_______________________________________________________________________________________
“தே.மு.தி.க. யாரோடும் பேரம் பேசவே இல்லை. பேரம் என்றால் என்னவென்றே எங்களுக்குத் தெரியாது” (அய்யோ பாவம்) என்றார் திரு பிரேமலதா.
“மக்கள் நலக் கூட்டணியைத் தி.மு.க. உடைக்கப் பார்க்கிறது ” என்று அக்கூட்டணியின் தலைவர்கள் குற்றம் சாற்றிக் கொண்டே இருந்தனர்.
மேலே உள்ள இரண்டு கருத்துகளுக்கும் மாறாக இப்போது அவர்களே சில செய்திகளை வெளியிட்டுள்ளனர்.
80 இடங்களும், 500 கோடி ரூபாயும் தருவதாகத் தி.மு.க., விஜயகாந்த் கட்சியிடம் பேரம் பேசியது உண்மை என்று கூறியுள்ளார் திரு வைகோ! பேரம் நடக்கும்போது அவரே அருகில் இருந்திருப்பார் போலிருக்கிறது. . பேரம், பேச்சுவார்த்தை என்பதெல்லாம் இருவர் தொடர்புடையதுதானே! விஜயகாந்துக்குத் தொடர்பே இல்லை என்றால், தி.மு.க. யாருடன் பேரம் பேசியது? யாருமே இல்லாத அறையில் ஒருவர் தனியாக எப்படிப் பேரம் பேச முடியும்? எனவே தி.மு.க.வை இழிவு படுத்துவதாக நினைத்துக் கொண்டு, வைகோ தன் ‘புதிய தலைவரை’க் கொச்சைப் படுத்தி உள்ளார்.
அடுத்ததாக, 25.03.2016 காலை புதிய தலைமுறைத் தொலைக்காட்சியில் உரையாடிய, விடுதலைச் சிறுத்தைகளின் கட்சிப் பொதுச்செயலாளர் திரு ரவிகுமார் இன்னொரு உண்மையைப் போட்டு உடைத்துள்ளார். யாருடனுமே நாங்கள் பேச்சு வார்த்தை நடத்தவில்லை என்று விஜயகாந்த் கூறியிருக்க, அவரோடு நடந்த பேச்சுவார்த்தை பற்றி ரவிகுமார் கூறியுள்ளார்.
பா.ஜ.க.வையும் சேர்த்துக் கொண்டு ஒரு பெரிய கூட்டணியை அமைக்கலாம் என்றுதான் விஜயகாந்த் எங்களிடம் கூறினார். அதற்கு இடதுசாரிகள் இசைந்து வர மாட்டார்கள் என்றால், அவர்களை விட்டுவிட்டு நீங்களும், ம.தி.மு.க.வும் வாருங்கள் என்று கூறினார். ஆனால் நாங்களும் பா.ஜ.க.வுடன் கூட்டணிக்கு வர இயலாது என்று கூறிவிட்டோம். பிறகு அவரை வென்றெடுத்து எங்கள் கூட்டணிக்கு அழைத்து வந்துவிட்டோம் என்றார் ரவிகுமார்.
ஆக மொத்தம் இடதுசாரிகளைக் கழற்றிவிடச் சொன்னதன் மூலம், மக்கள் நலக் கூட்டணியை உடைக்க முயன்றவர் விஜயகாந்த்தான் என்பது தெளிவாகிறது. அவரோடுதான் அவர்கள் இப்போது இணைந்துள்ளனர். எல்லாவற்றையும் அறிந்தும், நம் பொதுவுடமைக் கட்சித் “தோழர்கள்” சுயமரியாதையைக் கைவிடாமல் ‘கேப்டன்’ தலைமையை ஏற்றுக் கொண்டு புன்னகை புரிகின்றனர்.
இன்னொன்றும் நமக்குப் புரிகிறது. இடதுசாரிகளைக் கைவிட வேண்டும் என்பது விஜயகாந்த் கருத்தாக இருந்திருக்கும் என்று நினைப்பதை விட, பின்னால் இருந்து இயக்க முயன்ற பா.ஜ.க.வின் கருத்தாகத்தான் இருந்திருக்க முடியும். ‘கேப்டனை’ வரும் தேர்தலில் ‘கிங்’ ஆக்குவதற்கு பா.ஜ.க ஒப்புக் கொண்டிருந்தால், அவர் அந்தப் பக்கம் சாய்ந்திருப்பார். அவர்கள் அதற்கு இசையாத காரணத்தால், மக்கள் நலக் கூட்டணிக்கு வந்துள்ளார் என்பதும் புரிகிறது.
எப்படியோ, “கிங் நலக் கூட்டணி” உருவாகி விட்டது!
– சுபவீ வலைப்பூவில் இருந்து நன்றியுடன்
____________________________________________________________________________________________