நாளை வானில் தோன்றும் அரிய நிகழ்வான சூப்பர் பிங்க் நிலவை இந்தியாவில் பார்க்க முடியாது என நாசா விஞ்ஞானிகள் தெரிவித்துள்ளனர்.
பூமியில் இருந்து சுமார் 3,84,000 கிலோ மீட்டருக்கு அப்பால் இருக்கும் நிலவு, நாளை பவுர்ணமி தினத்தில் சுமார் 3057 ஆயிரம் கிலோ மீட்டர் தூரத்துக்கு நெருங்கி வருகிறது.
பூமிக்கும் நிலவுக்கும் இடையிலான தூரம் சுமார் 27 ஆயிரம் கிலோ மீட்டர் வரை குறைவதால், வழக்கமான பவுர்ணமி நாட்களை விட, நாளை தோன்றும் முழு நிலவு, சுமார் 14 முதல் 30 சதவீதம் வரை அளவில் பெரியதாக காட்சியளிக்கும்.
அத்துடன் வழக்கமான பவுர்ணமி நிலவை விட, மிகவும் பிரகாசமாகவும் இருக்கும். இதைத் தான் சூப்பர் பிங்க் மூன் என அழைக்கின்றனர்.
நாளை தோன்றும் பெரிய அளவிலான முழு நிலவுக்கு இளஞ்சிவப்பு நிலா என்று பெயர் சூட்டியிருந்தாலும் அதன் இயல்பான நிறத்தில் இருந்து மாற்றம் இருக்காது.
அமெரிக்காவில் வசந்த காலத்தில் பிங்க் வண்ணத்தில் பூக்கள் பூக்கும். அதை இணைத்துதான், நாளை வரும் நிலவுக்கு பிங்க் என்று பெயரிட்டுள்ளனர்.
இந்த சூப்பர் பிங்க் நிலா வானத்தின் கீழ் பகுதியில் இருக்கும்போது தங்க ஆரஞ்சு நிறத்திலும், வானத்தில் உயரும் போது வெள்ளை நிறமாகவும் இருக்கும் என நாசா விஞ்ஞானிகள் கூறுகின்றனர்.
நாளை இரவு தோன்றும் இந்த சூப்பர் பிங்க் நிலவு புதன்கிழமை அதிகாலை வரை தெரியும் என நாசா தெரிவித்துள்ளது.
நாளை இரவு அமெரிக்கா, ஆஸ்திரேலியா, கனடா, பிரேசில், மெக்சிகோ உள்ளிட்ட நாடுகளில் பார்க்க முடிந்தாலும்,
8-ஆம் தேதி காலை 8.05 மணிக்கு இந்தியாவில், இந்த சூப்பர் பிங்க் நிலவு தோன்றும் என்பதால், இதை நம்மால் காண முடியாது என்றும் தெரிவித்துள்ளது.
இனி இந்த நூற்றாண்டில் 2034-ஆம் ஆண்டு நவம்பர் 25-ஆம் தேதிதான் இந்த வகையான நிலா தெரியும். இது பூமிக்கு மிக அருகில் இருக்கும்.
மீண்டும் 2052, டிசம்பர் 6-ஆம் தேதி பூமிக்கு மிக அருகில் நிலா தெரியும் என ஆய்வாளர்கள் தெரிவிக்கின்றனர்