சுவிட்சர்லாந்திலேயே அப்படி என்றால் இந்தியாவில் என்னதான் நடக்காது?

சுவிட்சர்லாந்து மக்கள் இப்படி ஒரு தீர்ப்பை வழங்குவார்கள் என உலகம் எதிர்பார்த்திருக்காது.

நேரடி மக்களாட்சி நேர்த்தியான முறையில் நடைபெற்று வரும் நாடு சுவிட்சர்லாந்து. அரசு எந்தத் திட்டத்தைக் கொண்டு வந்தாலும், ஒரு லட்சம் பேருக்கு மேல் அதற்கு எதிர்ப்புத் தெரிவித்து விட்டால் பொதுவாக்கெடுப்பு நடத்த வேண்டும். பொது வாக்கெடுப்பில் பெரும்பாலான மக்கள் எதை ஆதரிக்கின்றனரோ, அதைத்தான் அரசு சட்டமாக இயற்றும். அரசின் தவறான பல சட்டங்கள் பொதுவாக்கெடுப்பின் மூலம் பல முறை தகர்த்தெறியப்பட்டுள்ளன.

ஆனால்… இந்த முறை ஏனோ விவசாயம் சார்ந்த இரண்டு முக்கியமான முன்மொழிவுகளுக்கு எதிராக சுவிஸ் மக்கள் வாக்களித்துள்ளனர்.

விவசாயம், சுற்றுச்சூழல் சார்ந்த பிரச்சினைகள் குறித்து சுவிட்சர்லாந்தில் பெரும் விவாதங்கள் கிளம்பின. இதன் விளைவாக விவசாயம் தொடர்பான இரண்டு தீர்மானங்கள் மீதும், சைக்கிள் பயன்பாட்டை அதிகரிப்பது குறித்த மற்றொரு தீர்மானத்தின் மீதும் ஞாயிற்றுக் கிழமை (23.09.2018) பொது வாக்கெடுப்பு நடத்தப்பட்டது.

இதில் சைக்கிள் பயன்பாட்டை அதிகரித்து, சாலையில் அதற்கென தனிப்பாதை அமைக்க ஆதரவாக 73.6 சதவீதம் பேர் வாக்களித்துள்ளனர். சுவிஸ் மக்களின் சூழல் சார்ந்த தெளிவான பார்வையும், திடமான உறுதியும் இதில் வெளிப்பட்டிருக்கிறது. 

ஆனால், விவசாயம் தொடர்பான சிறப்பான நோக்கங்களைக் கொண்ட இரண்டு முக்கியமான முன்மொழிவுகளுக்கு எதிராக வாக்களித்திருப்பதுதான், சுவிஸ் மக்கள் குறித்து நாம் இதுவரை கொண்டிருந்த நம்பிக்கையையே தகர்க்கக் கூடியதாக உள்ளது.

அவற்றின் முதல் முன்மொழிவு…

சுற்றுச்சூழலைப் பாதிக்காத, சுகாதாரமான உணவு உற்பத்தியை வலியுறுத்துவது, விவசாயிகளுக்கு அதிக மானிய உதவிகளை வழங்குவது ஆகிய அம்சங்களை உள்ளடக்கிய “நியாயமான உணவு உற்பத்திக்கான முன்னெடுப்பு” (Fair Food initiative) என்பதாகும்.

இரண்டாவது, உணவு உற்பத்திக்கான இறையாண்மை பாதுகாப்பை உறுதிப்படுத்துவதற்கான உணவு இறையாண்மைக்கான முன்னெடுப்பு (Popular Initiative For Food Sovereignty)) என்ற முன்மொழிவு. சுவிட்சர்லாந்தின் தற்போது நடைமுறையில் இருக்கும் மரபுசார் விவசாயத்தை வளர்த்தெடுப்பது, உணவுப் பொருள் இறக்குமதியை குறைப்பது, உள்நாட்டு உற்பத்தியைப் பெருக்குவது, நவீன வேளாண்முறையை நிராகரிப்பது, மரபணு மாற்ற விதைகளுக்கு தடை விதிப்பது என நிறைய அழுத்தமான அம்சங்களை உள்ளடக்கியதாகும்.

முதலாவது முன்மொழிவுக்கு 61.3 விழுக்காட்டினரும், இரண்டாவது முன்மொழிவுக்கு 68.4 விழுக்காட்டினரும் எதிராக வாக்களித்துள்ளனர். விவசாயிகளுக்கு அதிக மானியம் வழங்கக் கூடாது என்பதற்காகவே பெருவாரியான மக்கள் இரண்டு முன்மொழிவுகளையுமே நிராகரித்திருப்பதாக கூறப்படுகிறது.

ஜனநாயகத்தைப் போலவே சுற்றுச்சூழல் சார்ந்தும் தெளிவான பார்வையும், விழிப்புணர்வையும் பெற்ற சுவிட்சர்லாந்து மக்கள் ஏனோ விவசாயத்தில் தற்சார்பை அடைவதற்கான இரண்டு முக்கிய முன்மொழிவுகளையும் நிராகரித்துள்ளனர்.

அதற்குக் காரணம், ஆளும் அரசின் தீவிரமான பிரச்சாரமே என்கின்றன, சுவிட்சர்லாந்து ஊடகங்கள். விவசாயத்தை நவீனப் படுத்துவதையும், வெளிநாட்டு இறக்குமதிகளையும் தவிர்த்தால், பொருளாதார ரீதியாக தனிமைப்பட வேண்டிய நிலை ஏற்படும் என்ற அச்சத்தை மக்கள் மத்தியில் ஆட்சியாளர்கள் ஏற்படுத்திவிட்டனர். இதன் காரணமாகவே விவசாய தற்சார்பை உறுதிப்படுத்தும் மிக முக்கியமான இரண்டு முன் மொழிவுகளையும் பெருவாரியான மக்கள் நிராகரித்து விட்டதாக, அவற்றை முன்மொழிந்த இடதுசாரி மற்றும் சூழலியல் இயக்கங்கள் வேதனை தெரிவித்துள்ளன.

ஜனநாயகத்தில் முதிர்ச்சியடைந்த சுவிஸ் மக்களையே அரசு மிரட்டி வாக்களிக்க வைக்கிறது என்றால், இந்தியா போன்ற நாடுகளில் என்னதான் நடக்காது!

  • புவனன்

அதிமுக அரசுக்கு எதிராக அக்.3, 4-ல் திமுக சார்பில் கண்டன பொதுக்கூட்டங்கள்…

ஆசிய கோப்பை கிரிக்கெட் : பாகிஸ்தானை வீழ்த்தி இந்தியா வெற்றி..

Recent Posts