ஆஸ்திரேலிய அணிக்கு எதிரான கடைசி டி-20 போட்டியில், 6 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்ற இந்திய அணி, தொடரை 1-1 என சமன் செய்தது.
ஆஸ்திரேலியா சென்றுள்ள இந்திய அணி 3 டி-20, 4 டெஸ்ட், 3 ஒருநாள் போட்டிகள் கொண்ட தொடரில் பங்கேற்கிறது.
இதுவரை ஆஸ்திரேலிய மண்ணில் டெஸ்ட் தொடரை வெல்லாத இந்திய அணி, முதலில் 3 டி-20 போட்டிகள் கொண்ட தொடரில் பங்கேற்கிறது.
பிரிஸ்பேனில் நடந்த முதல் டி-20 போட்டியில் ஆஸ்திரேலிய அணி 4 ரன்கள் வித்தியாசத்தில் வென்றது.
இரண்டாவது போட்டி மழை காரணமாக முடிவு எட்டப்படாமல் போனது. இதையடுத்து ஆஸ்திரேலிய அணி 1-0 என தொடரில் முன்னிலையில் இருந்தது.
இரு அணிகள் மோதிய கடைசி போட்டி சிட்னியில் இன்று நடந்தது.
இதில் ‘டாஸ்’ வென்ற ஆஸ்திரேலிய கேப்டன் பின்ச் முதலில் பேட்டிங்’ தேர்வு செய்தார். ஆஸ்திரேலிய அணியில் மிட்சல் ஸ்டார்க் அணியில் இடம் பிடித்தார். இந்திய அணியில் எந்த மாற்றமும் இல்லை
இதையடுத்து களமிறங்கிய ஆஸ்திரேலிய அணிக்கு, துவக்க வீரர்களான பின்ச் (28), ஷார்ட் (33) ஓரளவு கைகொடுத்தனர்.
இதன்பின் வந்த மேக்ஸ்வெல் (13), மெக்டெமோட்டை (0) குர்னால் பாண்டியா வெளியேற்றினார்.
அடுத்து வந்த அலெக்ஸ் கேரி (27), கிறிஸ் லின் (13) ஏமாற்றினர்.
கடைசி நேரத்தில் ஸ்டோனிஸ் ஓரளவு கைகொடுக்க, ஆஸ்திரேலிய அணி, 20 ஓவரில் 6 விக்கெட்டுக்கு 164 ரன்கள் எடுத்தது.
இதன் மூலம் இந்திய அணிக்கு 165 ரன்கள் இலக்காக நிர்ணயித்தது. இந்திய அணி சார்பில் குர்னால் பாண்டியா அதிகபட்சமாக 4 விக்கெட் கைப்பற்றினார்.
அசத்தல் துவக்கம்:
எட்டக்கூடிய இலக்கை துரத்திய இந்திய அணிக்கு தவான் (41), ரோகித் சர்மா (23) ஆகியோர் சூப்பர் துவக்கம் அளித்தனர்.
அடுத்து வந்த ராகுல் (14) ஏமாற்றினார். ரிஷ்ப் பண்ட் ‘டக்’ அவுட்டாக, இந்திய அணி தடுமாறியது.
ஒருபுறம் விக்கெட் சரிந்தாலும், மறுபுறம் நங்கூரமாக நின்ற கேப்டன் கோலி, அரைசதம் கடந்து அணியை வேகமாக வெற்றிப்பாதைக்கு அழைத்துச்சென்றார்.
இவருக்கு தினேஷ் கார்த்திக் நல்ல கம்பெனி கொடுக்க, இந்திய அணி 19.4 ஓவரில், 4 விக்கெட்டுக்கு 168 ரன்கள் எடுத்து 6 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.
கோலி (61), தினேஷ் கார்த்திக் (22) அவுட்டாகாமல் இருந்தனர்.
இதையடுத்து, 3 போட்டிகள் கொண்ட டி-20 தொடரை 1-1 என இந்திய அணி சமன் செய்தது.
இரு அணிகள் மோதும் முதல் டெஸ்ட் போட்டி வரும் டிசம்பர் 6ம் தேதி அடிலெய்டில் துவங்குகிறது.