங்கவைக்கப்பட்டுள்ளனர். இதனிடையே வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட கேரள மக்களுக்கு உதவ அண்டை மாநிலங்கள் உட்பட ஏராளமான உலக நாடுகளும் முன்வந்துள்ளது.
இந்நிலையில் தமிழகத்தில் இருந்து கேரளாவிற்கு அனுப்பப்படும் வெள்ள நிவாரண பொருட்களின் மீது அதிமுகவினர், எம்.ஜி.ஆர், ஜெயலலிதா, பழனிசாமி ஆகியோர் அடங்கிய ஸ்டிக்கரை ஒட்டி அலப்பறை செய்து வருகின்றனர்.
வழக்கமாக அரசு சார்பில் வழங்கப்படும் நிவாரண பொருட்களில் ஸ்டிக்கர் ஒட்டி அனுப்புவது வழக்கம். ஆனால் அதிமுகவைச் சேர்ந்த சில தொண்டர்கள், தன்னார்வலர்கள் கொண்டு செல்லும் பொருட்களையும் விடாமல் அதன்மீதும் ஸ்டிக்கரை ஒட்டி அட்டுழியம் செய்து வருகின்றனர்.
ஏற்கெனவே கடந்த 2015-ஆம் ஆண்டு சென்னை வெள்ளத்தின் போது, வழங்கப்பட்ட நிவாரண பொருட்களில் அதிமுகவினர் இதே போல் ஸ்டிக்கர் ஒட்டி அராஜகம் செய்தனர்.
இதனால் ஸ்டிக்கர் பாய்ஸ் என்ற ஹேஷ்டேக் டுவிட்டரில் டிரெண்ட் ஆனது. இந்நிலையில் தற்போது கேரளாவுக்கு அனுப்பப்படும் வெள்ள நிவாரண பொருட்கள் மீதும் அதிமுகவினர் ஸ்டிக்கர் ஓட்டி வருவதால் ”ஸ்டிக்கர் ஒட்டி அதிமுக” என்ற ஹேஷ்டேக் டுவிட்டரில் டிரெண்ட் ஆகி வருகிறது.