Sundhara buddhan’s Uthira pookkal -1
போர்க்களத்தில் ஒரு மாலை நேரம்….
______________________________________________________________________________
ரெங்கையா முருகனை சந்திக்கலாம் என்று சனிக்கிழமை மாலையில் பெருங்களத்தூர் சென்றிருந்தேன். கூடவே நண்பர் நந்தகுமாரும் வந்திருந்தார். மூவருமாக சேர்ந்து மணிமங்கலம் ஏரி பக்கம் சென்று வரலாமே என்று எதேச்சையாக புறப்பட்டோம்.
மாலை மயங்கிய அந்தி. வழியெங்கும் வீடுகளுக்கு நடுவே புற்கள் முளைத்து காலியிடங்களை பசுமைவெளியாக மாற்றியிருந்தது. காஞ்சிபுரம் மாவட்டத்தின் பெரிய ஏரிகளில் ஒன்றான மணிமங்கலம் ஏரி, அங்காங்கே சிறு குளங்களாக சிதறிக்கிடந்தது. கொஞ்சம் தண்ணீர் சலசலத்துக் கொண்டிருந்த ஏரிக்கரையில் போய் உட்கார்ந்தோம். காற்றில் நீர்ப்பரப்பின் மெல்லிய சாரல்.
தன் சுவையான தகவல்களின் வழியாக அந்த மாலையை வரலாற்றின் ஒரு பகுதியாக மாற்றியிருந்தார் ரெங்கையா முருகன். மணிமங்கலம் ஒரு போர்க்களம் தெரியுமா? என்று கேட்டார். அப்போது மீனைக் கொத்திச் செல்ல ஏதுவாக மீன்கொத்திப் பறவை ஒரே இடத்தில் படபடவென சிறகடித்துக்கொண்டிருந்தது. மீன் கொத்திச் சென்ற சலனம் நீரில் அலை அலையாக பரவியது பேரழகு.
காஞ்சிக்கு அருகில் நடந்த போரில் மகேந்திரவர்ம பல்லவனை வென்றான் சாளுக்கிய மன்னன் இரண்டாம் புலிகேசி. அடுத்து நடந்த போரில் மணிமங்கலத்தில் வைத்து அவரது மகன் நரசிம்மவர்ம பல்லவன், புலிகேசியை வென்றான். பின்னர் வாதாபி வரை சென்று வென்றது வரலாறு என்று பேசிக்கொண்டே போனார் ரெங்கையா முருகன். நாங்கள் ஆச்சரியத்தில் உறைந்திருந்தபோது, தட்டான்கள் பறப்பதைக் கவனித்தோம்.
அடுத்து பேச்சின் திசை வேறு பக்கம் மாறியது. வரலாற்று ஆய்வாளனுக்கும் கவிஞனுக்கும் உள்ள வேறுபாடுகளை துல்லியமாக எழுதித் தீர்த்த அப்பைய தீட்சிதர் பற்றி சொல்லத் தொடங்கினார் முருகன். ஆரணிக்கு அருகில் அடையபலம் கிராமத்தில் பிறந்த அந்த சமஸ்கிருத அறிஞரின் காலம் 16 ஆம் நூற்றாண்டு.
எழுத்துகளை எப்படி ஆவணப்படுத்த வேண்டும் என்பதை முதலில் அறிமுகப்படுத்தியவர் அவர்தான். தான் எழுதிய நூல்களை நான்கு படிகள் எடுத்து நாலாபுறமும் உள்ள மடங்களுக்கு அனுப்பிவைத்துவிடுவாராம். அந்தக் காலத்தில் காசிக்குச் சென்றுதான் வேதங்களைக் கற்றுவருவார்கள். ஆனால் காசியில் புகழ்பெற்ற வேதாந்தியான பட்டோஜி, தமிழகம் வந்து அப்பைய தீட்சிதரிடம் வேதாந்தமும் மீமாம்சமும் கற்றுத் தெளிந்துள்ளார். பின்னர் பட்டோஜி காசிமாநகரில் வேத விற்பன்னர்களை தர்க்கத்தில் அசரவைத்தார்.
ஊமத்தங்காயை அரைத்துக் குடித்ததும், பித்த நிலையில் நான் பேசுவதை எழுதிக்கொள்ளுங்கள் என்று சீடர்களிடம் கூறினார் அப்பைய தீட்சிதர். அந்த கருத்துகள் ‘ஆத்மார்ப்பன துதி’ என்று நூலாக வெளிவந்து புகழ்பெற்றது.
இந்த அரிய தகவல்களைச் சொல்லும்போது ரெங்கையா முருகன் வெளிப்படுத்திய பாவங்களும் உடல்மொழியும் தேர்ந்த நாடக நடிகரைப் போல இருந்தன. மாலை நேரத்தின் ரம்மியத்தை ரசித்துக்கொண்டே அத்தனை ஆர்வத்துடன் பேசினார்.
இப்படி பேசிக்கொண்டிருந்த தருணத்தில், ஏரியின் வறண்ட பகுதியில் பன்றிகள் கூட்டமாக வந்துகொண்டிருந்தன. என்னவென்று எட்டிப்பார்த்தால், அவற்றுக்கான உணவை வேனில் கொண்டுவந்து கொட்டினார்கள். திரும்பிப் பார்ப்பதற்குள் தின்றுத் தீர்த்துவிட்டு அவை நடையைக் கட்டியிருந்தன.
பரபர சென்னையில் இருந்து விலகி சில கிலோ மீட்டர்கள் வந்திருந்தது மிகப்பெரிய ஆசுவாசத்தை அளித்திருந்தது. வரலாற்றுடன் சமகாலத்தை இணைத்துவைத்தார் ரெங்கையா முருகன், நினைவுகளில் ஓர் ஆவணக்காப்பகத்தைக் காப்பாற்றி வைத்திருக்கிறார்.
மேற்கில் வானம் சிவந்து கொண்டிருந்தது. சாலையில் செல்லும் வாகனங்களின் மின்னிய விளக்கொளிகளில் மெல்ல இரவு எட்டிப்பார்த்தது. தூரத்தில் மேய்ந்து களைத்திருந்த மாடு நீரருந்திக்கொண்டிருந்தது. நாங்கள் ஏரியில் இருந்து விடைபெறத் தொடங்கியிருந்தோம்.
புகைப்படங்கள்: நந்தகுமார்
______________________________________________________________________