திருவாரூர் தேர்தலுக்கு எதிரான மனுக்கள்: விசாரணைக்கு ஏற்றது உச்சநீதிமன்றம்

திருவாரூர் தொகுதி இடைத்தேர்தலை தற்போது நடத்த எதிர்ப்புத் தெரிவித்து தாக்கல் செய்யப்பட்ட மனுக்களை உச்சநீதிமன்றம் விசாரணைக்கு ஏற்றுள்ளது.

காலியாக உள்ள திருவாரூர் தொகுதிக்கு வரும் 28 ம் தேதி இடைத் தேர்தல் நடைபெறவுள்ளது. இந்நிலையில், கஜா புயல் நிவாரண பணிகள் முடிவடையாத நிலையில், தற்போது தேர்தல் நடந்தால், நிவாரண பணிகள் பாதிக்கப்படும் எனக்கூறி இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மூத்த தலைவரும், மாநிலங்களவை உறுப்பினருமான டி.ராஜா, திருவாரூரை சேர்ந்த மாரிமுத்து ஆகியோர் உச்சநீதிமன்றத்தில் மனுக்கள் தாக்கல் செய்தனர். திருவாரூர் தொகுதிக்கு அறிவித்துள்ள தேர்தலை தள்ளிவைக்க வேண்டும் எனவும் அதில் கோரியிருந்தனர். இந்த  மனுக்களை விசாரணைக்கு ஏற்று கொள்வதாக அறிவித்த உச்சநீதிமன்றம், விசாரணை தேதி பின்னர் அறிவிக்கப்படும் என கூறியுள்ளது.