சூப்பர் மார்க்கெட்டில் திருடிய பெண் காவலர் இடைநீக்கம்…


சென்னை சூப்பர் மார்க்கெட்டில் திருடிய பெண் காவலரின் கணவர் அத்துமீறிய வீடியோ காட்சிகள் வெளியாகியுள்ளன.

சென்னை எழும்பூரில் நீல்கிரிஸ் சூப்பர் மார்க்கெட்டிற்கு பெண் காவலர் ஒருவர் பொருட்கள் வாங்க வந்துள்ளார். நீண்ட நேரம் செல்போன் பேசிக் கொண்டே உலவிய அவர், சில சாக்லேட் பாக்கெட்களை எடுத்து சட்டைப் பைக்குள் போட்டுக் கொண்டார். இதைக் கண்ட ஊழியர் ஒருவர், கடை உரிமையாளரிடம் கூறியுள்ளார்.

இந்நிலையில் பில் போடும் இடத்திற்கு வந்த அவர், 2 பொருட்களுக்கு மட்டும் பில்போடும் படி கூறினார். அப்போது பாக்கெட்டில் மறைத்து வைத்திருந்த பொருட்களையும் எடுத்து பில் போடுங்கள் என்று கடை உரிமையாளர் பிரனாவ் கூறினார். ஆனால் பாக்கெட்டில் எதுவும் இல்லை என்று கூறினார்.

இதையடுத்து அவரை பெண் ஊழியர் ஒருவர் சோதனையிட்டதில் 5 ஸ்டார் சாக்லேட், ஜெம்ஸ் சாக்லேட், பார் ஒன் சாக்லேட், ஓடோமஸ் போன்றவற்றை கண்டெடுக்கப்பட்டன. இருப்பினும் தான் திருடவில்லை என்று சாதித்துள்ளார். பின்னர் சிசிடிவி காட்சிகளைக் காட்டியதால் திருடியதை ஒப்புக் கொண்டார்.

பின்னர் அவரிடம் எழுதி வாங்கிக் கொண்டு, எச்சரித்து அனுப்பியுள்ளனர். இதையடுத்து பெண் காவலரின் கணவர் 2 நண்பர்களுடன் கடைக்கு வந்து, அங்கிருந்த பெண் ஊழியர்களை ஆபாசமாக திட்டியுள்ளார். இதையடுத்டு கடை உரிமையாளர் பிரனாவை கடுமையாகத் தாக்கிச் சென்றனர்.

இதுதொடர்பாக சிசிடிவி ஆதாரங்கள் உடன் கடை உரிமையாளர் எழும்பூர் காவல்நிலையத்தில் புகார் அளித்துள்ளார். இதில் திருடியவர் கீழ்ப்பாக்கம் அனைத்து மகளிர் காவல் நிலைய காவலர் நந்தினி என்று தெரியவந்துள்ளது.

அவரை சென்னை மாநகர காவல் ஆணையர் விஸ்வநாதன் இடைநீக்கம் செய்து உத்தரவிட்டுள்ளார். மேலும் பெண் காவலர் நந்தினியின் கணவர் கணேஷைக் கைது செய்து போலீசார் விசாரித்து வருகின்றனர்.