முக்கிய செய்திகள்

பணிக்கு செல்லும் பெண்களை இதைவிடக் கேவலமாக சொல்ல முடியாது: எஸ்.வி.சேகரை விளாசிய நீதிபதி

படுக்கையைப் பகிர்ந்தால் முன்னேற முடியும் என்று பதிவிடுவது சமூகத்தில் உயர்ந்த அந்தஸ்தில் உள்ளவர்களுக்கும் பொருந்துமா? பணிக்கு செல்லும் பெண்கள் குறித்து இதைவிடக் கேவலமாகப் பதிவிட முடியாது என்று கடுமையாக கருத்து தெரிவித்துள்ள நீதிபதி முன் ஜாமீனை ரத்து செய்துள்ளார்.

எஸ்.வி சேகர் முன் ஜாமீன் மனுவை தள்ளுபடி செய்த நீதிபதி பிறப்பித்துள்ள விரிவான தீர்ப்பில், எஸ்.வி.சேகரின் செயல்பாடு குறித்து கடுமையாக விமர்சித்துள்ளதுடன், சரமாரியாக கேள்விகளை எழுப்பியுள்ளார்.

அவரது தீர்ப்பு முழு விபரம் வருமாறு:

“ஒருவர் கோபமாக இருக்கும்போதோ அல்லது உணர்ச்சி கொந்தளிப்பில் இருக்கும்போது வார்த்தைகளை விடுவது சாதாரணம். அப்படிப்பட்ட வார்த்தைகளுக்கு வருத்தப்பட்டு மன்னிப்பு கேட்பது இயல்பு.

ஆனால், இந்தப் பதிவு என்பது உள்நோக்குடன் தெரிந்தே அடித்ததாக தெரிகிறது. ஒரு ஃபார்வர்ட் மெசெஜ் என்பது அவரே ஏற்றுக்கொண்டு அடித்ததாகத்தான் கருத வேண்டும்.

சில சமயங்களில் ஒரு கருத்தை யார் தெரிவிக்கிறார் என்பதும் கவனிக்கப்பட வேண்டும். ஒரு சாதாரண நபர் பதிவிடுவதற்கும், ஒரு ஒரு பிரபலம் கருத்து தெரிவிப்பதற்கும் வித்தியாசம் உள்ளது. சமூகத்தில் உயரிய அந்தஸ்தில் இருப்பவர் கருத்து தெரிவிக்கும்போது மக்களிடம் பெரும்பாதிப்பை ஏற்படுத்தி மக்களை நம்ப வைக்கிறது.

அந்தப் பதிவில் கூறப்பட்டுள்ள கருத்துகள் என்பது பெண் பத்திரிகையாளர் மீதான நேரடி தாக்குதலாகத்தான் (abusive language) தெரிகிறது. இதுபோன்ற கருத்து இப்படிப்பட்ட அந்தஸ்துள்ள நபரிடமிருந்து வருவது எதிர்பார்க்க முடியாது. சமூகத்தில் மக்களுக்கு எடுத்துக்காட்டாக இருக்கவேண்டியவர் தவறான முன்னுதாரணமாக இருந்துவிட்டார்.

இதேபோல பெண்களுக்கு எதிரான சமூக வலைதளக் குற்றத்தில் ஈடுபட்டதற்காக தினந்தோறும் பல இளைஞர்கள் கைது செய்யப்படுகின்றனர். சட்டம் அனைவருக்கும் சமமானதுதான். மக்கள் நீதியின் மேல் வைத்துக்கொண்டுள்ள நம்பிக்கையை இழக்கக்கூடாது.

சிறு குழந்தைகள் செய்த தவறை மன்னிக்கலாம், ஆனால் வளர்ந்த முதிர்ச்சி பெற்ற நபர் செய்யும் குற்றங்களை மன்னிக்க முடியாது.

பணியிலிருக்கும் பெண்கள் குறித்து அந்தப் பதிவில் சொன்னதைவிடக் கடுமையாகச் சொல்லமுடியாது. அந்த அளவுக்கு அந்தப் பதிவு உள்ளது. சமூக அந்தஸ்து பெற்றவரிடமிருந்து இதுபோன்ற கருத்துகள் வரும்போது, பணிக்குப் போகும் பெண்களை ஒரு தவறான கண்ணோட்டதிலேயே மக்களைப் பார்க்க வைக்கும்.

இதுபோன்ற கருத்துகள் ஏற்கப்படும்போதோ, பின்பற்றப்படும்போதோ பெண்கள் பொதுவாழ்க்கைக்கே வரமுடியாத சூழலை ஏற்படுத்திவிடும். தனது ஃபார்வர்ட் குறித்து வருத்தம் மட்டுமே தெரிவித்துள்ளார், ஆனால் பதிவில் உள்ள கருத்துக்களை மறுக்கவில்லை.

பெண்களுக்கு எதிரான இதுபோன்ற கருத்துகளைச் சொல்ல யாருக்கும் உரிமையில்லை. அப்படித் தெரிவித்தால் பெண்ணுரிமைக்கு எதிரானது. இப்படிப்பட்ட செயல்பாடு என்பது ஒரு நபரை சாதிப்பெயரை சொல்லி கூப்பிடுவதைவிட கொடூர குற்றமாகும்.

படுக்கையைப் பகிர்ந்து கொள்வது மூலம் மட்டும்தான் ஒரு பெண் சமூக வாழ்வில் மேலே வர முடியுமென்றால், இந்தக் கருத்து தற்சமயம் உயர் பதவியில் உள்ள அனைத்து பெண்களுக்கும் இந்தக் கருத்து பொருந்துமா?

ஊடகத்துறையிடம் நீண்ட காலத் தொடர்புடையவரே இந்தக் கருத்தை தெரிவித்தது அது உண்மை என்பதுபோல மக்களிடையே எண்ணத்தை உருவாக்கும்.

உணர்ச்சிகளைக் கட்டுப்படுத்திக்கொள்வது என்பது தலைவருக்கான ஒரு குணம். சமூக உயர் அந்தஸ்தில் உள்ள ஒருவர் சமூக அமைதியை உருவாக்க வேண்டுமே தவிர வேற்றுமையையும், பதட்ட நிலையையும் உண்டாக்கக் கூடாது.

கருத்தைப் பேசுவதற்கும், எழுத்துப்பூர்வமாக தெரிவிப்பதற்கும் வித்தியாசம் உண்டு. எழுத்துப்பூர்வமாக சொல்லும்போது ஆவணமாக மாறிவிடுகிறது. அப்படி எழுதப்பட்ட கருத்திலிருந்து எவரும் பின்வாங்க முடியாது.

இந்தப் பதிவு நீக்கப்பட்டுள்ளதே தவிர அழிக்கப்படவில்லை. சமூக வலைதளத்தில் என்ன வேண்டுமென்றாலும் சொல்லிவிட்டு அதிலிருந்து தப்பித்துவிடலாம் என்ற மனநிலை உருவாகக்கூடாது. இக்கருத்து தனிநபருக்கு எதிரான கருத்து மட்டும் அல்ல. பெண்ணினத்திற்கு எதிரானது.

அந்தக் கருத்துகளைப் பரப்பியவர் மீது நடவடிக்கை எடுக்காமல், அதை எதிர்த்து போராடியவர்கள் மீது நடவடிக்கை எடுப்பது சரியான நடைமுறை அல்ல என மக்களிடம் கருத்து நிலவுவது இயற்கையானதே.

இந்தக் காரணங்களால் முன் ஜாமீன் மனு தள்ளுபடி செய்யப்படுகிறது. தனி நபர் மீதான புகாரில் நடவடிக்கை என்ன எடுப்பீர்களோ அதை எடுக்க வேண்டும்.”

இவ்வாறு தங்கள் தீர்ப்பில் நீதிபதி ராமதிலகம் கடுமையாக குறிப்பிட்டுள்ளார்.