முக்கிய செய்திகள்

சிரியாவை மேற்கத்திய நாடுகள் மீண்டும் தாக்கினால் சர்வதேச உறவில் பெரும் குழப்பம் ஏற்படும்; ரஷ்யா, ஈரான் அதிபர்கள் கடும் எச்சரிக்கை..

‘‘சிரியா மீது மேற்கத்திய நாடுகள் மீண்டும் தாக்குதல் நடத்தினால், சர்வதேச நாடுகளுடனான உறவில் மிகப்பெரும் குழப்பம் ஏற்படும்’’ என்று ரஷ்ய அதிபர் விளாடிமிர் புதினும், ஈரான் அதிபர் ரவ்ஹானியும் கடுமை யாக எச்சரித்துள்ளனர்.

சிரியாவில் அதிபர் பஷார் அல் ஆசாத்துக்கு எதிராக கடந்த 7 ஆண்டுகளாக உள்நாட்டு போர் நடக்கிறது. கிளர்ச்சியாளர்களை ஒடுக்க ஆசாத் படைகளும் ரஷ்ய படைகளும் தாக்குதல் நடத்தி வருகின்றன. இந்நிலையில், கடந்த 7-ம் தேதி டவுமா நகரில் ரசாயன ஆயுத தாக்குதல் நடந்தது. இதில் 70-க்கும் மேற்பட்ட குழந்தைகள் பலியாயினர்.

இதற்கு ரஷ்யா, ஈரான்தான் காரணம் என்று அமெரிக்கா குற்றம் சாட்டியது. அத்துடன் சிரியா மீது தாக்குதல் நடத்து வோம் என்று அமெரிக்க அதிபர் டொனால்டு ட்ரம்ப் எச்சரித்தார். அதன்படி கடந்த வாரம் சிரியா மீது அமெரிக்கா, பிரான்ஸ், இங்கிலாந்து விமானங்கள் ஏவுகணை வீசி தாக்குதல் நடத்தின. கடந்த சில நாட்களுக்கு முன்பும் ஏவுகணை வீசியுள்ளன.

இதில் சிரியா ராணுவத்தின் 3 ரசாயன ஆயுதங்கள் வைக்கப்பட்டிருந்த முகாம்கள் அழிக்கப்பட்டதாகவும், இந்தத் தாக்குதல் வெற்றி என்றும் ட்விட்டரில் ட்ரம்ப் செய்தி வெளியிட்டுள்ளார்.

இந்தச் சூழ்நிலையில் ஈரான் அதிபர் ரவ்ஹானியுடன் ரஷ்ய அதிபர் புதின் கடந்த ஞாயிற்றுக்கிழமை தொலைபேசியில் விரிவாக ஆலோசனை நடத்தி உள்ளார்.

இதுகுறித்து ரஷ்ய அதிபரின் கிரம்ளின் மாளிகை நேற்று வெளியிட்ட அறிக்கையில், ‘‘சிரியா மீது மேற்கத்திய நாடுகள் மீண்டும் தாக்குதல் நடத்தினால், சர்வதேச நாடுகளுடனான உறவில் மிகப்பெரும் குழப்பம் ஏற்படும். அத்துடன் சிரியா விவகாரத்தில் அரசியல் ரீதியாக தீர்வு காணும் வாய்ப்பை, மேற்கத்திய நாடுகளின் தாக்குதல் சிதைத்து விட்டது. ஐ.நா. தீர்மானங்களை மீறி சிரியா மீது தாக்குதல் நடந்தால், சர்வதேச நாடுகளுடனான விவகாரங்கள் சிக்கலாகிவிடும்’’ என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. இதற்கிடையில், சிரியா தலைநகர் டமாஸ்கஸில், சர்வதேச ரசாயன ஆயுதங்கள் கண்காணிப்பு சோதனைக் குழு (ஓபிசிடபிள்யூ) பிரதிநிதிகளுடன், சிரியா வெளியுறவுத் துறை துணை அமைச்சர் பைசல் மெக்தாத், ரஷ்யா அதிகாரிகள், சிரியா ராணுவ அதிகாரிகள் நேற்று சந்தித்து பேசினர்.

ஓபிசிடபிள்யூ சோதனை குழுவினர், ரசாயன ஆயுதத் தாக்குதல் நடந்த டவுமா நகருக்கு சென்று ஆய்வு செய்ய உள்ளனர்.